வானம்

புத்திக்கும் சக்திக்கும் எட்டாத தூரத்தின்
   பூங்கா வானம் !
எத்திக்கும் விரிந்திருக்கும் பூஞ்சோலை ! சூரியனும்
   ஏறி நிற்க
மத்திக்கு மஞ்சளுறும் ! மாலையிலே சிவப்பாகும் !
   மறைந்த பின்போ
முத்துக்கள் பூத்திருக்கும் இருள்வானம் ! அதன்சோதி
   முழுமை வெள்ளி !

மேகங்கள் மிதக்கின்ற நீலநிறப் பெருங்கடலாம் !
    மேளம் கொட்டி
ராகங்கள் இசைக்கின்ற பூபாளம் எல்லாமே
   ராவின் வண்ணப்
போகங்கள் கொண்டிருக்கும் மழைமேகம் காட்டுகின்ற
   பொம்ம லாட்டம் !
மோகங்கள் கூட்டுகின்ற வானவில்லும் கண்ணுக்கு
   மோட்ச மாகும் !

எல்லையதும் இல்லாத எழில்வண்ணப் பாய்விரிப்பை !
   என்றும் வானை
வல்விரைந்து படமெடுக்கும் புகைப்படக் கருவியது
   வாளாம் மின்னல் !
சொல்லுபொருள் யாவிலுமே உயர்ந்ததுகாண் வானந்தான்
   சொர்க்க வாசல் !
கொல்லு(ம்)விதம் அதில்புகையைக் கலந்துவிட்டு  தீமைதனைக்
   கொள்ளல் வேண்டா !

-விவேக்பாரதி
20.10.2015

Comments

Popular Posts