வெண்பா

கட்டழகு கொண்ட கவியழகி வெண்பாவே
தட்டும் தளைகளும் தானாக - ஒட்டிவரும்
ஓசை நயங்களுமே ஓரழகு ! என்னுடைய
ஆசைக் கொருத்தியே ! ஆம் !

இயற்சீரின் வெண்டளையில் இன்முகம் காட்டி
வியப்பினில் ஆழ்த்துவாள் ! விந்தை ! - நயத்துடனே
ஈற்றடி கொண்டினிதாய் இன்சுவை தந்திடுவாள்
போற்றடி இங்கிவளும் பொன் !

வெண்சீரில் கன்னங்கள் வெண்ணைபோல் லாவகமாய்த்
தொண்டைக்குள் சென்றிடும் தொய்வுடையாள் - பண்டைப்
பழமைக்கும் ஆவாள் புதுமை புகுத்தப்
பழமாகக் காய்ப்பாள் பழுத்து !

அணிபலவும் தன்னுள்ளே ஆக்கிடுவாள் ! நல்ல
மணிமணியாய்க் கற்பனையில் பூப்பாள் ! - பணிந்துவிடில்
தன்னழைகை முன்னழகைத் தானொளிரக் காட்டுவாள்
மின்னலிடை ஆர்க்கும் மிளிர்ந்து !

அழகுகொஞ்சும் பெண்ணாய் அருள்மே கலையும்
பழகும் தனிச்சொல் இடையாய் ! - பழமின்றிக்
காய்மட்டும் காய்க்கும் கவித்தொட்ட மென்முலையாள்
போய்பரு கின்பம் பொலிந்து !

செப்பலோசை கொண்டேதான் செல்லும் நடையுடையாள்
ஒப்புமிலாள் செந்தமிழின் ஒண்பாவில் ! எப்போதும்
தன்வழி ஒன்றே தனிவழி என்றுசெல்வாள்
என்றுமிவள் ராணி எனக்கு !


-விவேக்பாரதி
22.05.2015

Comments

Popular Posts