புத்தக அந்தாதி

புத்தகம் பலபுரட்டு சித்தம் தெளிவுறவே
உத்தமனாய் உன்னை மாற்றுவது புத்தகமே
வித்தகனாய் நீஆகப் புத்தகங்கள் தேவையாடா
கத்திபோல் புத்திக்கூர்மை புத்தகம்தரும் மறவாதே !

மறவாத புகழடைய புத்தகம் நண்பனாக்கு
திறந்து வைத்துக்கொள் மனக் கதவை
பறந்து திறந்திடு நூலக வானத்தில்
திறமை பெருகிடும் புத்தகம் தேவனடா !

தேவனடா புத்தகமும் நூலகம் அந்தத்தேவன்
பவனி வருகின்ற கோயிலடா மானிடனே
பாவம் கழுவிட தேவன்கால் பற்றிவிடு
சாவும் நெருங்காமல் புகழுடம்பில் வாழ்வாய் !

வாழும் பொழுதில் புத்தகத்தை நேசித்தால்
சூழும் உன்னை நன்மையடா ! மலைமேலே
வீழும் அருவிபோல் வெள்ளோட்டம் கொண்டதடா
தாழ்வு கானா புத்தகத்தின் கருத்துக்கள் !

கருத்து சிறப்பதற்கே நூல்கள் தழுவிடடா
வருமே நல்லெண்ணம் ! புத்தகப் பெண்ணவளும்
தருவாள் அறிவுவரம் நாட்டுக்கு அதுதேவையடா
குருவான புத்தகம் வாழ்கபல்லாண்டு தரணியிலே !

-விவேக்பாரதி
23.04.2014

Comments

Popular Posts