காதலர் தினம்

வாராய் காதல் கொண்டாடக்
கண்கள் காதலில் திண்டாடக்
காதில் தென்றல் வந்தாடச்
செந்தமிழ் நாவில் பந்தாட

நீ காதல் கண்ணாலே வந்து
கனிமொழி பேச
நெஞ்சோடு சங்கீதம்
தான் வீசும் !

என் கண்மணியே
அல்லிப் பூ தேனே !
உன்னைக் கண்டு
உருகினேன் நானே !

காதல் என்பது நமக்கு இறைவன்
கடின உழைப்பாளி கட்டிடக் காரன்
காரணங்கள் உண்டு அன்பே
கேட்டிடுவாய் இன்று

நம் கண்கள் நான்கு வழி
துளைகள் அமைத்து
உள்ளே ஊடுருவி
சுரங்கம் சமைத்து
மனது இரண்டையுமே
ஒன்றினைத் தானவன்
பாலம் கட்டியே !

காதலுக்கு ஒரு கோயில் உண்டா ?
கண்கள் தவிர வேறு வீடு உண்டோ ?
தாஜ்மகாலைப் பார்த்தால் கூட
உந்தன் சாயலில் தோன்றும் !

காதலினால் உயிர்கள் வாழும்
காதலித்தால் துன்பம் வீழும்

காத்திருக்கும் சுகத்தில்
பூத்திருக்கும் ஜகமே
கண்களைக் காட்டுது உந்தன்
காந்தள் பூவின் முகமே

உன் காதல் மொழிகளும்
எத்திக்கும் பரவித்
தேனைப் போலவே
தித்திக்க !
காதலர் தினமும்
புத்திக்குள் புது
கலைகள் பலவற்றை
கற்பிக்க !

-விவேக்பாரதி
14.02.2014

Comments

Popular Posts