பெண்மை வாழ்கென்று

பெண்மை வாழ்க வென்று கூத்திடுவோம்
   பேரண்டம் செழிக்கப் பெருங் கூத்திடுவோம்
உண்மை உலகில் இன்றும் இருப்பது
  உன்னதப் பிறப்புகள் பெண்டீர்களாலே
விண்ணை ஆண்ட வீரனாயினும் அவனுக்கு 
   வீரம் தந்தது அன்னையின் பாலே
பண்ணுக்கு நிகராய் இன்பம் கூடுமாயின்
   பாரில் அதுவும் பெண் மக்களாலே

திண்ண முடையதாய் பாரதம் வளரும்
  தித்திக்கும் இவர்களின் முத்தமி ழாலே
வண்ண மேவிடும் வாழ்வும் வளமும்
  வளரும் இந்தக் குலமக்க ளாலே
எண்ணத்திலே பெண்களின் கல்வியை ஏற்றி
  ஏற்றமுடைய பாரதம் அமைப்போம் வாரீர்
மண்ணினில் பாரதம் மகளிர்க் கிங்கு
  மதிப்பினைத் தருமெனச் சொல்லிட வாரீர் !!

பூதப் பேய்களும் நம்மிடம் வந்து
  பூச்சாண்டி காட்ட அஞ்சி நடுங்குதுவே
சாதலும் குறைந்து மானுடர் வாழ்வில்
  சாதித்திடும் வேளையும் வருதே ! பெண்ணால்
காதல் வளருமாம் காதலினாலே
  கவலை போகுமாம் இது பாரதி வாக்கு
ஆதலினால் தான் பெண்மைக்காக
  ஆதரவு திரட்டி கும்மி யடித்தேன் பாரீர்

அகிலம் செழிக்கும் பெண்மையி னாலே
  ஆன்ற புலமையும் வளர்ந்திடும்
முகில னைத்தும் பெண் தானோ ?
  பொழிகிறது முப்போகக் கண்ணீர்
சகித்திடும் குணமும் தூய நல்அகமும்
  சேர்ந்தது தானிங்கு பெண்மை என்போம்
புகுதிடுவோம் ! அவர்களுகுக் கல்வி
  தொகுதிடுவோம் நற்அரண்களையெல்லாம்

கடல் கடத்தல் கூடாது பெண்கள் என்றார்
  கண்ட மூடத் தனத்தினை நம்புபவர் !
மடந்தைகள் கடல்களின் அரசிகள் தான்
  மண்ணும் பொன்னும் அவர்க ளுரிமை
கடவுளில் பாசமும் வீர மிக்காள்
  காளி பராசக்தி மேல் ஆணை உரைப்பேன் !
நடந்திடும் நன்மைகள் யாவையுமே
  நற்பெண்மை இனத்தினைச் சாறுமய்யா

நடக்கப் போகும் தீமைகளும்
  நங்கைகள் நினைத்தால் தடுத்திடலாம்
விடத்துக்கும் மருந்து இவர்களிடத்தே
  விளைந்திடும் இதனைக் கேளுமய்யா
உடலினைத் தாண்டி பெண்ணுக்குள் நல்ல
  உணர்வுகள் உண்டு பாருங்கள் அய்யா !
முடக்குதல் பெண்களை எளிதல்ல வெறும்
   மூடச் சத்திரம் ஒன்று கொண்டு!!!

-விவேக்பாரதி
04.12.2013

Comments

Popular Posts