அன்பெனின்

பத்துமாதம் நமைசுமந்து பாசம் காட்டி
   பசிவந்தால் தன்ரத்தம் பாலா யூட்டி
சத்துபல சேர்ந்திடவே நமைவ ளர்த்துச்
   சந்தோஷப் படுமன்பு தாயின் அன்பு !
வித்தகனாய் நாம்வளர வெற்றிப் பதை
   விதவிதமாய் நிதம்காட்டி பெருமை கூட்டி
எத்திசையும் நமைப்புகழ வைக்கும் அந்த
   ஏற்றமுடைய பெருமன்பு தந்தை அன்பு !

நல்லவையே நம்மனதில் என்றும் வைத்து
   நலிவுகளை உளம்விட்டுக் களைந்து ! நித்தம்
வெல்வதற்காய் வழிவகுத்து நன்மை தந்து
   வெற்றிதரும் தூயன்பு ஆசா னன்பு !
வல்வினையால் கேடேதும் வந்தால் கூட
   வல்லதொரு சக்தியினால் அதனை நீக்கி
அல்லலினை அறுத்தேதான் அருளும் தந்து
   ஆருயிரைப் பேணுமன்பு ஈச னன்பு !

நெல்வயலை நிதமுழுது மணிவி தைத்து
   நன்னீரை நாள்தோறும் அங்கே ஊற்றி
நல்லுலகின் பசிப்பிணியை நீக்கி என்றும்
   நல்லவையே தருமன்பு உழவ னன்பு !
சொல்லினிதாய் சுவையினிதாய் நாளும் கட்டி
   சொப்பனத்தில் கற்பனைகள் எழுத்தில் சேர்த்து
எல்லையில் லாதமிழை பேணி யேதான்
   ஏற்றங்கொ டுக்குமன்பு புலவ னன்பு !

அழைக்காம லேவந்து மண்ணில் உள்ள
   ஆருயிர்கள் ஆயிரத்தை வளர்க்கத் தூவும்
மழையன்பு ! மறையன்பு ! மேகக் கன்னி
   மசக்கையில் பிறக்கின்ற இயற்கை யன்பு !
பிழையாக நட்புகொண்டு உள்ளொன் றுவைத்து
   புறம்பாக வேறொன்று பேசி நின்று
விழைவதெலாம் தீமையினை விளைக்க எண்ணி
   விதித்துன்பம் தருமன்பு செயற்கை அன்பு !

பனித்துளியும் புல்மேலே கொண்ட அன்பு
   பாசாங்கே இல்லாத பசுமை யன்பு
இனிப்புடைய தேன்துளியும் மலரின் மேலே
   இயல்பாகக் கொளுமன்பு இனிமை அன்பு !
நனிபசுவும் பால்போழிந்து நவில்வ தெல்லாம்
   நன்றிஎதிர்ப் பார்க்காத நன்மை அன்பு
கனியொத்தத் தமிழ்மொழியின் கவிதை எல்லாம்
   காரிருளைப் போக்குகின்ற தனிமை அன்பு !

தன்மனதில் துயர்வந்து ஆட்கொண் டாலும்
   தனக்குள்ளே அதைமறைத்து ஊரார் சிரிக்க
என்னென்ன வோசெய்யும் கோமா ளிகளும்
   எப்பொழுதும் காட்டுமன்பு ஈடில் அன்பு !
என்கவிதை முற்றிற்றே அதுவும் இங்கே
   எழில்தமிழில் சொல்வதெல்லாம் ஒன்று தானே !
இன்னுலகில் அன்பென்ப தெல்லோ ருக்கும்
   இன்றியமை யாதமையும் கேடில் செல்வம் !

-விவேக்பாரதி
08.11.2014

Comments

Popular Posts