என்னவள் கூந்தல்

என்னவள் கூந்தலிலே - நித
   மேறித்தி ரிந்துற வாடிடவே
இன்னுயிர்ப் பூக்களெலாம் - தனி
   இச்சைகொண் டேங்கிடும் பாரினிலே
பொன்மகள் பூங்கழலில் - எழில்
   போதைநி லையிலி ருந்திடவே
என்கவிச் சொற்களெல்லாம் - தவம்
   ஏற்றிக்கி டக்குது தீயினிலே !

கண்ணிமைக் காவலிலே - சிறை
   காத்துக்கி டந்திட என்னுயிரும்
தெண்டனிட் டேங்குதுவே - வழி
   தேடியே கண்களும் ஓடுதுவே !
பெண்ணவள் நெஞ்சத்திலே - நகைப்
   பேழையைப் போலுறும் புன்னகையில்
மொண்டுகு ளித்திடவே - உயிர்
   மொத்தமு மேங்கித் திரியுதுவே !

-விவேக்பாரதி
 28.04.2016

Comments

Popular Posts