வாணிக்கு மடல்

வீணை கரத்தாளே விசயத்தின் உட்பொருளே
தேனை யொத்த கல்வி தேவையம்மா என்றனுக்கு
 
யானை அளவினதாய் யாத்திடுவாய் கல்வியைத்தான்
மீனைப் போல் சிறிய மிச்சமெல்லாம் வேண்டாமே !

சேனை ஆயிரம் பேர் சேர்ந்தே எதிர்த்திடினும்
ஆணை அதிகாரச் செல்வம் எதிர்த்திடினும்
 
தூணைப் போல் கல்வி தூக்கிவிடும் என்றுணர்ந்தேன்
மானைப் போன்ற நடை மருளும் பனிப்பார்வை !

நாணைப் போன்ற இடை நாவினிக்கப் பேசுமொழி
ஏனைய அழகெல்லாம் எடுத்துருவம் கொண்டாயே

பானை பானையாய் எனக்கு பகிர்ந்திடு கவியமுதை
பூனை பால் குடிப்பதுபோல் பூரணமாய்க் குடித்திடுவேன் !

ஊனை மையாக்கி உள்ளதைக் கோலாக்கி
வானை ஏடாக்கி வடித்திடுவேன் வாழ்த்திதுவே !

-விவேக்பாரதி 
03.10.2014

Comments

Popular Posts