நாலடிப் பின்னல்

"செஸ்டினா" என்னும் ஆங்கிலப் பாவின் வடிவமானது இறுதியில் இருக்கும் இயைபுத் தொடைகளை மாற்றி மாற்றிப் போட்டு மாயம் செய்வது போல இருக்கும். அந்த முயற்சிக்கு "இணையச் சான்றோர்" சந்தவசந்தக் குழுவினர் இட்ட பெயர். "பின்னல்".


கங்கைக்காய்ப் பொற்சடையை விரித்தான்
மாறனவன் முப்புரத்தை எரித்தான்
சங்கைத்தன் காதினிலே தரித்தான்
விளையாடல் பலசெய்து சிரித்தான் !  (சிவன்)

அன்னையையே ஏமாற்றிச் சிரித்தான்
அண்டத்தை வாயினிலே விரித்தான்
பொன்மேவும் ஆடைகளைத் தரித்தான்
பொய்யரக்கர் கூட்டத்தை எரித்தான் ! (கண்ணன்)

மனதினிலே வஞ்சமதை எரித்தான்
மலைப்பிரசங் கஞ்செய்து சிரித்தான்
தனதுடையாய்க் கந்தலையே தரித்தான்
தாராள அன்பினெல்லை விரித்தான் ! (இயேசு)

கடவுளவன் பேச்சுகளை விரித்தான்
காரிருளாம் அறியாமை எரித்தான்
உடலினிலே அரபுடைகள் தரித்தான்
ஊர்சேர்ந்து எதிர்க்கையிலும் சிரித்தான் ! (நபி)

நன்மைகளை விரித்தான் ! நலிவுகளை எரித்தான்
இன்பமதைத் தரித்தான் ! இன்னமுதாய்ச் சிரித்தே !

-விவேக்பாரதி
25.05.2015

Comments

Popular posts from this blog

மரகதப் பஞ்சகம்

மாதங்களில் அவள் மார்கழி

கவிதை ஆண்டாள் - 1