செந்தமிழும் பத்தலையே

காலையில எந்திரிச்சு
காவாளி நீர்தெளிச்சு
சாலையில கோலமிட
சாணி மொழுகிவைச்சு

சோலையில செம்பருத்தி
பூவோன்ன தான்பறிச்சு
சேலையோட நீவருவ
சென்பகமே நினைவிருக்கா !

ஆத்தங்கர ஓரத்தில
ஆருமில்லா நேரத்துல
காத்திருப்பான் என்மாமன்
என்றே சொல்லிவிட்டு

காத்தவிட வேகமாக
கொலுசுசத்தம் ராகமாக
தத்தித்தத்தி ஒடிவருவ
தங்கமே நினைவிருக்கா !

மத்தியான வேளையிலே
மன்னடுக்கு தூக்குகட்டி
சத்தான பழையசோறு
சாரமான மிளகாயும்

மெத்தையான உன்னுதட்டுச்
சாறையுமே கலந்தேனக்கு
முத்துபோல ஊட்டுவ
ரத்தினமே நினைவிருக்கா !

கந்தத்துணி நானுடுத்தி
கட்டாந்தரை படுகையில
மந்திரி மவநீயும்
அப்படியே செய்திருப்ப

சுந்தரிநீ கண்ணுறங்க
ஆராரோ பாடிவெச்சேன்
செந்தமிழும் பத்தலையே
 சொல்லுகண்ணே என்னசெய்ய ?

-விவேக்பாரதி
07.05.2014

Comments

Popular Posts