Posts

Showing posts from September, 2017

பாவின் வேந்தன்

பாவின் வேந்தனே பைந்தமிழ் நேசனே தாவி உன்னிடம் தான்சரண் என்றுபா கூவி வந்திடும் ! கூர்சொலால் சாதியின் வாவி வற்றவே வார்த்தைகள் கோத்தவா ! காதல் காவியம் கன்னியத் திராவிடம் நீதி சொல்லிடும் நித்திலப் பாடல்கள் ஓதி உண்டிடும் ஒண்டமிழ்க் கவிதைகள் சாதி அணைத்திடுஞ் சாகர மானவா ! உன்பி றந்தநாள் உற்சாகப் பாவினால் என்க டன்தனை எழிலுற முற்றினேன் இன்னும் தாமதம் என்னவோ ? மண்ணிலே இன்னு மோர்பிறப் பெடுந்துவந் தோங்குக ! -விவேக்பாரதி 29.04.2016

நான்காரைச் சக்கரம் - வேட நாயக

Image
வேட மாமலை நாடவே வேட நாயக னாடவே வேட னாரடி பாடவே வேட பாவையு மாடவே ! கருத்து :  வேடர்கள் வாழ்கின்ற திருத்தணிகை மலையினை நீ நாடிச் சென்றால், அங்கே அழகு மயிலில், வேட நாயகனான முருகப் பெருமானின் எழில் மிகுந்த நாட்டியத்தைக் காணும் பாக்கியம் நேரலாம் ! மேலும் வேடர் குலத்து மருமகனாகிய முருகனின் திருவடிகளை அங்கே கண்டு நீ போற்றிப் பாடினால், வேடர்களில் அழகுப் பாவையான குற வள்ளியும் முருகனுடன் சேர்ந்து ஆடுகின்ற காட்சியினைக் காண நேரலம் ! -விவேக்பாரதி 29.04.2016

சக்திக் கடன்

உலகமெலாம் போற்றுகின்ற தமிழில் மின்னும்    உயர்வான இலக்கணத்தை அறிய வெண்ணி கலைத்தாக மடங்காத கார ணத்தால்    கவித்தாகம் மிகவுற்றுப் பாக்கள் யாக்க மலையொன்றைச் சுண்டெலிகள் மயிரால் கட்டி    மறுபக்கம் சாய்த்துவிட முயல்வ தைப்போல் தலையாட்டி வந்திட்டேன் சக்தி தேவீ !    தளிரென்னைக் காப்பதுநின் கடனே காண்க ! -விவேக்பாரதி 28.04.2016

பிறப்பு

உலகில் மீண்டுமிங் கோர்பிறப் புண்டெனில் உலகை யாண்டிடும் உன்னதச் சக்தியின் மலர்ப்ப தங்களில் மன்னுபூ வாயெனை நிலைபெ றுத்துவாய் நீயயத் தெய்வமே ! -விவேக்பாரதி 28.04.2016

என்னவள் கூந்தல்

என்னவள் கூந்தலிலே - நித    மேறித்தி ரிந்துற வாடிடவே இன்னுயிர்ப் பூக்களெலாம் - தனி    இச்சைகொண் டேங்கிடும் பாரினிலே பொன்மகள் பூங்கழலில் - எழில்    போதைநி லையிலி ருந்திடவே என்கவிச் சொற்களெல்லாம் - தவம்    ஏற்றிக்கி டக்குது தீயினிலே ! கண்ணிமைக் காவலிலே - சிறை    காத்துக்கி டந்திட என்னுயிரும் தெண்டனிட் டேங்குதுவே - வழி    தேடியே கண்களும் ஓடுதுவே ! பெண்ணவள் நெஞ்சத்திலே - நகைப்    பேழையைப் போலுறும் புன்னகையில் மொண்டுகு ளித்திடவே - உயிர்    மொத்தமு மேங்கித் திரியுதுவே ! -விவேக்பாரதி  28.04.2016

ஆயிரம் ஆயிரம்

ஆயிர மாயிர ஆண்டுக்கு முன்னரே    அன்பினில் நாமுமி ணைந்துவிட்டோம்    அதனாலினி பிரிவேயிலை     உயர்வோமொரு குறைவேயிலை    அத்தானை முத்தமிட் டாடடியோ ! வாயினி லேமுத்தங் கொட்டிடு கண்மணி    வாஞ்சையோ டேவந்த ணைத்துக்கொள்வாய்    வளமேதரும் எழில்காதலில்    வளைவோம்நிதம் வளர்வோமென    வார்த்தைகள் சொல்லியே பாடடியோ ! -விவேக்பாரதி 28.04.2016

குழந்தைத் தொழிலாளர்

எங்களைப் போலவே மண்ணில் - துயர்    ஏறிக்கி டப்பவ ருண்டோ - உடல் மங்கிடு மேநிலா வென்றால் - யாம்    மண்ணில்நி லாவென வாழ்வோம் - நிதம் தங்குதற் கோரிட மில்லை - பசித்    தண்டனைக் கும்முடி வில்லை - எமை இங்குபி றந்திட செய்து - மிக    இன்னல்கொ டுத்ததேன் தேவீ ! பள்ளிப்ப டிப்பினி லாசை - அதில்    பாங்குடன் தேறிட ஆசை - மதி துள்ளித்தி ரிந்திட ஆசை - வரும்    துக்கம்ம றந்திட ஆசை ! - எனில் பிள்ளையை நம்பியெம் பெற்றோர் - உயிர்ப்    பிஞ்சினைக் காத்திருக் கின்றார் - அவர் சள்ளைகள் நீக்கிட வேண்டும் - பணி    செய்திட வேண்டுமே நாங்கள் ! மேனிவ லித்திட இங்கே - யாம்    மேலான வேலைகள் செய்வோம் - மரத் தேனிக்கு முண்டடா ஓய்வு - எம்    தேகத்துக் கெங்கிலு மில்லை - அட வானுல வும்முகில் போலே - மழை    வாரிச்சொ றியுமெம் கண்கள் ! - புகழ் நானில மக்களே பாரீர் - இங்கு    நாங்களும் பிள்ளைக ளன்றோ ? எந்துயர் தீர்வது மென்றோ - புவி    எங்களுக் காவது மென்றோ ? - எழில் நந்தவ னத்தினில் நாங்கள் - மணம்    நல்கிடும் பூக்களுக் கூடே - தினம் தங்கியே வாழ்தலு மென்றோ - செழித்    தாரென வாழ்வது மென்றோ - நலம் பொங்கிடும

கவியரசு கண்ணதாசன்

முத்தையா என்னும் முதுதமிழ்ப் பாராசன் தித்திக்கும் பாடல் திரையிசையில் ! காவியமும் சத்தாய்ச் சொலும்புலமைச் சான்று ! ஏசுகா வியஞ்சொன்ன ஏற்றத்தான் ! ஞானப்பா வீசுகின்ற செந்தமிழ் விசையேகாண் ! வையகமே பேசு மிவனைப் புகழ்ந்து ! அர்த்தமுள்ள இந்துமதம் ஆகிடுமே நற்சாட்சி சுத்தமுள்ள நெஞ்சன் ! சுடர்தமிழ்ப் பாபாடி இத்தரணி ஈர்த்தா னிவன் ! -விவேக்பாரதி ! 28.04.2016

மகிழும் கண்கள்

இதழினிலே பூசுகிறாள்    இனிமைத்தமிழ்ச் சாயம் - அதில்    இருப்பதெலாம் நேயம் - எனை    இயக்கிடுமம் மாயம் - அவள்    இனியகுரல் கேட்கையிலே    இன்புறுமென் காயம் !  மதகளிற்றை ஒத்ததனம்    மல்லிகைப்பூக் கண்கள் - அதில்    மயங்கிடுவர் பெண்கள் - அவள்    மழலைமொழி விண்கள் - சுடர்    மலர்க்கொடியாய் இடையுடையாள்    மகிழ்ந்திடுமென் கண்கள் ! -விவேக்பாரதி 28.04.2016

சக்தி பரிசு

சக்திபுகழ் சாற்றுவையேல்    சாதிப்பா யெங்கும் - தீச்    சாக்கடைகள் மங்கும் - எழில்    சாகரமாய்த் தங்கும் - அவள்    சாந்தமுகம் போற்றுவையேல்    சகலவரம் பொங்கும் ! பக்தியுடன் பணிந்துநின்றால்    பயமணைத்தும் தீரும் - உடன்    பாசம்வந்து சேரும் - புகழ்ப்    பசுமையுறும் பாரும் ! - அவள்    பாதங்களில் பன்னீர்பூ    பரிசளிக்க வாரும் ! -விவேக்பாரதி 27.04.2016

வாக்களிக்கப் போவீர்

பயிருக்கு நீரை வார்த்தல்    பாட்டுக்குப் பண்ச மைத்தல் வயிற்றுக்கு முணவை உண்ணல்    வறுமைக்கோ ஈகை செய்தல் உயிருக்கோ தேகம் காத்தல்    உலகத்தில் அவசி யம்போல் உயர்வுக்கு வாக்க ளித்தல்    உன்னதந்தான் அறிதல் வேண்டும் ! தாய்மையைக் கொஞ்சல் தன்னைத்    தானென்ற உணர்வு தன்னை வாய்விட்டுப் பேசல் தன்னை    வான்சிந்தும் மழைநீர் தன்னை ஓய்வேன்னும் நேரம் தன்னை    ஒருபோதும் விடவே மாட்டோம் வாய்த்தவோர் உரிமை யாமிவ்    வாக்களித்தல் மறக்க லாமா ? காசுக்கு வாக்கை விற்றல்    கனியொன்றின் சாற்றை அற்ப மாசுக்குள் விடுதல் போலே    மாபெரும் ஈன மாகும் ! நாசத்தைத் தடுக்க ! வாழும்    நாட்டுக்குள் உண்மை ஓங்கத் தேசுடை உரிமை வாக்கைத்    தேயத்திற் களித்தல் வேண்டும் ! மேடைகள் போட்டுச் ! சொல்லின்    மேன்மைகள் பலவாய்ப் பேசி ஜாடைகள் செய்வார் தம்மின்    ஜாலங்கள் மதித்தல் வேண்டா ! ஓடைகள் போலே சேற்றில்    ஓடிடும் மீன்கள் உண்டே ! தேடித்தான் வாக்க ளிப்போம்    தேவைவாக் களிக்கும் எண்ணம் ! கூட்டணி அமைப்பார் ! நன்காய்க்    கொள்கைகள் மொழிந்து நிற்பார் ! நாட்டினை வளர்க்க வல்ல    நல்வழி அறிவோம் என்பார் ! காட்டி

உழைப்பாளி

சாலைகள் செய்தருஞ் சோலைக ளாக்கியே    சாதித்த தாருடைக்கை ? - எங்கும் ஆலைகள் தோறுமே வேலைகள் செய்திடும்    அன்புடைத் தோழரின்கை ! பூமிமு ழுவதும் பூரண மாகிடப்    புழுங்கிய தாருடைத்தோள் ? - அந்தச் சாமிம தித்திடும் எந்தொழி லாளரின்    சாவைம றந்திட்டதோள் ! வண்ணச்செ ழுமைகள் செய்திங்கு நன்னிலம்    வார்த்தது மார்மதியோ ? - தங்கள் எண்ணஞ்சி றந்திட என்றுமு ழைத்திடும்    எம்முழைப் பாளிமதி ! உண்டிடச் சோறுமு டுக்கவு டைகளும்    ஊரிற்கொ டுப்பதுமார் ? - நன்கு மண்ணைப்ப தஞ்செய்து மாபெரு மேருழும்    மனிதரு ழவரன்றோ ! கண்ணிற்கி னியவாம் கட்டிட மாமலை    காட்சிக்க மைத்ததுமார் - நல்ல வண்ணமி ழைத்ததில் வார்த்தெழில் கூட்டிடும்    வன்மைக்க லைஞரன்றோ ! இங்கேயு ழைத்திடும் வர்க்கமு மில்லையேல்    இன்னுல குண்டாமோ ? - வாழத் தங்களு ழைப்பினைத் தந்திடு வோரின்றித்    தாரணி உண்டாமோ ? என்றுமு ழைப்பவர் கையைப்பி டித்தவர்க்    கேற்றத்தைக் காட்டிடுவோம் - பின்னர் அன்னவ ரின்றியிங் கெஃதுமில் லையென    அன்புடன் சொல்லிடுவோம் ! தன்னைம றந்துநம் வாழ்வினுக் காகாவே    தானுமு ழைப்பவரை - மண்ணில் மன்னர்க ளென்றுநா

21ஆம் நூற்றாண்டுக் கவிதை

இருபத்தி ஒன்றாவது நூற்றாண் டிஃதில்    இயற்றமிழின் கவிதையினை இருவே றாகப் பிரித்துவைத் துள்ளதிந்தக் கவிஞர் வர்க்கம்    பிழையில்லா இலக்கணத்தின் கவியாம் ஒன்று ! வருகின்ற கருத்தினையே வடிவ மற்று    வனைகின்ற புதுக்கவியாம் மற்றொன் றிந்தப் பிரிவுக்குப் பழகிவிட்டேன் பிரிவை நானும்    பின்னாலே வரும்வாறு புரிந்து கொண்டேன் ! புதுக்கவிதை என்பதென்றன் காதல் தாங்கும்    புதுப்பொலிவுக் காதலிதான் மரபோ என்னை வதுவையது புரிந்துகொண்ட இல்லாள் என்பேன்    வளமான கருத்தன்றோ ? சிரித்துக் கொள்வேன் ! பொதுக்கவிதைச் செல்வத்தை இவ்வா றுன்றன்    போக்கிற்கு எண்ணுவது சரியோ வென்றால் எதுவந்தால் எனக்கென்ன எனக்கு மட்டும்    எப்போதும் காதலியென் கவிதை யென்பேன் ! மரபினிலே கவியெழுதும் பொழுதோ என்றன்    மனைவியினைக் கொஞ்சுகின்ற உணர்வு தோன்றும் ! கரத்தோடு புதுக்கவிதை படைக்கும் போழ்தோ    காதலியைக் கொஞ்சுகின்ற மயக்கம் நேரும் சிரமந்தான் இருவீடு என்றால் கூட    சிறப்பாக இருக்கிறது ! நீங்கள் கூட இருவீடு வேண்டுமெனில் வைத்துக் கொள்வீர்    இருக்கட்டும் இருவீடு கவியில் மட்டும் !! -விவேக்பாரதி 19.04.2016

துன்முகி வருடப்பிறப்பு

புத்தம் புதியதாய்ப் பூத்ததே ஆண்டும்! இத்திரு நாளில் இகமுறை மக்காள் இன்பத் துறைக !  இயங்கிடும் வாழ்வில் துன்ப மறுந்த துய்நிலை காண்க ! எல்லா வரமும் எழிலும் சூழ்க ! பொல்லா மனத்தின் பொய்மை யடக்கி காலம் போற்றிக் கடுகிடும் வேளை ஞாலத் தற்புதம் யாவையும் போற்றி இயற்கை பேணி இன்னலைத் தந்திடும் செயற்கை களைந்து ஜகமி தின்புற மற்றை வுயிர்களை மனத்திலி ருத்தி ஒற்றைத் தீங்கும் ஒருவர்க்கும் நேரா நிலையில் வாழ்ந்து நியாயம் எய்தி கலைகள் செய்து கவிதை துய்க்க ! துன்முகி யாமித் துளிரில் இன்முகத் தோடே யிருந்திடு வோமே ! -விவேக்பாரதி 14.04.2016

புன்னகைப் பூமகள்

புன்னகைப் பூமகள் பூங்குழ லிற்புது    புன்னிய காவியம் வாசிக்கி றேன் ! என்னவள் தந்திடு மின்பமெ லாமந்த    ஏடுகள் நல்குமா ? யோசிக்கி றேன் ! மின்னலை யொத்தவள் கன்னங்க ளிற்சுதி    மீட்டுமி சைகண்டு பூசிக்கி றேன் ! கன்னலி தழ்கொண்டு காயங்க ளாற்றிட    கன்னியின் பொன்னிதழ் யாசிக்கி றேன் ! முத்துச்சி ரிப்பெழில் பெற்றும கிழ்ந்திட    முன்னிலும் பின்னிலும் தத்துகி றேன் பித்தனைப் போலவள் பிஞ்சுப்ப தத்தினை    பின்னிப்பி டித்துநான் கத்துகி றேன் ! எத்தனை நல்லெழில் ஏந்துகின் றாளவள்    எத்தனை யின்பங்கள் காட்டுகின் றாள் வித்தக னென்னையும் வீழ்த்துகின் றாளவள்    விந்தைகள் நெஞ்சினில் கூட்டுகின்றாள் ! வண்ணக்க ளஞ்சிய வார்ப்பனை யேயந்த    வஞ்சிக ழுத்தினிற் சூடுகின் றாள் ! எண்ணத்தி லேநின்று பாடுகின் றாளவள்    என்னுடன் சேர்ந்துற வாடுகின் றாள் ! விண்ணிற்றி ரிந்திடும் மீனினைப் போலொளி    வீசிடு மன்னவள் கண்கள டீ ! வெண்ணில வுங்கர்வங் கொண்டிடு மேயவள்    வெட்கத்திற் கேங்குவர் பெண்கள டீ ! -விவேக்பாரதி 04.04.2016

வள்ளியும் முருகனும்

கொள்ளையி ராவினிலே - இதழ்க்    கொஞ்சுஞ்சு வைமது தான்குடித்து வள்ளிமு ருகனிடம் - ஒரு    வரந்தர வேண்டுது மென்றுரைத்தாள் ! கள்ளச்சி ரிப்பழகன் - அவள்    காதின ருகினில் சென்றுவிட்டு உள்ளத்தே உள்ளதெலாம் - மிக    உன்னதத் தோடிங்கு ரைத்திடென்றான் ! வஞ்சியு மங்குடனே - அவ்    வரந்தனைத் தந்திடு முன்பெனக்குக் கொஞ்சமிக் கேள்விக்குத்தான் - விடை    கொடுத்திட வேண்டுது மென்றுரைத்தாள் கொஞ்சுந்த மிழ்த்தலைவன் - அதைக்    கொடுக்கிறே னென்றங்கு சம்மதிக்கப் பிஞ்சுப்பி றைநுதலாள் - மனம்    பித்தைய டைவது மெப்போதென்றாள் ? வேலாயு தக்கடவுள் - இதை    வேகமாய்க் கேட்டதும் நகைத்துவிட்டான் ! பாலால்ம யங்குவதோ - சிறு    பசுவதன் கன்றிற்கு பித்தென்குவார் நூலால்ம யங்குவதோ - மதி    நுண்ணிய வர்கொளும் பித்தென்குவார் ! கோலால்ம யங்குவதோ - முடிக்    கோமகன் கொண்டிடும் பித்தென்குவார் ! மேதினி மேலொருவன் - மதி    மேன்மையல் லாதுபி றபொருள்மேல் காதலைக் கொண்டுவிட்டால் - அது    காட்டிடும் பித்தெனு மந்நிலையை ! நூதனக் காவியமே - உன்    நூலிடை மேலொரு காதலடி ஆதலால் நானுமிங்கே - வனத்    தாடிடும் பித்தனே யென்றுரைத்தான்

மலருக்கு

மலரே ! இன்னும் என்ன மௌனம் ? என்னுடன் கொஞ்சம் பேசு ! எத்தனை நட்கள் இப்படியே இருக்கப் போகின்றாய் ? காற்றினில் மணமென்னும் கவிதையை யாக்கின்ற காரிகை நீ ! துயிலெழு துடித்தெழு ! உன்றன் தூக்கம் கலைக்க நானொன்றும் திருப்பள்ளி எழுச்சி பாடவில்லை ! உன்றன் துக்கம் கலைக்கத் திருப்புமுனை எழுச்சி பாடுகின்றேன் ! இந்த உலகத்தில் உன்னைப் போல ஒரு பிறப்பைக் காண்பதும் அரிது ! பூண்பதும் அரிது ! செடிக் குடும்பத்தில் நீயொரு பருவப் பெண்ணாக உருவெடுக்கின்றாய் ! வசந்த காலங்களில் பூப்பெய்தி தினமும் மொட்டாய் மூடி மூடி முகிழ்கின்றாய் ! அப்படி மொட்டாகி முகிழும் உன்னை மட்டோடு காண்பது பரவசமானது ! உன் குடும்பத்து உற்சாகப் பெண்ணாக உருவெடுக்கும் உனக்குக் கல்யானம் செய்து கொடுக்கத் தவமாய்த் தவம் கிடக்கிறாள் உன் தாயான வேர் ! கூடப் பிறந்த அண்ணன்களான இலைகளோ... சதா உணவு சமைக்கும் உற்சவத்திலேயே சோர்ந்து விடுகின்றனர் ! நீயோ ! புதுப்பொலிவு எய்தி நாளும் புன்னகைத்த வண்ணமே இருக்கிறாய் ! புதிரறியாதவளாய் ! வசந்த அழைப்பே ! உனக்கு மட்டும் என்னே ஒரு மனது ? உன்னைக் கவர வ

அம்மானை

கோட்டைக் கணபதியைக் கொண்ட திருச்சியது வாட்டங் கொடுக்கும் வெயில்நகரே யம்மானை வாட்டங் கொடுக்கும் வெயில்நகரே யாமாகில் கோட்டைத்தே வர்க்குக் கொளுத்தாதோ யம்மானை ?    ஊட்டக் குளுமைக்கோ காவிரியுண் டம்மானை ! மீனாளு மாள்கின்ற மீன்கொடி மாமதுரை தானாகும் தூங்காத் தனிநகரா யம்மானை தானாகும் தூங்காத் தனிநகரா யாமாகில் வானோரைப் போல்மக்கள் வாழ்வாரோ அம்மானை ?    வாலை யரசின்கீழ் வானோரே யம்மானை ! -விவேக்பாரதி 25.03.2016

முத்தத் தருணம்

என்னவள் மேனியைப் பற்றி - அவள்    ஏந்தும் உதட்டினி்ல் என்னிதழ் ஒற்றி   கன்னல் உதட்டினில் மேலே - புதுக்    காவியம் ஆக்கினேன் பாவலன் போலே ! அன்னவள் நாணமும் கொண்டாள் - உடன்    அங்கே உதட்டைக் கண்ணாடியில் கண்டாள் என்னடி என்றதும் பொன்னாள் ! - இதழ்    ஏறிய பாவைப் படித்ததாய்ச் சொன்னாள் ! -விவேக்பாரதி ! 23.03.2016

குடியரசு தின வாழ்த்து

இந்தியா உன்றனுக்கென் இன்னாளின் வாழ்த்துக்கள் தந்திடவே எண்ணித் தமிழ்சொன்னேன் - செந்தேன் கவிகேட்டுக் கண்ணே களிப்பாய் ! பின்பு புவிபார்க்க நன்றாய் மலர் ! குடியரசு நாளில் குணமுயர ! நாட்டின் மிடிமைகள் நீங்கி மிளிர - வடிவுடனே நல்வாழ்த் துரைக்கின்றேன் நாடே உனக்குள்ளே கொல்வாய் பிழைகள் கொதித்து ! வந்த செயல்மறந்து வாழ்வோரின் வாழ்வுதனை நொந்து கடிந்து நூதனமாய் - இந்தியா ! பாரெல்லாம் நற்கீர்த்தி பெற்றிடவே நீயுழைப்பாய் ஊரெல்லாம் ஒன்றென ஓர்ந்து ! -விவேக்பாரதி ! 26.01.2016

காதல் பிழை - கஜல் கவிதை

மௌனத்தின் ராகத்தில் பண்பாடிச் சென்றோம் மெதுவாக இதமாகக் கலந்தாடி நின்றோம் ! கானத்தின் மத்தியிலே கார்மேக இடியாய்க் காதலெனும் பிரிவினிலே விலகி நாம் சென்றோம் ! வாவென்று நீசொல்ல விழியேறி வந்தேன் வளமான நற்காதல் கனவாகத் தந்தேன் போவென்னும் சொல்லாலே நீ மாய்த்த நேரம் போக்கற்றக் காற்றாகத் திசைமாறி நொந்தேன் ! வலியோடு செல்கிறது என் வாழ்வின் மிச்சம் வழிமாறிப் போயாச்சே இனியென்ன அச்சம் ? ஒலியோடு சேராத மெதுவான தொணியில் அழுதபடி செல்கிறது வாழ்நாளின் எச்சம் ! இடையோடு முத்தமிட இயலாத நேரம் இமையோரம் சிரப்பூஞ்சிக் கார்காலம் நேரும் நடைபோடத் தெரியாத காற்றுக்குக் கூட நயமாகப் புரிகிறது என் கண்ணின் ஈரம் ! நீயற்ற என் நெஞ்சம் நடமாடும் சூலை நீர் கூட இல்லாச் சகாராவின் சாலை பூவற்றுப் போனாலே பூமிக்குள் இங்கே புன்னகை தான் செய்திடுமோ பூப்பூத்த சோலை ? காட்சிகளே பிழையானால் கண்ணெங்கே போகக் காதலிங்கு பிழையாக ! மனம் வலியில் நோகச் சாட்சிக்கோ யாருண்டு ? என்காதல் சொல்லச் சாதலினைக் கூப்பிட்டேன் உயர் சாட்சி யாக ! பிரிவுதனைத் தீர்த்திடவே மருந்தாக வாராய் பிரியத்தான் வேண்டுமெனில் நஞ்சை நீ தாராய் !

பொறியின்மை பழியன்று

எழுந்து வாடா மானிடனே ! - உன்    எழுச்சி காட்டு வானிடமே ! விழுந்திட நீயும் விதையல்ல ! - பெரும்    விருட்சம் நீதான் சிதையல்ல ! காலை யிழந்தால் கையுண்டு - அட    கண்ணை இழந்தால் காதுண்டு தோலை யிழந்தால் எலும்புண்டு - வா !    தோல்வி யிழப்போம் செயமுண்டு ! நம்பிக்கை என்னும் கையிருந்தால் - ஒரு    நசையறு மதியுடன் மெய்யிருந்தால் அம்புவி கூடஉன் கையோடு - மிக    அழகாய்ச் சுழலும் ! போராடு ! வாழ்ந்திடத் தானே வாழ்க்கையடா ! - அதில்    வந்திடும் துன்பம் வேட்கையடா ! தாழ்ந்திடத் தானா நீபிறந்தாய்? - பின்    தலையை ஏன்தான் குனிகின்றாய் ? பொறியில்லை என்றால் கவலையென்ன ? - வெறும்    போட்டி மிகுந்தஇவ் வுலகினிலே நெறியது கொண்டே நெஞ்சுயர்த்து ! - உனை    நெரித்திடும் தீயை எரித்துவிடு ! தளரா முயற்சி அதுவிருந்தால் - உடன்    தன்னம் பிக்கை மதுவிருந்தால் வளரா பொறியால் செய்யுவதை - மன    வன்மையி னாலே செய்திடலாம் ! பொறியின்மை யார்க்கும் பழியன்று - ஒரு    போக்கில் லாமை பெரும்பழியாம் ! வறுமை நிலையொரு பிழையன்று - மன    வலிமையி லாமை பிழையாமே ! -விவேக்பாரதி 22.01.2016

பொங்கல் தினம்

ஆடியினைப் பார்த்தேயாம் விதைவி தைத்தோம்    அன்போடும் பண்போடும் பிள்ளை போலே கூடிவந்த நெல்மணிகள் யாவுங் காத்தோம்    குடும்பம்போல் யாமானோம் வளர்ந்த நெல்லோ வாடியயெம் பசிதீர்க்க வாய்த்த சேயாம்    வந்ததொரு வாரீசாம் ! வளர்த்த பெண்ணைச் சூடித்தான் கொடுத்திடவே தைமா தத்தில்    சூக்குமமாய்ப் பொங்கலிட்டோம் வாங்க மக்கா ! செங்கரும்பு முறைமாமன் இருவர் சூழ்ந்து    செழுமைமிகு மஞ்சளினால் பரிசம் போட்டு மங்கையென நாணமுடன் வளைந்தி ருந்த    மகளுக்குச் சடங்கிட்டு மகிழ்ச்சி யோடு பொங்கிவரும் புதுப்பாவை நெல்ம ணிக்கு    போக்கிடமும் வேறுளதென் றுணரச் செய்தே அங்கவளை யாம்மெச்சிக் கொஞ்சி யேதான்    அறிவுரைகள் சொல்லிநின்றோம் அவளும் கேட்டாள் ! சின்னதொரு நாற்றெனவே உன்னை நட்டோம்    சீறுகின்ற வேங்கையென அந்த நேரம் கன்னலேநீ யாருக்கும் வளைந்தி டாது    கருத்தைப்போல் ஆடிவந்தாய் அசைந்து வந்தாய் ! பின்பொருநாள் திடீரெனநீ வளர்ந்து விட்டாய்    பிறைபோலே குணிந்துவிட்டாய் அதனால் பெண்ணே உன்னையிங்கு வளர்த்தவனாய் உனக்குக் கொஞ்சம்    உரைகளைநான் மொழிகின்றேன் நன்றாய்க் கேட்பாய் ! இதுகாறும் நீயிருந்த வயலோ இங்கே    இனிமை

புத்தாண்டு வாழ்த்து 2016

இரண்டாயி ரத்துப் பதினைந்தா மாண்டும்    இனிதாகக் கொடுத்த தெல்லாம் திரளாக நம்மில் திணவோடு நெஞ்சில்    திமிராட்டம் போடும் நேரம் வரமாக இங்கே வருகின்றாள் கன்னி    வளமான புத்தான் டென்றே தரமான எண்ணம் தலைமீது கொள்வோம்    தருவாளே யாவும் நன்றே ! சிலபேர்க்கும் இந்தப் புத்தாண்டி னிக்கும்    சிலபேர்க்கோ இனிமை குன்றும் சிலபேர்க்கு நல்ல விடியல்கள் நேரும்    சிலபேர்க்கோ இரவு சூழும் சிலபேர்க்கு தெய்வம் சிறந்தவை நல்கும்    சிலபேரின் மடமை கொல்லும் உலகத்தில் உண்மை அதுகொண்டால் வாழும்    ஒருநாளும் புத்தான் டன்றோ ! -விவேக்பாரதி 31.12.2015

நல்லதோர் காதல்

காத லாந்தவம் காசினி மேல்புதுக்    கன்னி மார்களும் ஆக்கிடும் யாகமாம் சாத லென்னுமோர் எல்லையைத் தாண்டியும்    சாத னைபல செய்திட ஏற்றதாய் மோதல் தாண்டியும் மோட்சமுந் தேடியும்    மோன மாம்நிலை யஃதிலி னித்திட நாத மோங்கிட நானிலம் போற்றிட    நாமும் செய்குவம் நல்லதோர் காதலே ! -விவேக்பாரதி 29.12.2015

கண்ணனும் கர்த்தரும்

மார்கழியில் மின்னியதால் மண்ணில் மனிதரைச் சீர்த்தமார்க் கத்தில் செலுத்தியதால் - கூர்மதியும் கொண்டதனால் கால்நடையின் கூட்டமதை மேய்த்ததனால் கண்ணனும் கர்த்தரும் ஒன்று ! -விவேக்பாரதி 25.12.2015  

பேதைகள் மாயாரோ ??

கண்ணே ! கனியமுதே ! கற்கண்டே ! என்றன்று பெண்ணைப் புகழ்ந்தார் பெருந்தமிழ்ப் பாவலர்கள் ! மண்ணினில் இன்றோ மதிகெட்டுப் புத்தியின்றிப் பெண்ணை இழிவுசெயும் பிற்போக்குப் பாட்டெழுதிப் பண்ணை அமைக்கின்றார் பாழ்கயவர் ! ஐயகோ ! உண்மை உணர்வின்றி உள்ளத் துணிவின்றி எண்ணத்தி னாலும் எடுக்கும் செயலாலும் பெண்ணை மிதிக்கின்ற பேதைகள்தாம் மாயாரோ? -விவேக்பாரதி 21.12.2015

பாரதி பிறந்தான்

பாரதி வந்துதித்தான் - இந்தப்    பாரிடை துன்பங்கள் மாய்ந்ததம்மா ! யாரவர் இங்குளரோ - இந்த    யாப்புக் கவிஞனை மிஞ்சிடவே ! நாரதர் கானமென - நல்ல    நற்றமிழ் தூவிடும் வானமெனச் சீருடன் வந்தவன்தான் - இந்தச்    சித்திர பானுவி லுதித்தவன்காண் ! கன்னங் கரியதுவாய் - நின்ற    காரிருள் வானத் திடலினிலே இன்னல் களைவதுவாய் - அந்த    இந்துவை ஒத்த ஒளிர்மதியாய் முன்னம் உதித்தவன்காண் - நல்ல    முத்தமிழ்க் கவிதையின் நாயகனாம் சின்ன வயதுமுதல் - பாக்கள்    சிந்திடும் வித்தகன் பாரதிகாண் ! (பாரதி..) சக்திக் கொருபுலவன் - பொங்கும்    சாகர மொத்த கவிவளவன் ! பக்திக் கொருகவிஞன் - இந்தப்    பாரினுக் கேற்ற தமிழ்மறவன் முக்கனி யொத்ததுவாய் - இன்பம்    முழுவது மள்ளிக் கொடுப்பதுவாய் மிக்கக் கவிசொலுவான் - சோதி    மின்னிடும் மாகவி பாரதியே ! (பாரதி..) -விவேக்பாரதி 11.12.2015

வெள்ளத்து உழலுது சென்னை

வெள்ளத் துழலுது சென்னை - இந்த    வேதனை கண்டும் இரங்காயோ ! அன்னை ! உள்ளத்தில் கோபமும் உண்டோ - என்ன    உள்ளதென் றாலும் இயம்பிடு தேவி ! தூசுக்கு நிலந்தன்னை ஆக்கி - நல்ல    தூய்மைதனை இந்த மண்விட்டுப் போக்கி மாசுக்கு பூமியை விற்று - என்றும்    மாண்டிட லாக துன்பங்கள் பெற்றுக் காசுக்கு அலைவதைக் கண்டு - நீயும்    காய்ந்து சினங்கொண்டு விட்டாயோ தேவி ! பேசிடு பேசிடு தேவி - இந்தப்    பேதைகள் உன்மடிப் பிள்ளைகள் அன்றோ ? (வெள்ளத்... ) உள்ளத்தி லேயொன்றை வைத்து - இங்கு    ஊருக்கு வேறொன்று பொய்யாய் மொழிந்து கள்ளத்த னம்மிகச் செய்து - வாழும்    கயவர்கள் பூமியில் உள்ளனர் என்று வெள்ளத்தை இங்கே அனுப்பி - கெட்ட    வேடங்கள் சாயங்கள் யாவையும் மாய கள்ளொத்த புன்னைகை யாளே - செய்த    காரிய மோயிது கூறிடு தாயே ! (வெள்ளத்...) சின்னஞ் சிறியவர் வந்து - உன்றன்    சீரிய மென்மலர்ப் பாதங்கள் பற்றிக் கன்னல் மொழியித ழாலே - பள்ளிக்    கஷ்டங்கள் கூறவே வெள்ளமும் தந்து அன்னவர் மகிழ்துமி ருக்க - அன்னை    அன்புப் பரிசெனக் கொடுத்துவிட் டாயோ சென்னையைக் நீ!கொஞ்சும் நோக்கு - மக்கள்    செத்து மடிந்திடும் இன்னல்

காகிதக் கப்பல்கள்

குடங்குடமாய் இருந்தும் குடிக்க முடியவில்லை குவியும் மழைநீர் ! * மழைக்கால மீட்பு விடுமுறை கொண்டாடும் குழந்தைகளின் காகிதக் கப்பல்கள் ! * தனிமை நிரப்பிய இடத்தை நிரப்பியது தண்ணீர் தண்டவாளங்களுக்கு இடையில் ! * அடித்துச் செல்லும் வெள்ளத்தின் அழகாய் அமைந்தது அமைதியான சுழல் ! (சென்னையில் பெருமழை வந்தது கண்டு எழுதியவை) -விவேக்பாரதி 02.12.2015

சென்னை மழை

தண்ணீருக் காக தவித்திருந்த சென்னையைக் கண்ணாலே தேடுகிறேன் காணவில்லை ! - தண்ணீரில் மூழ்கித் திழைக்கும் முதுநகரம் காணுகிறேன் ! தாழ்விடத்தில் தண்ணீர்த் திரள் ! வருண பகவானே வாவேன்றோர் எல்லாம் தருவதுவும் போதுமெனச் சொல்லி - ஒருமனுவை வைக்கின்ற காலந்தான் வந்ததுவே ! தண்ணீரும் மொய்க்கின்ற சென்னை முகை ! சாலை வெளியெங்கும் சாகரமே வந்ததுபோல் கோலம் தெரிகிறதே கோரமடா ! - மாலைபோல் மத்தியான வேளையதும் மாறுதுவே ! சென்னைமழை தத்திவர உண்டோ தடை ? கொளுத்தும் வெயில்கக்கும் கொண்டல்வான் சற்றே வெளுத்துக் கருநிறம் வேண்டித் - திளைத்துவிட ! கார்காலம் கொண்ட கடும்புயல் காற்றுக்குக் போர்காலத் திட்டம் பொது ! (சென்னையில் பெருமழை வந்தது கண்டு எழுதியவை) -விவேக்பாரதி 02.12.2015

வைதார்

வைதாரை வையாதே வையத்துள் கைதேர்ந்தோர் வைதார்தான் வைநெஞ்சில் ! வைத்திதையே ! - வைதார்பால் வைமதிப்பை வைதாரே வைதுவினைக் *கையுரைப்பார் வைமதியில் வைதாரை வை ! *கை = ஒழுக்கம் -விவேக்பாரதி 26.11.2015

நாணுடன்

கண்ணில் கவிதை மொழிந்தேநிதம் காட்சி யோடு பண்ணில் கலந்த சுதிபோலவே சேர்ந்த நின்னை எண்ண முழுது மெழிலாகவே வைத்து நின்றேன் ! பெண்மை மொழியென் றமைநாணுடன் தள்ளி டாதே ! -விவேக்பாரதி 22.11.2015

ஒரு பிடி பழமொன்றியூ

இளமையில் கள் ! சிச்சீ ! இது நாட்டு நடப்பு ! இளமையில் கல் ! 'ஆடிப்பட்டம் தேடி விதை' எதைத் தேட ? வயலையா? உழவனையா? 'கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை' இன்றைய அரசியல் பதவி ! திரைகடல் ஓடியும் திரவியம்........மன்னிக்க திரவத்தைத் தேடு ! 'வெறும் பேச்சு பேசேல்' இன்றைய வாட்சப் ஸ்டேட்டஸ் !! -விவேக்பாரதி 15.11.2015

சரமழை வித்தகம்

அழகே அழகாய்த் தொலைந்தேன் மலைத்தேன் அழகாய்த் தொலைவில் உயிர்த்தேன் - மெழுகாய்த் தொலைந்தேன் உயிர்த்தேன் இடையில் தொடர்த்து மலைத்தேன் மெழுகாய்த் தொடர்ந்து ! சரமழை வித்தகம் :  சரமழை என்பது வெண்பாவைச் சுவைபட எழுதும் யுக்திகளுள் ஒன்று. நாமெல்லோரும் சிவாஜி வாயிலே ஜிலேபி என்ற வாக்கியத்தைக் கேள்வி பட்டிருப்போம். முழுப்பாடலையும் இதுபோல் எழுதுவதே. -விவேக்பாரதி 07.11.2015

இரவென்று

சித்திரை மாதம் இளவெயில் நேரம்    சிவந்திடும் வான்விளிம் போரம் முத்துநி கர்த்தாள் மொய்குழல் கொண்டாள்    முழுமதி முகமதைக் காட்ட நித்திரை தோன்றும் இரவென எண்ணி    நீலவான் கருமையுற் றிங்கே மொத்தவூர் தூங்க முழித்ததோ எங்கள்    மொட்டனை நால்விழி தானே ! -விவேக்பாரதி 26.10.2015

வானம்

புத்திக்கும் சக்திக்கும் எட்டாத தூரத்தின்    பூங்கா வானம் ! எத்திக்கும் விரிந்திருக்கும் பூஞ்சோலை ! சூரியனும்    ஏறி நிற்க மத்திக்கு மஞ்சளுறும் ! மாலையிலே சிவப்பாகும் !    மறைந்த பின்போ முத்துக்கள் பூத்திருக்கும் இருள்வானம் ! அதன்சோதி    முழுமை வெள்ளி ! மேகங்கள் மிதக்கின்ற நீலநிறப் பெருங்கடலாம் !     மேளம் கொட்டி ராகங்கள் இசைக்கின்ற பூபாளம் எல்லாமே    ராவின் வண்ணப் போகங்கள் கொண்டிருக்கும் மழைமேகம் காட்டுகின்ற    பொம்ம லாட்டம் ! மோகங்கள் கூட்டுகின்ற வானவில்லும் கண்ணுக்கு    மோட்ச மாகும் ! எல்லையதும் இல்லாத எழில்வண்ணப் பாய்விரிப்பை !    என்றும் வானை வல்விரைந்து படமெடுக்கும் புகைப்படக் கருவியது    வாளாம் மின்னல் ! சொல்லுபொருள் யாவிலுமே உயர்ந்ததுகாண் வானந்தான்    சொர்க்க வாசல் ! கொல்லு(ம்)விதம் அதில்புகையைக் கலந்துவிட்டு  தீமைதனைக்    கொள்ளல் வேண்டா ! -விவேக்பாரதி 20.10.2015

நற்கொலுசு

நண்பகல் போழ்திலே நல்லொளி வீசிடும் மன்பெருஞ் சூரியன் மாயிருள் வேளையில் வந்திடும் வெண்ணிலா வென்னுந்தன் மனைவிக்குத் தந்திடும் ஒளியெனும் தனியொரு அணிகலன் ! எக்கால மானாலும் தீரா தொளிர்விடும் இக்காதல் தன்னையு மொத்ததே நானுனக்குச் சூட்டிடும் நற்கொலு சிதுவே ! -விவேக்பாரதி 26.09.2015

A proud false friend

Often I think of the World The link between the things in it With the mountains and with the mines of gold, With the ocean and the deepest pit  The friendship with the world we see Is always false and nothing else The false friendship which always be Is from the face and not from pulse ! The moon and stars are the friends of sky The moon is a false friend ! Oh ! stars they too ! No moon - vanishes from the sky New moon comes which too is not true ! Waves and tides may touch the shore Without a pause, evergreen flows Though they touch shore more and more The false friendship it always shows ! Even the soul and body are false False friendship is today's trend Our world itself false where truth often falls So, proud to be a great false friend !  -VivekBharathi  19.10.2015

உண்மை சொல்லினால்.....

உண்மை சொல்லினால் உரக்கச் சொல்லினால் மண்ணுல கத்திலே மாபெரும் சக்தியும் அண்டி வாருமே அகிம்சை வெல்லுமே ! நன்மை செய்திட நாணுவார் வந்திடும் பின்விளை வெண்ணிப் பிதற்றுவார் உண்மையில் அன்பு வெல்லுமே அகிம்சை வெல்லுமே ! எத்தனை காலம் ஏமாற்றம் நேருமோ புத்துயிர் தந்துநம் பூமி காத்திட அத்தனை சக்திதந் தகிம்சை வெல்லுமே ! -விவேக்பாரதி 02.10.2015

சக்தி தாயே

சக்திபதம் போற்றிடுவாய் நீயே - நமைச்    சாந்தமுடன் காத்திடுவாள் தாயே ! மக்கள்மனம் மிக்கும்பிழைத் தீயே - அவள்    மலர்பதத்தில் தணியும்காண் பாயே ! பக்கபலம் ஆகுவதும் தாயே - வரும்    பணிகளையும் உவந்தேஏற் பாயே பக்தியினால் கனியாகும் காயே ! - வரும்    பயமனைத்துந் தீர்ந்திடக்காண் பாயே ! -விவேக்பாரதி 25.09.2015

அலர்ந்த காட்சி

தேகந் தழுவுந் தென்றலிற் பூமணம் மோகங் கிழப்பிட ! மொய்த்திடும் வண்டினம் பூவைச் சுற்றிடப் , பூந்தேன் பருகிட நாவை அசைத்து நகர்ந்திடுங் காலை வண்டினம் வீசிடும் வளயிறக் கையில் அண்டிய தூசும் அழகாய்க் காற்றிற் கலப்ப தொப்பவே கன்னியே நின்விழி மலர்ந்தென தின்விழி யோடு அன்றொரு நாள்சேர்ந் தலர்ந்த காட்சியே !   -விவேக்பாரதி 24.09.2015

முதல் கவிதை

பெண்ணுக்குத் தலைச்சம் பிள்ளை    பேதைக்குப் பேசும் பேச்சு மண்ணுக்கு முதல்வி ளைச்சல்    மனத்துக்குக் காதல் பாய்ச்சல் புண்ணுக்கும் உடன்ம ருந்து    பூனைக்குப் பால்வி ருந்து எண்ணுக்குச் சைபர் ஒன்றென்    றெல்லாமே முதலாம் கவிதை ! பள்ளியிலே புகழும் ஆசான்    பளிங்குரைகள் முதலாம் கவிதை துள்ளுகின்ற பருவம் ஈனும்    துணிச்சலது முதலாம் கவிதை கொள்ளைஎழில் கூடும் வயதில்    கொஞ்சுகின்ற காதல் வந்துக் கள்ளமுதம் ஊற்றப் பெண்ணின்    கடைப்பார்வை முதலாம் கவிதை ! கல்யாண மான வர்க்குக்    கட்டிலின்பம் முதலாம் கவிதை வில்லாளன் ஆரம் பத்தில்    வீசுகணை முதலாம் கவிதை நில்லாத வாறு நித்தம்    நிலையாக ஓடும் வாழ்க்கை சொல்கின்ற அனுப வங்கள்    சொலிக்கின்ற முதலாம் கவிதை சிலகவிதை விகட மாகும்     சிலகவிதை மதுர மாகும் சிலகவிதை இரங்கல் பாவாய்    சிடுசிடுத்து மனதில் வேகும் பலகவிதை இருந்த போதும்    படைக்கின்ற இறைவன் ஈனும் நலமொன்றே எந்த நாளும்    நமதுமுதற் கவிதை யாமே ! -விவேக்பாரதி 18.09.2015

தேசத்தைக் காப்பவள் மாரி

Image
எங்கும் எதிலும் மற்றெல்லா விடத்திலும்     சக்தியைக் காணுகிறேன் - அதனால்      முக்தியைப் பூணுகிறேன்! வானின்  மங்குலிலே மழைச்சாரலிலே யவள்     மாநடம் செய்கின்றாள் - நல்ல     மானிடம் செய்கின்றாள்!  பச்சை நிறங்கொண்ட வேப்பிலையில், அவள்     உருவம் காணுகிறேன் - இளகிடும்      கருவம் காணுகிறேன்! என(து)  உச்சந் தலையினைத் தீண்டிடுங் காற்றெனச்    சக்தியவள் விரலும் - கொதிடச்     பக்திமிகத் திரளும்!  நெஞ்சுக்குள்ளே அவள் நேரிய சிந்தனை     தன்னையும் ஆற்றுகிறாள் - அதுகொண்டு     என்னையும் ஏற்றுகிறாள்! பகை  அஞ்சி நடுங்கிட அன்னை எனக்குள்ளே     செந்தமிழ் வீசுகிறாள்! - கவிதையில்      என்னுடன் பேசுகிறாள்!  மொத்த உலகமும் முக்தி அடைந்திட     மோட்சத்தைத் தாவென்றேன் - அருள்மழை     வீசிட வாவென்றேன் - இந்தப்  பித்தனின் விண்ணப்பம் ஏற்றுப் புவியினில்     பாதம் பதித்திடுவாள், - உடன்வரும்     சேதம் மிதித்திடுவாள்!  தேசத்தைக் காப்பவள் மாரி என்னும்விதி     தேருக நெஞ்சகமே - இனியொரு     போரில்லை உன்னிடமே! சக்தி  வாசக் குழல்தொடும் பூவினைப் போலொரு     வாழ்க்கை கிடைக்கணுமே - அதுவரை     வாக்கு தொடர்ந்திடுமே!!  -விவேக்பாரதி 17.

விநாயகப் பஞ்சகம்

முதல்வனை வேத முணர்ந்தவனைச் சக்தி புதல்வனை வாழ்த்திடு பூவே - பதந்தரும் தேவனை ஞானத்தின் தேக்கினை யாம்தொழ மேவி யவன்பதம் மெச்சு ! மெச்சினள் ஔவையும் மேலென் றவன்பதம் நச்செனப் பற்றினால் நலம்வருமே - பச்சிளம் பூவே விநாயகன் பூங்கழலைத் தாந்தழுவி நீவேண்டு விண்ணோர் நிலை ! நிலையென வேதம் நிறுத்தினான் பாதம் நிலையெனப் போற்றிடு நீயும் - மலைமீது வீற்றிருக்கை செய்கின்ற வீரனவன் தாள்சேர்ந்தே ஏற்றிடுவை பூவே எழில் ! எழிலன் தமையன் எவர்க்கும் கருணைப் பொழிலை வழங்கிடும் போகன் - கழலிணையும் சென்றே எழிலைநீ சேர்த்திடுவை பூமலரே நின்றவன் பாதம் நிறை ! நிறைந்த ஒளிப்பொருளை நீங்காதெப் போதும் மறையைப் பயில்வான் மலர்த்தாள் - நிறைப்பாய் ! பழுதற்ற நாயகனெம் பஞ்சகத்தைக் காப்பான் முழுதிற்கும் அன்னோன் முதல் ! -விவேக்பாரதி 17.09.2015

அப்பா

அப்பா ! அன்பரின் மன்னா!வா இப்பா ரின்புறச் செய்வாய்!வா தப்பா தென்கவிப் பண்ணேற்று இப்போ தெங்களை முன்னேற்று ! -விவேக்பாரதி 17.09.2015

எழில் எங்கள் காவிரியே

ஆற்றங் கரையினிலே ஆர்பரித்து நீர்பாய காற்றுங் கவின்முகிலை கண்டு நகர்த்திவிட ஊற்றுஞ் சுரக்குமிடம் உற்சாகம் ! நீரலைகள் நாற்றை அசைப்பதுவும் நாற்புறமும் ஆனந்தம் ! ஆற்றில் குளித்துவிட ஆழத்தை நானறிந் தேற்ற விசையோடு ஏறிநான் குத்திக்கும்போழ் தாற்றல் மிகவோடு தன்னுடைப் பொற்கரத்தால் ஏற்றாள் எனையும் எழிலெங்கள் காவிரியே ! பாய்ச்சல் மிகவுண்டு பாடுங் குயினத்தின் கூச்சல் மிகவுண்டு கூட்டம் மிகவுண்டு பூச்செடி தந்திடும் பூரிப்பும் அங்கதிகம் கீச்சுக் கிளிவண்டும் கின்னரமும் அங்கதிகம் நீச்சல் அறியாதேன் நீர்பாயும் வாய்க்காலின் மேய்ச்சல் நிலம்தொட்டு மேன்மைச் சுகமெய்தப் பாய்ச்சல் புரிந்தேனே ! பாழ்நீரில் மீன்திட்டும் ஏச்சுந்தான் கேட்கும் எழிலெங்கள் காவிரியே!! -விவேக்பாரதி 13.09.2015

பறந்திடுவாய் கிளியே

பறந்திடு வாயென் கிளியே ! அடைந்த    பழங்கூண்டு மிங்கே மறைந்ததடி திறந்தது வானம் கிளியே ! வெளியில்    திசைகளு மெட்டாய் விரிந்ததடி ! பருந்துகள் வந்து உனைப்பிடிக்கு மென்ற    பயத்தினில் கூண்டையும் கட்டிவைத்தேன் ! வருந்திடுவாய் நீயுந் துயர்படு வாயென்று    வாசலி லஃதையுந் தொங்கவிட்டேன் ! அருந்திடத் தேனும் அமுதுக் கனிகளும்    அள்ளியள்ளித் தந்து உனைவளர்த்தேன் திருந்திவிட்டேன் உன்னைத் திறந்துவிட்டேன் ! கூண்டும்    திறந்ததடி வானில் பறந்திடடி ! பச்சைக் கிளியே ! பவளமே ! உன்மேலே    பாசத்திலே கூண்டை அமைத்துவைத்தேன் ! அச்சப்பட் டேனுன்னை யாரேனும் வந்து    அடித்திடு வாரென்று கூண்டிலிட்டேன் உச்சியைப் பார்த்து உயர்துநீ சென்றிட    உண்மையில் நான்தடை யென்றுரைத்தாய் இச்சம யங்கூண்டு நீங்கியதே ! அந்த    இமயத்தை நோக்கிப் பறந்திடடி ! கூண்டை யமைத்தவன் நானென்ப தாலென்மேல்    கோபங்கொண் டாயோ அடிக்கிளியே ! ஆண்டுகள் நானும் அடைத்துவைத் தேனென்று    ஆத்திரம் வந்தது வோ?கிளியே ! கூண்டினைப் போட்டது உன்னை யடைத்துக்    கொடுமைகள் செய்திடும் நோக்கிலல்ல தாண்டிய தேநீ யடைபட்ட காலமும்    த

சக்தி பதமே சரண்

முக்தி பெறவே முனைந்தால் சிவன்பாகச் சக்தி பெயரைச் செபித்திடுவாய் - பக்தனே ! சக்தி பதமே சரண் ! மண்ணில் உயர்த்து மகிழ்வெய்த சக்தியினைக் கண்டு தொழுது களிப்புறுவாய் - எண்ணம்வை சக்தி பதமே சரண் ! தாயே தமிழருள்வாள் ! தாங்கிப் பிழையென்னும் காயைத் தவிர்த்து கவியருள்வாள் - நீயேசொல் சக்தி பதமே சரண் ! -விவேக்பாரதி 08.09.2015

நாங்கள் கவிஞர்கள்

நாங்கள் கவிஞர்கள் ! நாவாடும் வார்த்தைகள் மாங்கனி யாக மலருமே ! - தீங்கவிதை செய்வோமே யாங்கணும் சேர்ந்து ! கண்ணில் கவினழகை கண்டிட்டால் யாமுடனே பண்ணில் இசைத்துப் படைப்போமே ! - மண்ணில் கனலாய் உதிர்ப்போம் கவி ! தீயாக எம்கவிதை திக்கெட்டும் தான்பரவும் காயாகும் அஃதே கயவர்க்கு - நோயான மானிடர்க் கிஃதே மருந்து ! -விவேக்பாரதி 08.09.2015

விருத்த மாலை

காப்பு: ஆசானைப் போற்றி அரும்பாக்கள் சொல்கின்றேன் மாசாகி டாமல் மகேசனும் காக்கவே ! நூல் : (வெளிவிருத்தம்) ஆசிரியர்கள் அறிவின் தேக்கம் எனச்சொல்வாய் - அவர்தாளில் மாசிலா நல்மணியாய் மனதைப் பொழிந்திடுவாய் - அவர்தாளில் கூசிடாத சுடரொளியாம் குணத்தைப் பெற்றிடுவாய் - அவர்தாளில் பேசிடாது விழுந்து பணிவாய் உயர்வுருவாய் - அவர்தாளில் ! (ஆசிரிய விருத்தம்) அவரது தாளில் நீயும்    அன்பெனும் பூவைக் கொட்டித் தவறுகள் களைய வேண்டித்    தவங்களைப் புரிவாய் நாளும் ! புவனமும் புண்ய மெய்தப்    புதுப்புதுக் கலைகள் கற்று நவநனி நாக ரீகம்    நல்குபவர் ஆசான் மாரே ! (கலி விருத்தம்) மாரி லேநமை வைத்தெழில் கல்வியின் வேரி னையரும் பாலென ஊட்டியே பாரி லேநமை ஓங்கவைப் பாரெவர் வாரி ஞானமும் வழங்கிடும் அத்தரே !  (வஞ்சி விருத்தம்) அத்தர் தம்மை அன்புடன் புத்தி தன்னில் போற்றிடு இத்த ரணியில் யாங்கணும் சுத்த மானோர் ஆசானே ! (நால்வகைப் பாக்களுக்கும் உண்டான விருத்தம் எனும் பாவினத்தைக் கொண்டு பாடப்பெற்றதாகும்.)  -விவேக்பாரதி 05.09.2015

தமிழ்த்தாய் திருத்தசாங்கம்

Image
பெயர் :  செல்வச் சிறுகிள்ளாய் ! செந்தமிழ் நாடுகண்ட செல்வத்தின் பேரினைச் செப்பிடுவாய் - தொல்கவிதை மன்னித் திளைத்து மகிழும் அரசியின்பேர் என்றன் இயற்றமிழ் என்று ! நாடு :    எங்கள் தமிழன்னை ஏற்றிருக்கும் நாடெதுவோ ? தங்கக் கிளியேநீ தா!பதிலை - இங்கவளும் செந்தமிழர் எண்ணநாடு சேர்ந்திருக்கும் பொன்னெழிலைச் சந்தமுற கூவியே சாற்று ! ஊர் :    உயரப் பறக்கும் உயர்சாதிக் கிள்ளாய் உயிராந் தமிழுக்கெ தூரோ - தயக்கமின்றி நாங்கள் உரையாடும் நாவூர்தான் என்றியம்பாய் மாங்காய் மரத்தில் மகிழ்ந்து ! ஆறு :    குதித்தே அலையெழுப்பிக் குன்றாமல் ஓடும் நதியா தெனிலோ நவில்வாய்க் - கொதிக்கின்ற எந்தமிழர்க் கண்பாயும் ஏற்றக் குருதியது செந்தமிழின் ஆறெனச் செப்பு ! மலை :  ஓங்கி உலகளந்து ஒய்யார மாய்நிற்கும் வீங்குமலை யாதோ விரித்துரைப்பாய் - பைங்கிளியே ! எம்மார் தவழும் எழில்களப மேடுகளே செம்மொழி யின்மலை செப்பு ! ஊர்தி :  விண்ணளந்து ஓரணுவை விண்டுயிர்க்கு மென்டமிழ்க்கு மண்ணிதிலே ஊர்தியெது மாங்கிளியே ! - பண்ணமைக்கும் பாவலர் ஊன்றிப் படைத்தெழுதுங் கோலென்றே ஆவலுடன் சொல்லாய் அலர்ந்து ! படை :  அற்புதச

ஒரு பறவையின் சிறகடிப்பு

ஒரு பறவையின் சிறகடிப்பு !! ஒடியாத என்னையும் ஓடிய வைத்தது அந்தப் பறவையின் சிறகடிப்பு ! யாருக்குந் திறக்காத என் மனக் கதவுகளை முட்டித் தகர்த்தது அந்த வொரு பறவையின் சிறகடிப்பு ! தூங்கிக் கிடந்த என் ஈர இமைகளைத் துவட்டி எழுப்பியது அந்தப் பறவையின் சிறகடிப்பு ! படியாத என்னையும் படிய வைத்தது ஒரு பறவையின் சிறகடிப்பு !! சிறகடித்த அந்தப் பறவையை அறிய ஆவலுற்றேன் ! நீல வானம் இல்லை நீண்ட உடலும் இல்லை கீசுக் குரலும் இல்லை கூரான அலகும் இல்லை !! ஆம் அப்படியொரு விசித்திரப் பறவை அது !! கரிய நிறத்தில் தோன்றிய அந்த சிறகடிப்பு ,,, அடர்ந்த எனது கவிக்காட்டில் அக்கினியை மூட்டிக் கிளம்பியது !! ஆம் என்னை முழுதாய் மயக்கியது என் ஆசைக் கொருத்தியின் அழகிய இமைப்பறவையின் ஆனந்தச் சிறகடிப்பு அதிரூபச் சிறகடிப்பு !! -விவேக்பாரதி 04.09.2015

ஒரு நெருப்பு

ஒரு நெருப்பு தாருங்கள் !!! உலகத்துக் குப்பைகளை உருக்கி எரிக்க - ஒரு நெருப்பு தாருங்கள் !! அருயாமை இருள் நீக்க அறிவுக் குன்றத்தில் ஏற்றி வைக்க அழகாய் - ஒரு நெருப்பு தாருங்கள் !! காதல் குளிர்ச்சியில் கடகடத்து நிற்கின்றேன் குளிர் காய்ந்து கொள்ள - கொஞ்சம் நெருப்பு தாருங்கள் !! அந்த நெருப்பு கச்சா எண்ணையில் எரியும் நெருப்பாக இருக்க வேண்டா !!! மண்ணெண்ணெய் .....? நெய்....? அதுவும் வேண்டா !! கண்ணீரால் எரியும் நெருப்பு தாருங்கள் !! வீண் பொய்களும் அச்சங்களும் வீரமில்லா நெஞ்சங்களும் சாரமில்லா மூளைகளும் அதற்கு விரகாகட்டும் !! ஒரு நெருப்பு தாருங்கள் !! அந்த நெருப்பைப் பற்ற வைக்கத் தீக்குசிகள் வேண்டா !! மானிட விரல் நுனியிலிருந்து அந்த நெருப்பின் பொறிகள் புறப்படட்டும் !! உராய்வில் தோன்றாமல் அந்த நெருப்பு !! உயிரில் தோன்றட்டும் ! அந்த நெருப்பு தீபம் என்றால் !!!! மார் விட்டு எழும் வீரமும் வேட்கையும் அதற்குத் திரிகளாகட்டும் !! அக்கினியில் வேறுபாடு காணாத எனது கவித் தகப்பனின் வழி நிற்கிறேன் !! சிறிய பொறியானாலும் சரி !! சீரிய சூரியனானாலும் சரி !! ஒரு நெருப்பு தாரு

கவிதை எழுதப் பழகிடுங்கள்

ம்ம்ம்..... வாருங்கள் தோழர்களே !! வளைவுடைய தோழிகளே !! எல்லோரும் கவிதை எழுதிடப் பழகிடுங்கள்.....! ஒவ்வொரு கவிதையுமே ஒவ்வொரு சுவைதரும் ! யார் இங்கே உன்னதக் கவிஞன் ? எல்லோரும் தான் ....! அவரவரது உள்ளத்தை ஆழ உழுது ஆர்வ விதையிடும் எல்லா விசயமுமே அவரவர்க்குக் கவிதை தான் ! மண்ணை உழுது மணமான விதையிட்டு ஏற்ற நீர் பாய்ச்சிக் களை எடுக்கும் அறுவடை !!! உழவனின் கவிதை !! வெற்றுப் பாறையை வேக உளி கொண்டு சற்றும் தளராது சகல கலைகளையும் காட்டத் தோன்றும் சிற்பம் சிற்பியின் கவிதை !! மையிட்ட கண்ணால் மனதினைப் பெண் கவர ஆணுக்குத் தோன்றும் அனுபவக் காதல் பருவத்தின் கவிதை !! சில கவிதை சந்தோஷம் !!! சில கவிதை ஜலதோஷம் !!! ஆனால் எல்லாக் கவிதைகளும் கண்ணில் துவங்கிக் கருத்தில் வளர்ந்துக் காகிதத்தில் முடிகின்றன !! இங்கே கவிதைகளுக்கு எப்பொழுதும் கேட்பவரை மயக்கிவிடும் ஒரு இயல்பு உள்ளது....! தோழர்களே !!! சிந்தும் வார்த்தைகளைச் சல்லடை இட்டுப் பொறுக்கி அடுக்குகளில் அடிகளைக் கோர்த்துக் கவிதை என்று யாரேனும் சொன்னால் அவற்றை ஆதரிக்காதீர்க

கேள்வி தொடுக்கிறேன்

அலையும் மேகங்களே ! - உமை    அமிழ்த்தி அழகு வடிவங்களாய்க் கலைகள் ஆக்கியதார் ? - விடை    காட்டுங்க ளேன்சுவை கூட்டுங்களேன் ! மலையின் வடிவங்களே ! - உமை    மாபெரும் முளிகொண்டு வளைவுகளாய் சிலைசெய்த தார்செயலோ ? - பதில்    சாற்றுங்க ளேனறி வூற்றுங்களேன் ! காற்றுக் கிடையினிலே! - மணங்    காட்டிப் பறக்கின்ற மலரினங்காள் தூற்றி உமையுமிங்கே - வெகு    தூரத்தில் விட்டதும் யாருரைப்பீர் ? சேற்றுக் குளத்திடையே - ஒழி    சேர்ந்து விளங்கிடும் தாமரைகாள் சேற்றிடை உங்களையும் - நிலை    சேர்த்தது மார்வினை சாற்றுமினே ! வானக் கருமைகளே - மிக    வாரித் தெளித்தும்மில் விண்மீனை மானப் பெரிதனவே - எழில்    மன்னப் பதித்தது மார்பணியோ ? கானக் குயிலினமே - இசை    கற்றுக் கொடுத்தது மாருரைப்பீர் ஏனித் தாரணியில் - விடை    ஏற்றிடாக் கேள்விகள் வாழுதுவோ ? யாரிங் குரைத்திடுவார் ? - புவி    யாரால் இயங்கு தெனுங்கதையை யாரிங்கு மொழிந்திடுவார் - எனை    யாண்டிடும் ஐயத்தைத் தான்களையப் பாரினி லாருளரோ ? - விடை    பகருமின் ! பகருமின் ! அறிவுடையீர் ! சீரிய அறிவுபெறக் - கவிச்    சிறுவன் முயல்கிறேன் பகருமினே !  -வி

சுதந்திர தினம்

அறுபத்தெட் டாண்டிற்கு முன்னால் நம்மை    ஆண்டிருந்தான் வெள்ளையனும் ! அன்று தேசம் வறுபட்டுப் பொறிபட்டு அழுது ழன்றே    வாடிற்று வதந்கிற்று சோகம் என்றே அறுபட்டுப் போனதடா வாய்மை நூலும்    அடிபட்டுப் போனதடா அமைதிக் கோலும் அறிவுற்றுப் பின்தேசத் தலைவர் எல்லாம்    ஆர்த்தெழுந்தார் சுதந்திரத்தைக் கண்டோம் நாமும் ! கொள்ளையிருள் வேளையில்தான் சுதந்தி ரத்தைக்    கொண்டோம்நாம் ! பாரதர்க்கு அன்று மட்டும் நள்ளிரவில் வந்ததடா நல்ல விடியல்    நட்டநடு நிசியினிலே உள்ள விடியல் பள்ளமெலாம் மேடாக ! இந்தி யாவும்    பாரதரின் நாடாக ! மகிழ்ச்சி யாக ! வெள்ளைஎலாம் பறந்தோடத் ! தேசம் விட்டு    வேகமுடன் கப்பலேறி புறப்பட் டாரே ! சுயமாக ஆட்சிகொண்டோம் சுதந்தி ரத்தால்    சுயமான இராஜ்ஜியத்தை அமைத்து நின்றோம் நயமான சட்டங்கள் பண்பு யர்த்தும்    நாகரிக சட்டங்கள் பின்ப மைத்தோம் புயமொங்கி வல்லரசை எண்ணி இங்கே    புறப்பட்டோம் இன்றும்நாம் அதனை நோக்கி இயங்குகிறோம் இடையிடையே நின்றிட் டாலும்    இனியிதையே மூச்சாகக் கொண்டு வாழ்வோம் ! இளையபார தத்தினரே எழுந்து நிற்போம்    இருபதுக்குள் இந்தியாவை மேலே தூக்கிக் களைந

ஒன்றில் இரண்டு

(ஒரு ஆசானுக்கும் மாணவனுக்கும் நடக்கும் பேச்சு....) வினாவுத்தரம் எதுதான் உலகில் எமதோ பிறர்க்கும்  எதைநான் தரவோ கொடுக்க ?  - மதியும் பொதுவாம்  நலமும் பொலிவும் உளதே ! எதுவோ பொதுவோ கொடு ! மாணவனின் வினா : எதுதான் எமதோ எதைநான் கொடுக்க பொதுவாம் பொலிவும் எது ? ஆசானின் பதில் : உலகில் பிறர்க்குத் தரவோ மதியும் நலமும் உளதே பொது ! (ஒரே வெண்பாவை எழுதி அதிலே ஒற்றைப்படைச் சீர்களைச் சேர்த்தால் ஒரு குறள் வெண்பாவாகவும் இரட்டைப்படைச் சீர்களைச் சேர்த்தால் மற்றொரு குறள் வெண்பாவாகவும் எஞ்சும் சீரை விளியாகவும் வைத்துப் பாடுவது " ஒன்றில் இரண்டு ") -விவேக்பாரதி 11.08.2015

எதை எதிர்பார்க்கிறாய் ?

எழுந்து நடடா இளந்தமிழா ! இன்னும் எதனை எதிர்பார்க்கிறாய்.....? வீரம் வேண்டுமா ? பாரதி பாட்டில் கிறுக்கன் கூற்றில் வெளியே தெரியவில்லையா ? அதிலிருந்து கொஞ்சம் எடுத்துக்கொள்.... சாரம் வேண்டுமா? விவேகானந்தரைத் தொட்டு அப்துல் கலாம் வரை ஆயிரம் பேர் எழுதி வைத்துள்ளார்கள் அதிலிருந்து கொஞ்சம் ஏந்திக்கொள்.... வேகம் வேண்டுமா ? இருக்கிறதே இயற்கைக் காற்று அதன் வாலினைப் பற்றி காலத்தின் ஊடே காற்றோடு கடுகி விரைந்துபோ... தேகம் வேண்டுமா? தேய்ந்து போனாலும் எப்படியோ வளரும் நிலா உனக்கு பாடம் கற்பிக்க வில்லையா ? படிக்குக் கொண்டு வளர்ந்துகொள்..... எப்படியாவது எழுந்திரு தூக்கம் சோர்வைத் தரும் கனவைத் தராது விழித்துக்கொள்.... உனது அக்னிப் பார்வையால் மதுக் கடைகளை முழுதாக எரிக்க முனைந்துசெல்..... இன்னும் என்ன தாமதம் ? எதற்காகக் காத்திருக்கிறாய் ? எதனை எதிர்பார்க்கிறாய் ? -விவேக்பாரதி 08.08.2015

மதுவிலக்கு

மதுவி லக்கு வேண்டும் வேண்டும்    மண்ணில் யாரு மின்புற மதுவி லக்கு வேண்டு மிங்கு    மகிழ்ச்சி வந்து சேரவே மதுவி லக்கு தேவை பாரில்    மதிவ ளர்ந்தே ஓங்கிட மதுவி லக்கு தானே யிங்கு    மனித ருய்யும் மார்க்கமே ! குடிவ ளர்க்கும் ஆண்க ளிங்கு    குடிப்ப ழக்கத் தீமையால் குடிகெ டுக்கும் பண்பை யிங்கு    குறித்து வைத்துப் போக்கவே துடிது டிப்புந் தூரம் போக    துன்ப மதுவி லக்குவோம் மடிய வேண்டும் மதுப்ப ழக்கம்    மக்கள் நீடு வாழவே ! வந்து சேர்மின் பார தத்தின்    வாகை சூடும் வீரர்காள் முந்தி வந்து தமிழ கத்தில்    முள்ளென் றாகும் மதுவினை நிந்தித் தென்றும் நினைவை விட்டு    நீக்க வந்து சேருவீர் எந்தத் திக்கும் எழில்வி ளங்க    ஏற்க அரசு மிஃதையே ! -விவேக்பாரதி 02.08.2015

சிலேடை - நண்பரும் மழையும்

அழைப்பின்றி முன்னே அவதரித் தென்றும் விழைவன தந்து ! விழும்போ - தழுதுழன்று நிற்கும் செயலொன்றால் நீங்காத நண்பர்களும் பொற்புடை மாரியைப் போன்று ! -விவேக்பாரதி  02.08.2015

தவறன்று !

இலக்கியத்தின் வீதிகளில் நடக்கும் போது    இருக்கின்ற பலபேரை பார்க்க நேரும் மலர்விரிக்குந் தமிழியினையே மனதில் கொஞ்சம்    மரியாதை ஏதுமின்றி ஈன மாக இலகுமொழிக் கவிஞரென சொல்லிக் கொண்டே    இழவுபடு கொலைசெய்யும் ஈனர் காண்பாய் ! உலகினிலே இவ்வாறு செய்வார் தம்மின்    உயிர்கொய்வோம் தவறன்று வாடா தம்பி ! தமிழுக்குத் தமிலென்பார் பள்ளி என்றால்    தளராமல் பல்லியென்று எழுதச் செய்வார் அமிழ்தொத்த பழத்திற்கு பலமென் றிங்கே    அழகாக எழுதிவைப்பார் அறிவி ழந்தார் குமரனைக் குமறனென்பார் தண்ணீ ரென்றால்    குற்றமுடன் தன்னீரென் றெழுதி வைப்பார் அமரநிலை காணுவரோ இவரும் அங்கே    அழகாக வாழுவரோ அழிந்து போவார் ! எழுதுகையில் பிழைவந்தால் இயற்கை என்பார்    எடுக்கின்ற உணவினிலே கல்லி ருந்தால் முழுதாக நீக்காமல் இயற்கை என்று    மொழிவாரோ சொல்தம்பீ மொழியே என்றும் தொழுதிடத்தான் வேண்டுபொருள் இஃது ணர்ந்தும்    தொடந்தவரும் பிழைசெய்தால் வாடா தம்பி எழுந்திடடா கையிலினிலே தமிழின் வீர    எழில்கொண்ட கவிதையெனும் வாளெ டுப்போம் ! கலையுடைய தமிழ்மொழியைத் தவறா கத்தான்    காகிதத்தில் ஏடுகளில் எழுது வோரின் தலைகொய்ய வயிர

நாகரிக நரிகள்

ஏடீ ! கிளியே ! சிறுபைங் கிளியே ! எப்போ தும்நீ பறந்திடும் தருணம் அக்கம் பக்கம் அழகைப் பார்த்து பறப்பாய் கிளியே பக்கத் தினிலே நயவஞ் சகமாய் இயல்பாய் நகையாய் பேசிச் சிரித்தே உன்னை மயக்கி புலனிடை பொதிந்த கற்பெனுந் தீயைத் தீண்டிட வந்திடும் நாக ரிகத்தீ நரிகள் இந்த நாடக உலகில் மிகவும் அதிகம் ஒருசொல் கேளாய் கிளிஎன் ராலும் பருந்தாய் உருவே டுக்கும் கலையறி வாயே ! -விவேக்பாரதி 17.07.2015

வந்தது பிறை

தந்தன தனதன தந்தன தனதன தந்தன தனதன - தந்தானா வந்தது பிறைஎனும் சந்திரன் நமக்கருள் தந்திட இறையவன் - வந்தானே ! தொந்தர விலையெனும் நந்தலை எழிலுற முந்திடத் துதித்தவன் - பால்சேர்வோம் ! வந்திடும் பிழையறுத் துந்திடும் அருளினை சந்தமுந் தழுவிடத் - தந்தானே அந்தமில் மறையினை தந்தநம் மிறையினைச் சுந்தரத் தமிழினில் - போற்றோமோ ? அல்லலும் மறைந்திடச் சொல்லிலும் செயலிலும் நல்லவை நிகழ்த்துக - வென்றோதி இல்லெனும் பொருளினில் நில்லென மொழிந்தவன் தொல்லரும் பதமலர் - சூழ்ந்தேதான் புல்லிலும் பணியிலும் நல்லுறு வுடையவன் சொல்லரும் நபிகளின் - தாள்சேர்வோம் கொல்லுவம் துயரினைச் சொல்லுவம் இறைமொழி வெல்லுவம் தரணியி - லிஃதாலே ! -விவேக்பாரதி 17.07.2015

கவிதை யாதென

உள்ளத் துணர்வுகளை உள்ளதை உள்ளபடித் தெள்ளத் தெளிவாகத் தென்தமிழில் அழகாக வெள்ளம் பாய்வதுபோல் வேகமுடன் பாய்ச்சுவதே கொள்ளைக் கவிதையெனக் கொண்டிடுவார் தமிழறிந்தார் ! எண்ணத் தசைவுகளை எழில்சேர்த்து இதமாகும் வண்ணங் கோத்ததிலே வகைவகையாய் உவமைகள் பண்ணுந் தொழிலினையே பாவனையும் கலையென்று கண்ணிற் காட்டிடுவார் கவிதைக்கலை கற்றறிந்தார் ! பார்க்கும் பொருளைஎலாம் பாடுபொருள் என்றமைத்து வார்த்தை அருவியிலே வந்துத்தான் தலைகாட்டிக் கோர்த்துச் சொல்மணிகள் கொட்டுவதே கவிதையெனப் பார்க்குள் எப்பொழுதும் பகன்றிடுவர் மொழிபயின்றார் ! இந்தச் சமூகத்தில் இருக்கின்ற இன்னல்களை எந்தத் தருணத்தில் எப்பொழுது கண்டாலும் முந்தி மனதிற்குள் மூள்கின்ற தீப்பிழம்பைச் சிந்துங் கவியென்று சிறப்புடையோர் கூறுவரே ! -விவேக்பாரதி 25.07.2015

ரமலான் வாழ்த்து

நெஞ்சகத்தே எரியும் பக்தி    நெருப்பினையே பெரிதென் றெண்ணி பஞ்சமேனும் நிலைக்கண் டிட்ட    பாமரனாய்ப் பசிபொ றுத்தே நஞ்சகற்றும் எச்சில் கொண்ட    நபியடியை நின்று போற்றி விஞ்சுபுகழ் கொளுமிஸ் லாமின்    வீரர்க்கென் ரமலான் வாழ்த்து அல்லாவே கடவுள் அன்னார்    அருள்வாக்கே வேத மென்று சொல்லாடி மெக்கா சென்று    சொற்களிலே அல்லா நாமம் நில்லாதே மொழியும் நல்லார்    நிசமின்றி வேறு சொல்லார் அல்லல்பேய்ச் சாத்தான் நீக்கும்    அருளார்க்கென் ரமலான் வாழ்த்து ! ஒருமாதம் நோன்பி ருந்தே    ஓரிறைவன் அல்லா தம்முள் வரும்பிழைகள் யாவும் நீக்கி    வாழ்த்துரைக்க வேண்டி நின்றே ஒருவேத மென்று குர்ஆன்    ஓதிடுவார் இசுலா மத்தின் திருவாளர் யாவ ருக்கும்    தித்திக்கும் ரமலான் வாழ்த்து ! -விவேக்பாரதி 17.07.2015

லிமரைக்கூ

காற்று எத்தனைநாள் சுற்றுதுவோ காற்று ஏறுதுவே இன்றுநாளை நேற்று    யாரனுப்பி வைத்தாரோ    யாரிதனைத் தைத்தாரோ ஏதிதற்கு ஆகிடுமோ மாற்று ! நிலா முத்துமுத்தாய் பூத்திருக்கு வானம் முழுமைநிலா மறைவதிலேன் நாணம்    பாதியிலே தேய்கிறது    பாதிதலை சாய்கிறது மூழ்விட்டேன் இதனழகில் நானும் ! கடல் அலையோசை காதுகளில் இசையே அலைவதெலாம் காற்றடிக்கும் விசையே    யாரிதனை சிந்திட்டார்    யாழிசைக்க முந்திட்டார் அலைகடலே இங்கெட்டுத் திசையே ! -விவேக்பாரதி 03.07.2015

நான் செய்த பீட்ஸா

Image
பீட்ஸா என்னும் இதனைத்தான்    பிரியத் துடனே நான்செய்து காட்டிக் காட்டித் தின்னுகிறேன்    கவிதை சுவையால் பண்ணுகிறேன் காட்சி கொண்ட நான்கினிலே    கடைசி என்றன் கடைவாயில் மாட்டிக் கொண்ட காரணத்தால்    மூன்றை முன்னே வைக்கின்றேன் ! அம்மா வுக்கும் இதிலொன்று    அப்பா வுக்கும் இன்னொன்று தம்பிக் கிதிலே சிறுபங்கு    செய்த எனக்கே பெரும்பங்கு சும்மா இருக்கும் வேளையிலே    சுடவைத் திதனை உண்பதுவே உம்முன் பாடும் என்றனுக்கு    உரிய பொழுது போக்கறிவீர் ! காணும் ரொட்டி கடைகளிலே    கிடைக்கும் பத்து ரூபாய்க்கே நாணின் நிறமாய் சிவந்துநிற்கும்    நல்ல மசாலா நான்செய்தேன் பூணும் அதனின் வெள்ளைநிறம்    பூசும் பாலா டைக்கட்டி வேணும் என்று யாவருமே    வேண்டும் சுவையை நல்கிடுமே ! தோசைக் கல்லில் தான்செய்தேன்    தோய விட்டேன் மிளகுப்பொடி மேசை தன்னைக் கண்டாலோ    மேதி னிபோலே குப்பைமயம் ஆசை வந்து பாய்ந்திடவே    ஆக்கி வைத்த பண்டமிதை ஓசை நயமும் ததும்புகின்ற    ஒண்பா சொல்லிப் பாடுகிறேன் ! -விவேக்பாரதி 05.07.2015

வாழி சக்தி வாழி சக்தி

Image
வாழி சக்தி வாழி சக்தி     வாழி சக்தியே - என்று  வாக்கு சொல்லும் வேளை சேரும்     வாழ்வில் முக்தியே!  பாவம் செய்த பக்த ருக்குப்    பாசங் காட்டுவாள் - இங்கு  ஜீவன் செய்யும் குற்றந் தம்மைச்    சீவி மாய்ப்பவள்!  யாவ ருக்கும் அருள்கொ டுத்து    யாண்டும் காப்பவள் - உயர்த்  தேவி ஆதி சக்தி யென்னுந்    தாயைப் போற்றுதும் ! வாழி சக்தி வாழி சக்தி     வாழி சக்தியே - என்று  வாக்கு சொல்லும் வேளை சேரும்     வாழ்வில் முக்தியே!  காற்று மாகிப் புனலு மாகிக்    கவியு மாகுவாள் - நல்ல  சேற்றில் பூக்கும் கமல மாகிச்    சேலு மாகுவாள்!  ஊற்றில் ஊறும் நீரு மாகி    உயிர்கள் பேணுவாள் - விதியை  மாற்றி உலகை ஆட்டும் சக்தி    மாண்பைப் போற்றுதும்!! வாழி சக்தி வாழி சக்தி     வாழி சக்தியே - என்று  வாக்கு சொல்லும் வேளை சேரும்     வாழ்வில் முக்தியே!!  -விவேக்பாரதி 28.06.2015

மானம் கெட்டவர்க்கே

மானங் கேட்டவர்க்கே மரியாதை அதிகம் - மன    சாட்சி கொன்றவர்க்கே பொருட்செல்வங் குவியும் வானத் தளவினதாய் வளர்த்திடுவார் பொய்யை - சொலும்    வாக்கில் ஒருநாளும் வைத்திலரே மெய்யை ஏனிப் பிறப்புகளைச் செய்தாயோ தேவி - பிறர்    ஏய்க்கப் படுகின்றார் பொய்மைகுணம் மேவி கூனித் தலைகளையும் குனிந்துவாழ் வோமா - அட    கூட்டி லுரைசிங்கம் வேட்டையிடப் போமா ஆற்றுப் படுக்கையிலே மண்ணெடுத்தார் அங்கே - பல    ஆண்கள் பெண்களையும் அழிவினிலே இட்டார் தேற்றிப் பலவுரைகள் நல்கிடுமுன் னோரை - தொலை    தூரந் தள்ளுவதில் நிம்மதியைக் கண்டார் மாற்றி மாற்றிஉரை பேசுகின்ற வீணர் - ஒரு    மேடை தனில்பேசக் கைதட்டல் செய்வார் சேற்றில் கால்வைத் துழவுசெய் வோரை - வெறும்    செத்தை என்றிங்கு ஒதுக்குதலும் செய்வார் ! -விவேக்பாரதி 09.06.2015

உழவைத் துதி

ஏர்தொட்டு மண்ணில் கவிதை வனைகின்ற சீர்மிகு நற்செயல் செய்யடா - பார்செழிக்க வேளாண்மை செய்வாய் நமதுதொழில் இஃதைநீ நாளா கமறத்தல் இழிவு நீராட்டி அன்னை உனைவளர்த்த தைப்போலே பாராட்டி நீயும் பயிர்வளர்ப்பாய் - காராடி மண்ணில் விழுகின்ற நீர்த்துளியும் வானமுதம் எண்ணத்தில் நீவை இதை ! இயற்கை உரத்தால் பயிர்செய்வாய் ! நன்மை பயக்கும் இதையும்நீ செய்தால் - செயற்கை உரத்தால் நிலத்தாய் பிணியுறுவாள் ! வேண்டாம் ! கரத்தில் கலப்பை எடு ! மடைகள் திறப்பது வேண்டும் ! மிகுந்தால் அடைப்பதும் முக்கியம் பாராய் - எடையதற்கு ஏற்ற விலையும் அரசு வழங்குமே ! போற்றி உழவைத் துதி ! நாளை விவசாயம் எந்திரத்தா லாயினும் காளை பசுவெலாம் நம்தெய்வம் - தாளைப் பிடித்தும் தொழுதல் அழகு ! அதையும் அடித்தல் மிகவும் பிழை ! கதிரறுக்க ஏற்ற காலம் வினவின் பதிலாக நானுரைப்பேன் தைதான் - அதியழகாய் நெல்மணிகள் பூத்திருக்கும் மண்பார்த்துக் காத்திருக்கும் செல்!அறுக்க நீயும் விரை ! -விவேக்பாரதி 07.06.2015

கவி

கண்ணிற் தவற்றினைக் காணின் ! மழைவந்து மண்ணி லிலையசைய வீழின் ! பெருங்கவிஞர் பண்ணுங் கவிகாதிற் கேட்கின் ! மனதினுளே எண்ணற் றெழுமே கவி ! உதிரங் கொதித்திடுங் காலை ! யுணர்ச்சி நதியாய்ப் பெருகிடும் நேரம் ! இயற்கை விதியுந் தடம்புரள் காலம் ! ஒளியாய் மதியி லுதிக்குங் கவி ! -விவேக்பாரதி 05.06.2015

காற்று தந்த கவி

காலையிளங் கதிரொளியென் கண்ணில் வீழக்    கட்டிலதை விட்டுமெல்ல துயிலெ ழுந்தேன் சோலையிளந் தென்றலொன்று காதில் வந்து    சொன்னதுவே இரகசியமாய்க் கவிதை யொன்று பாலைமணல் பைந்தளிரை ஈன்ற தற்போல்    பாவெழுதும் எனக்கதுவோ புதுமை கேளீர் வேலையெலாம் நான்மறந்து காற்று வந்து    வேகுவழகாய் சொன்னகவி கேட்டி ருந்தேன் ! காற்றினிலே வந்தகவி கலியும் அல்ல    காரிகையும் முன்சொன்ன வடிவும் அல்ல ஆற்றைப்போல் புதுக்கவியின் வெள்ள மல்ல    அரைசானே உயரமுள்ள ஹைக்கூ வல்ல நேற்றையநாள் முன்னோர்கள் சொல்லி வைத்த    நேர்த்திமிகு காப்பியத்து ளொன்று மல்ல ஊற்றனைய உணர்வுகளைக் கிளப்பிப் பாயும்    உயிரோட்டம் மிகுகவிதை இதுவே யென்பேன் ! என்னசுவை என்னசுரம் என்னே ராகம்     என்றாலு மக்கவிதை இசைப்பா டல்ல என்னபொருள் என்னநடை என்னே சந்தம்     என்றாலு மக்கவிதை யாப்பு மல்ல பொன்மேவும் காலையிலே கவிதை வந்து    போகுமிடம் யாதென்று அறிய எண்ணி ஜன்னலிடை நானெட்டிப் பார்த்தேன் ! அஃதோ    சத்தமொடு கத்துகின்ற குழந்தைப் பேச்சாம் ! -விவேக்பாரதி 05.06.2015

தந்திமிதோம் ஆட்டம்

அரனின் மகனை ! அழகன் எழிலைப்! பரம குருவின் பதத்தைக் ! - கரத்தினில் ஒத்தித் தொழுதே உயர்வைப் பெற்றிடுவோம் ! பத்தும் நமைச்சேரும் பார் ! பார்வதி மைந்தனைப் ! பார்திவனை ! தெய்வானை மார்கொஞ்சும் வண்ண மயிலோனை ! - சீர்மேவுஞ் செந்தமிழிக் கோமகனை ! சேவற் கொடியோனைச் சிந்தித்தால் வாழும் சிரம் ! சிரத்தை முருகன் சிவந்த அடியில் தரமாய்ப் பதிக்கத் தருவான் - வரமனைத்தும் ! சந்தங்கள் சிந்துந் திருப்புகழ் கேட்கையிலே தந்திமிதோம் ஆட்டம் தினம் ! -விவேக்பாரதி 03.06.2015

சக்தி விருத்தம்

திங்கள் சடையன் பத்தினியைத்    திண்தோள் கந்தன் தாயவளை எங்கள் துயரம் தீர்ப்பவளை    என்றும் எம்மைக் காப்பவளை மங்காச் சோதிப் பொருளவளை    மாயன் தங்கை மதிநுதலை எங்கும் எதிலும் எப்பொழுதும்    ஏத்தித் தொழுவோம் உயர்வுருவோம் ! -விவேக்பாரதி 03.06.2015

நாலடிப் பின்னல்

"செஸ்டினா" என்னும் ஆங்கிலப் பாவின் வடிவமானது இறுதியில் இருக்கும் இயைபுத் தொடைகளை மாற்றி மாற்றிப் போட்டு மாயம் செய்வது போல இருக்கும். அந்த முயற்சிக்கு "இணையச் சான்றோர்" சந்தவசந்தக் குழுவினர் இட்ட பெயர். "பின்னல்". கங்கைக்காய்ப் பொற்சடையை விரித்தான் மாறனவன் முப்புரத்தை எரித்தான் சங்கைத்தன் காதினிலே தரித்தான் விளையாடல் பலசெய்து சிரித்தான் !  (சிவன்) அன்னையையே ஏமாற்றிச் சிரித்தான் அண்டத்தை வாயினிலே விரித்தான் பொன்மேவும் ஆடைகளைத் தரித்தான் பொய்யரக்கர் கூட்டத்தை எரித்தான் ! (கண்ணன்) மனதினிலே வஞ்சமதை எரித்தான் மலைப்பிரசங் கஞ்செய்து சிரித்தான் தனதுடையாய்க் கந்தலையே தரித்தான் தாராள அன்பினெல்லை விரித்தான் ! (இயேசு) கடவுளவன் பேச்சுகளை விரித்தான் காரிருளாம் அறியாமை எரித்தான் உடலினிலே அரபுடைகள் தரித்தான் ஊர்சேர்ந்து எதிர்க்கையிலும் சிரித்தான் ! (நபி) நன்மைகளை விரித்தான் ! நலிவுகளை எரித்தான் இன்பமதைத் தரித்தான் ! இன்னமுதாய்ச் சிரித்தே ! -விவேக்பாரதி 25.05.2015

அழகன் கலிவெண்பா

காப்பு : ழகரம் எடுத்துக் கவிதை வனைந்தேன் குகன்தாய் பராசக்தி காப்பு ! நூல் : தொழுதேன் ! தொழுதேன் ! அழகா ! கழலை முழுதாய் விழுந்தே எழுந்தேன் ! புழுதிப் பழத்தைக் கிழவிக் கழைத்துக் கொடுத்தாய் மழலைத் தமிழை மழையாய்த் ! தழைக்கும் உலகுக் களித்தாய் அழகு மயிலா ! பிழைக்கு ளுழன்றே அழுகும் எனக்குக் குழந்தைக் குருவே விழியா லருள்வாய் மெழுகாய் ஒழுகித் தொழுமென் வழக்கம் முழுதாய் அடியேன் மரணித் திடுமந் நிமிடம் வரையில் நெகிழேன் பரமா ! எழலை விழைவேன் ! எழிலே ! பதத்தில் விழலை விழைவேன் ! தமிழின் மொழியை பிழையா நிலையாய் அடியேன் வனைய விழைவேன் முருகா ! எழில்வேற் குமரா ! பொழிலே ! அழகின் புனலே ! புகழை அழியும் பெயரை விழையேன் குகனே ! பொழிவாய் ! பொழிவாய் ! அமிழ்தத் தமிழை ! ஒழிப்பாய் எனக்குள் ளிருக்கும் பிழையை ! உனையே நினைத்து வழியா விழியும் உனையே துதித்து எழுதா மொழியும் பொழியா முகில்போல் ! பயனில் வழிபோல் அழிவே எனக்கு ! வடிவே லவனே ! எழுதும் எழுத்தின் எழிலும் உனதே எழுதும் மொழியின் பொருளும் உனதே ! பவளப் பறழே ! பழமே ! தவமே ! தவறை யொழிக்கும் திருமால் மருகா ! குழையா அமிழ்தே ! குழையை அணிவாய்

சித்திரக்கவி - சட்கோண பந்தம்

Image
பொன்மன்னன் என்றுன்றன் பாதம் பிடித்தோமே இன்ன லகற்றித் துணையாக - நின்றே வியனுலகு காப்பாய் அரியா சனத்தின் ஜெயசாயி சாயிநா தா ! -விவேக்பாரதி 18.05.2015

வெண்பா

கட்டழகு கொண்ட கவியழகி வெண்பாவே தட்டும் தளைகளும் தானாக - ஒட்டிவரும் ஓசை நயங்களுமே ஓரழகு ! என்னுடைய ஆசைக் கொருத்தியே ! ஆம் ! இயற்சீரின் வெண்டளையில் இன்முகம் காட்டி வியப்பினில் ஆழ்த்துவாள் ! விந்தை ! - நயத்துடனே ஈற்றடி கொண்டினிதாய் இன்சுவை தந்திடுவாள் போற்றடி இங்கிவளும் பொன் ! வெண்சீரில் கன்னங்கள் வெண்ணைபோல் லாவகமாய்த் தொண்டைக்குள் சென்றிடும் தொய்வுடையாள் - பண்டைப் பழமைக்கும் ஆவாள் புதுமை புகுத்தப் பழமாகக் காய்ப்பாள் பழுத்து ! அணிபலவும் தன்னுள்ளே ஆக்கிடுவாள் ! நல்ல மணிமணியாய்க் கற்பனையில் பூப்பாள் ! - பணிந்துவிடில் தன்னழைகை முன்னழகைத் தானொளிரக் காட்டுவாள் மின்னலிடை ஆர்க்கும் மிளிர்ந்து ! அழகுகொஞ்சும் பெண்ணாய் அருள்மே கலையும் பழகும் தனிச்சொல் இடையாய் ! - பழமின்றிக் காய்மட்டும் காய்க்கும் கவித்தொட்ட மென்முலையாள் போய்பரு கின்பம் பொலிந்து ! செப்பலோசை கொண்டேதான் செல்லும் நடையுடையாள் ஒப்புமிலாள் செந்தமிழின் ஒண்பாவில் ! எப்போதும் தன்வழி ஒன்றே தனிவழி என்றுசெல்வாள் என்றுமிவள் ராணி எனக்கு ! -விவேக்பாரதி 22.05.2015

கோடை மழை

கொட்டித் தீர்க்குது கோரமழை - பலே    கொட்ட மடிக்குது கோபஇடி - அட வெட்டித் தெறிக்குது மின்னலொளி - முகில்    சுற்றி வளைக்குது அக்கினியை ! எட்டிப் பார்க்கவும் இயலாது - பகல்    ஏந்திழை அந்தோ மறைகின்றாள் - எழில் குட்டிக் கரணம் போட்டபடி - உளே    குளிர்ந்த காற்றும் நிறைகின்றாள் ! வெய்யோன் உண்டு வேனிலிலை - வரும்    வேகக் காற்றில் வேப்பமிலை - இரு கையும் விசிறிகள் தேடவிலை - மின்    காற்றும் அறையுள் ஓடவில்லை ! அக்கினி வெயிலும் என்னாச்சு ? - அது    அடைமழை யாலே நின்னாச்சு - இருள் பக்க மனைத்திலும் சூழ்ந்தாச்சு - கிளைப்    பறவைகள் துயிலில் ஆழ்ந்தாச்சு ! சூட்டில் வியர்த்தது பின்னோடிக் - குளுங்    காற்றில் வியர்குது மேனியடா ! - மழைக் காட்டில் உறைந்திடும் ஊர்போலே - சுடும்    கந்தக பூமியு மானதடா ! அடஅட அடைமழை பெய்கிறதே - மனம்    ஆனந் தத்தில் உய்கிறதே - உடன் கடகட கடவென மண்வாசம் - நிறைந்    தாடுது என்றன் பண்வாசம் ! திக்குகள் எட்டிலும் மேகங்களாய் - பல    தவளைச் சத்தமும் ராகங்களாய் - புவி மக்களும் மண்ணில் மகிழ்ந்திடவே - துளி    முகிலதை விட்டு முகிழ்கிறதே !

பிள்ளைக்கவி

பாசமழலை பேசவந்த பாப்பா - நித்தம்    பாற்கடலில் ஆடுவையோ பாப்பா ! நேசமுழுதும் வீசவந்த பாப்பா - நீயும்    வெண்ணிலாவின் மகளோசொல் பாப்பா ! காசினியில் ஆசுகவி எல்லாம் - உன்றன்    அகத்தழகை முகத்தழகைக் கண்டு பேசிடவோர் பாசையின்றிப் போவார் - உன்னைப்     பாடிடவே ஆயத்தமா யாவார் ! தத்தக்கா பித்தக்கா என்று - நீயும்    பித்துமொழி பேசுகின்ற நேரம் முத்தத்தேன் முத்தமிழாய் வந்து - என்னை    மோனத்தி லாழ்த்துதடி பாப்பா ! கத்தித்தான் தித்தித்தோ மென்று - அலறித்    திணறுகிறாய் கதறுகிறாய் பாப்பா ! நித்தந்தான் அத்துமிசை போலே - என்றன்    ஆறறிவில் ஊறுதடி பாப்பா ! பஞ்சுக்கால் மஞ்சுக்கே ஒப்பு - ஏறி    மார்மீது மிதிக்கையிலே பாப்பா கொஞ்சத்தான் அஞ்சித்தான் வந்தேன் - நீயும்    அழுதுவிட லாகாதே பாப்பா ! நஞ்சுன்றன் பிஞ்சுக்கை பட்டால் - தனது    பிழைவிட்டு நல்லமுத மாகும் கொஞ்சந்தான் பஞ்சத்தில் உள்ளேன் - நின்னைப்    பாடபொருள் தேடுவதில் பாப்பா ! -விவேக்பாரதி 06.05.2015

சக்தி வேல்

எந்நாளும் உன்பேர் சொன்னாலே போதும்     என்வாழ்வு மிங்கே எழிலாகும்  பொன்னாரம் பூண்ட மின்னாடும் மேனி     என்வாழ்வைச் சேரும் அருளாகும் செந்தாழம் பூவைக் கண்டாடும் கொங்கை     கொண்டாயே தாயே உமையாளே  உன்னாசி அன்றி வேறெந்த ஜோதி     என்பாவைக் காக்கும் ஒளியோசொல் ! சிந்தோடு சந்தம் வந்தாடும் வண்ணம்     என்னோடு நல்கு தமிழாறை  முன்னோர்கள் போற்ற முன்னேகி நானும்     பொன்னான பாக்கள் பலபாடக் கந்தோனின் கையில் அன்றோர்நாள் தாயே     தந்தாயே வேலை அதுபோலே  உன்சேயா மென்றன் கையோடு நீயும்    தந்தாலே போதும் கவிவேலை ! -விவேக்பாரதி 02.05.2015

ஐயோ அதிசயம்

Image
கனவிலும் தோன்றிடும் கற்பனைக் குள்ளும்   தினமுரு காட்டிடும் திவ்யரூ பத்தின்    மலரடி தன்னை மனதில் நிறுத்த  இலகுடைப் பாக்கள் இதயத் தவிழும்!  அவற்றை அடியேன் அகமுறப் பாடி  கவிதைத் தந்தவள் காற்கொலு சோசை  அழகுடன் துள்ளும் அதிசயம் கண்டு   கழலிடை கண்ணீர் கசிவேன்! - எழுப்பிடல்   செய்வாள் உலகமா தாயே...  ஐயோ அதைவிட அதிசயம் உளதோ?? -விவேக்பாரதி 30.04.2015

குழந்தைப் பாடல் - ச்சோட்டா பீம்

அம்மா இங்கே வந்துவிடு போகோ தன்னைப் போட்டுவிடு சும்மா அங்கே வேலையென்ன சோட்டா பீமைப் பார்க்கணுமே ! அக்கா பாட்டுகள் கேட்காதே தாத்தா செய்திகள் பார்க்காதே டோலக் பூரில் நான்சென்று சோட்டா பீமைப் பார்க்கணுமே ! சுட்கி ஜக்கு உடனுண்டு குண்டுக் காலியா அவனுண்டு கெட்டவ ருக்கு உதையுண்டு கேலிக்கு மட்டும் அளவில்லை ! லட்டூ தின்றே பலம்பெறுவான் ராஜா வுக்குத் துணைவருவான் குட்டித் தங்கம் கேட்கின்றேன் குடுகுடு வெனவா போட்டுவிடு ! -விவேக்பாரதி  26.04.2015

குழந்தைப் பாடல் - வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய் வெள்ளரிக்காய் வெயிலுக்கேற்ற வெள்ளரிக்காய் வேனிலுக்கு ஏற்றதடா வேலியிலே பூத்ததடா ! குளிர்பானம் உண்ணாதே குளிர்பனிக்கூழ் எண்ணாதே தளிர்வெள்ளரி சாப்பிடுவாய் இன்னுங்கொஞ்சம் கேட்டிடுவாய் ! இயற்கையிலே காய்த்ததடா இன்னல்தீர்க்கக் காய்த்ததடா செயற்கைக்கூழ் ஏதுக்கடா இயற்கைத்தாய் வரமிருக்க -விவேக்பாரதி 26.04.2015  

குழந்தைப் பாடல் - மிதிவண்டி

தன்னானே தானனன்னே காலைத்தூக்கி மேலேபோட்டு முன்னாலே பார்த்தபடி இருக்கையிலே அமர்ந்துகிட்டு தில்லானே தில்லானனே கீழேமிதி மேலேமிதி நில்லாமல் ஓட்டிப்பாரு மிதிவண்டிக் கிதுவே விதி இடதுபுறம் செல்லவேணும் இல்லையெனில் துன்பம்நேரும் கடகடவென வேகமாக ஓட்டுவதை நிறுத்தவேணும் மிதிவண்டி மிதிவண்டி இன்றைக்கேற்ற மிதிவண்டி எதுவுண்டு இதுபோலே இதுவேதான் நிதிவண்டி ! -விவேக்பாரதி 25.04.2015

வாய்ப்பு

தாய்ச்சொல் தனையுமே தட்ட முயலுதல் தாழ்வுதரும் காய்ச்சொல் தனையும் களைந்தே இனிக்கும் கவியுரைப்பாய் ஆய்சொல் அவிழ்ப்பவர் ஆசான் மொழியை அரவணைப்பாய் வாய்ப்பு வருகையில் வாசல் திறந்திடு மானிடனே ஏய்த்துப் பிழைப்பவர் என்றும் உலகினில் ஏற்றமற்றார் தேய்த்தே உடலது தேய உழைப்பவர் தேவரொப்பார் மாய்த்தே உனையுமிம் மண்ணில் விழுவது மாதவமோ வாய்ப்பு வருகையில் வாசல் திறந்திடு மானிடனே ! -விவேக்பாரதி 24.04.2015

மன்மத வருஷ பலன் வெண்பா

மாரி பொழியுமாம் மாமன்னர் சீனத்தைப் போரில் எதிரே பொருதுவராம் - சீரியதாய்க் காற்றும் மிகுந்திடுமாம் கண்டுலகம் கொண்டாட ஏற்றிவந்தார் மன்மதம் என்று ! நன்மைமிகு பல்பொருளும் நண்ணிடுமாம் ஊரினிலிம் மன்மதத்தில் பல்லுயிரும் இன்புறுமாம் - தென்திசையில் காற்றும் மிகுந்திடுமாம் கண்டுலகம் கொண்டாட ஏற்றிவந்தார் மன்மதம் என்று ! -விவேக்பாரதி 14.04.2015

சிறுகதைச் சிங்கம்

வியனுலகம் சுற்றியே வீசிடும் கதையின் இயக்கமும் நின்றதே இன்று - ஜெயகாந்தன் என்னுஞ் சிறுகதைச் சிங்கமும் சாய்ந்ததே இன்றெம் கவியில் இருள்! பலகதை பாய்ச்சிய பைந்தமிழ்ச் சிட்டும் உலகத்துக் கூட்டை உடைத்து - நிலையான விண்ணை அடைந்ததே விண்ணோர் கதைகேட்டு எண்ணத்தில் சேர்ப்பார் எழில் காலனே எங்கள் கதைசொல்லும் பீரங்கியைக் காலடியில் வைக்கஆசை கொண்டாயோ - காலங்கள் ஆயிரம் சென்றாலும் ஆணிமுத்தாய் மின்னிய தோயிவன்க தையின் தொடர்! (எழுத்தாளர் ஜெயகாந்தன் மறைவுக்கு எழுதியது)  -விவேக்பாரதி 09.04.2015

சித்திரக்கவி - அன்னபந்தம்

Image
  முத்தமிழில் பாநெய்ய முந்திடநான் வந்திசைத்தே னத்தனையும் சக்தியுன்றன் ஆனையென் - றத்தரிடம் வித்தைகற்றேன் பாபாயு வித்தைகள் நான்பயில முத்தம்தா நின்முத்தம் முத்து! (இதே வெண்பா மேலுள்ள சித்திரத்தில் வரையப்பட்டுள்ளது) -விவேக்பாரதி 08.04.2015

சிலேடை - பாவும் பெண்ணும்

நாவலரும் போற்றுதால் நான்கு குணமுளதால் பாவலரும் பண்ணிசைத்துப் பாடுவதால் - காவலரைச் சேர்க்கும் அழகதுவால் செந்தமிழின் பாக்களும் நேரிழையும் நேருக்கு நேர் ! பா : 1) நாவில் சிறந்தவர்கள் போற்றுவார்கள் 2) நான்கு வகையான குணங்கள் (வடிவங்களும் ஓசைகளும்) கொண்டன. 3) பாவலர்கள் பண் அமைத்துப் பாவைப் பாடுவார்கள். 4) காவலர்கள் (அரசர்கள்) பாக்களில் புனைப்படும் அழகால் சேர்வர் (சிலப்பதிகாரத்தில் மூவேந்தர்களும் இளங்கோவின் பாவால் சேர்ந்தனர்) பெண் : 1) நாவில் சிறந்தவர்கள் போற்றுவார்கள். 2) அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு என்று நான்கு குணமுடையவர்கள். 3) பாவலர்கள் பெண்களைப் பண் கொண்டு பாடிப் புகழ்வர். 4) காவலர் ( கா + அலர்) காட்டு மலர்களைச் சேர்த்துக் கட்டும் அழகினைக் கொண்டவர்கள். -விவேக்பாரதி 04.04.2015