நி‌ஷோக்கி - ஜப்பானியக் கொடி

காற்றைக் களமென ஆக்கி - எழில்
   காணும் ஜப்பானியர் ஏக்கங்கள் போக்கி  
நாற்றிசையும் புகழ் தூக்கிப் - பல 
   நாட்டினர் போற்றிட ஏறும் "நிஷோக்கி" !
 
வானத்தில் ஓங்கி உயர்ந்தே - அரும்
   வண்ணக் கொடியும் பறப்பது பாரீர் 
ஊனுக்குள் ஊறும் உயிர்போல் -மக்கள்
   உணர்வுக்குள் ஊறிச் சிறப்பது பாரீர் !  

வெள்ளை நிறமொரு சின்னம் - அதில்
   வெல்லும் புரட்சி சிவப்பெனும் திண்ணம் 
கொள்ளை அழகிது பாரீர் -ஜனம்
   கூடிக் கிடக்கும் எழிலினைப் பாரீர் !

கொடியுட் திகழெழில் வட்டம் - அது 
   கூறிடும் சூரியனின் ஒளி வட்டம்  !
மிடிமை ஹிரோஷிமா கண்டு - மக்கள்
   மிரண்டிட வில்லை உயர்ந்தனர் பண்டு !

கொஞ்சும் எழிலொலி வீசிச் - செவி 
   குளிரும் ஜப்பானியத் தாய்மொழி பேசி 
நெஞ்சிற் கொடியைப் பதிப்பார் - அது 
   நேர்மையைக் காட்டிடும் ஓர்அடை யாளம் !
 
வாழி உழைப்பவர் பூமி - மிக 
   வன்மைபெற் றுய்க ஜப்பானியர் பூமி ! 
வாழி இயற்கையின் நாடு - புவி 
   வாழ்த்தொலி கேட்க வளர்கபண் பாடு !! 
 
To Know more about Japan Flag - Nisshōki
 
-விவேக்பாரதி 
28.03.2015

Comments

Popular Posts