வள்ளியும் முருகனும்

கொள்ளையி ராவினிலே - இதழ்க்
   கொஞ்சுஞ்சு வைமது தான்குடித்து
வள்ளிமு ருகனிடம் - ஒரு
   வரந்தர வேண்டுது மென்றுரைத்தாள் !
கள்ளச்சி ரிப்பழகன் - அவள்
   காதின ருகினில் சென்றுவிட்டு
உள்ளத்தே உள்ளதெலாம் - மிக
   உன்னதத் தோடிங்கு ரைத்திடென்றான் !

வஞ்சியு மங்குடனே - அவ்
   வரந்தனைத் தந்திடு முன்பெனக்குக்
கொஞ்சமிக் கேள்விக்குத்தான் - விடை
   கொடுத்திட வேண்டுது மென்றுரைத்தாள்
கொஞ்சுந்த மிழ்த்தலைவன் - அதைக்
   கொடுக்கிறே னென்றங்கு சம்மதிக்கப்
பிஞ்சுப்பி றைநுதலாள் - மனம்
   பித்தைய டைவது மெப்போதென்றாள் ?

வேலாயு தக்கடவுள் - இதை
   வேகமாய்க் கேட்டதும் நகைத்துவிட்டான் !
பாலால்ம யங்குவதோ - சிறு
   பசுவதன் கன்றிற்கு பித்தென்குவார்
நூலால்ம யங்குவதோ - மதி
   நுண்ணிய வர்கொளும் பித்தென்குவார் !
கோலால்ம யங்குவதோ - முடிக்
   கோமகன் கொண்டிடும் பித்தென்குவார் !

மேதினி மேலொருவன் - மதி
   மேன்மையல் லாதுபி றபொருள்மேல்
காதலைக் கொண்டுவிட்டால் - அது
   காட்டிடும் பித்தெனு மந்நிலையை !
நூதனக் காவியமே - உன்
   நூலிடை மேலொரு காதலடி
ஆதலால் நானுமிங்கே - வனத்
   தாடிடும் பித்தனே யென்றுரைத்தான் !

கேட்டவள் அங்குடனே - நான்
   கேட்ட வரத்தைக்கொ டுக்கவென்றாள்
பாட்டுக்கோர் பேரழகன் - அதைப்
   பகருக தந்திடு வேனேயென்றான் !
காட்டிலென் றனுடலோ - சிதைக்
   கட்டினில் வெந்திடும் நாள்வரையில்
நாட்டுக என்றனுக்குள் - நினை
   நாளுந்தொ ழுதிடும் காதலைத்தான் !

எந்நிலை யேகினுமே - உனை
   ஏந்திடும் எண்ணம ழிந்துவிடா
அந்தநி லைதனையே - எனக்
   ருளிட வேண்டுது மென்றுரைத்தாள் !
செந்தமிழ்க் கோமகனும் -அருள்
   செய்கிறேன் என்றஅம் மாத்திரத்தில்
வந்தவன் மார்பினிலே - குற
   வள்ளியுஞ் சாய்ந்தங்கு முத்தமிட்டாள் !

-விவேக்பாரதி !
02.04.2016

Comments

Popular Posts