நாட்டுப்புறப் பொங்கல்

தை மாசம் பொறந்ததடி
தங்க மகளே ! நாம
வைக்கணுமே பொங்கப் பாண
தங்க மகளே !

கையிலே ஏர் பிடிச்சு
காலத்தான் சேத்தில் வச்சு
வையத்துக்கே சோறு போடும்
விவசாயி மக்களை தான்
கைகூப்பி வணங்கனுமே
தங்க மகளே !

கோலவ போட்டு
பொங்க வைப்போம்
தங்க மகளே !

உலகாளும் சூரியனக்
கூட்டிவாரேன்
தங்க மகளே !

பால தரும் பசுவுக்கும்
பட்ட கட்டி கொம்பு சீவி
காளைக்கும் வண்ணம் தீட்டி
கடவுளா வணங்கிடுவோம்
தங்க மகளே !

வீரத் தமிழ் மண்ண நாம
உசுராக நனைச்சு கிட்டு
சீரோடும் சிறப்போடும்
போங்க வைப்போம்
தங்க மகளே !

தாராளத் திடல வெச்சு
காளைகள ஓட விட்டு
மார் விரித்து தோள்தூக்கி
அதை அடக்கி விளையாடிடுவோம் !
சேர சோழ பாண்டியனா
வாழ்ந்த வீரம்
தங்க மகளே !

அரும்பு பூவே
தங்க மகளே
ஆசை முத்து ரத்தினமே !
கரும்பு தின்னு
தங்க மகளே
காதில் சிமிக்கி ஆடட்டுமே !

துரும்பு இடுப்புல
ஒட்டியாணமும்
கழுத்துல சங்கிலி பாடட்டுமே !
கருப்பு நிறக்
குயிலப் போல
சக்கரப் பொங்கல் இனிக்கட்டுமே !

பொங்கட்டும் பொங்கட்டும்
சந்தோசம்
எல்லா திக்கிலும்
பொங்கட்டுமே !
தங்க மகளே
நீ தாவனியில
தாவி ஆடுற அழக பாத்து !
சிங்கமாமன் என் மீசயில 
பொண்ணு ஒட்டுதடி மாணிக்கமே !

சிங்காரி நம்ம நிலத் தம்மா
விவசாயம் செழிக்க வாழ்த்திடுவா !
சங்கத் தமிழும் வாழ்ந்திடுமே
தை பொறந்தாலே
வழி பொறந்திடுமே !

-விவேக்பாரதி
11.01.2014

Comments

Popular Posts