இது காணிக்கை

உன் விரலுக்குள் என் வாழ்வு
எனது நடைவண்டி நீ
கரிசனக் களிம்புகாரன் !

நீ தண்டித்தும் கண்டித்தும் எனக்காய்
உன் வலியில் தானே
என் விடியல் !

கொஞ்சம் உயர்ந்த சுருதியில் நானும்
மெல்ல அழுதேன் பரிசு
பாலாய் உன் ரத்தம் !

பத்து மாதங்கள் எனக்காக உன் தவம்
விளைவாய் நான் ! வரமென்றே
நீ சொல்வாய் !

மெல்ல நீயும் தாலாட்டுப் பாட
நானும் முனுமுனுத்தேன் ! சுகமாய்
உறங்கியது தொட்டில் !

என்னையும் கொஞ்சினாய் கண்ணே கனியே
தோற்றுப் போனது தாயே
கம்பன் கவி !

சலதோஷ அரக்கன் மூக்கைப் பற்றிவிட
சங்கிலே அணைத்து ஊட்டும்
கசாயம் அமிர்தம் !

உனக்குள் நான் இருக்க நீயோ
வாந்தி எடுப்பாயே ! எனக்குள்
முளைக்கும் மயிர் !

சாதத்தை மையக் குழைத்து கொஞ்சம்
சத்தான நெய்யும் இட்டு
ஊட்டுவாய் விருந்து !

வாழ்வெல்லாம் என்னைத் தாங்கச் சபதம்
சூளுரைத்தாயே தாயே உனக்கு
இது காணிக்கை !

-விவேக்பாரதி
10.08.2014

Comments

Popular Posts