சும்மாவே சுற்றல் சுகம்

தமிழை நினைத்தே தரணி மறந்தேன்
தமிழை நிறைத்தேன் தலையில் - தமிழிலே
அம்மம்மா ஆயிரம் ஆசைக் கவிபாடி
சும்மாவே சுற்றல் சுகம் !

சட்டைக்கு உள்ளே சதைபோலே உள்ளாடை
சட்டைக்கு மேலின்னோர் சட்டையென்று - கட்டியே
இம்மாத வெய்யில் !  இருப்பதுவும் சாத்தியமோ ?
சும்மாவே சுற்றல் சுகம் !

உறவுகளே வேண்டாம் உணர்வை அடக்கும்
துறவுபோதும் என்று துணிந்தால் - பறவைபோல்
எம்மார்க்கம் நோக்கியும் எப்படியும் செல்லலாம்
சும்மாவே சுற்றல் சுகம் !

காக்கைக் குருவிகளே கண்வைத்தேன் உங்கள்மேல்
போக்கிடம் இல்லாமல் போகினும் - யாக்கையில்
அம்மாடி உம்போல் அழகிறகை நீட்டியேச்
சும்மாவே சுற்றல் சுகம் !

-விவேக்பாரதி
27.03.2015

Comments

Popular Posts