21ஆம் நூற்றாண்டுக் கவிதை

இருபத்தி ஒன்றாவது நூற்றாண் டிஃதில்
   இயற்றமிழின் கவிதையினை இருவே றாகப்
பிரித்துவைத் துள்ளதிந்தக் கவிஞர் வர்க்கம்
   பிழையில்லா இலக்கணத்தின் கவியாம் ஒன்று !
வருகின்ற கருத்தினையே வடிவ மற்று
   வனைகின்ற புதுக்கவியாம் மற்றொன் றிந்தப்
பிரிவுக்குப் பழகிவிட்டேன் பிரிவை நானும்
   பின்னாலே வரும்வாறு புரிந்து கொண்டேன் !

புதுக்கவிதை என்பதென்றன் காதல் தாங்கும்
   புதுப்பொலிவுக் காதலிதான் மரபோ என்னை
வதுவையது புரிந்துகொண்ட இல்லாள் என்பேன்
   வளமான கருத்தன்றோ ? சிரித்துக் கொள்வேன் !
பொதுக்கவிதைச் செல்வத்தை இவ்வா றுன்றன்
   போக்கிற்கு எண்ணுவது சரியோ வென்றால்
எதுவந்தால் எனக்கென்ன எனக்கு மட்டும்
   எப்போதும் காதலியென் கவிதை யென்பேன் !

மரபினிலே கவியெழுதும் பொழுதோ என்றன்
   மனைவியினைக் கொஞ்சுகின்ற உணர்வு தோன்றும் !
கரத்தோடு புதுக்கவிதை படைக்கும் போழ்தோ
   காதலியைக் கொஞ்சுகின்ற மயக்கம் நேரும்
சிரமந்தான் இருவீடு என்றால் கூட
   சிறப்பாக இருக்கிறது ! நீங்கள் கூட
இருவீடு வேண்டுமெனில் வைத்துக் கொள்வீர்
   இருக்கட்டும் இருவீடு கவியில் மட்டும் !!

-விவேக்பாரதி
19.04.2016

Comments

Popular Posts