தவறன்று !

இலக்கியத்தின் வீதிகளில் நடக்கும் போது
   இருக்கின்ற பலபேரை பார்க்க நேரும்
மலர்விரிக்குந் தமிழியினையே மனதில் கொஞ்சம்
   மரியாதை ஏதுமின்றி ஈன மாக
இலகுமொழிக் கவிஞரென சொல்லிக் கொண்டே
   இழவுபடு கொலைசெய்யும் ஈனர் காண்பாய் !
உலகினிலே இவ்வாறு செய்வார் தம்மின்
   உயிர்கொய்வோம் தவறன்று வாடா தம்பி !

தமிழுக்குத் தமிலென்பார் பள்ளி என்றால்
   தளராமல் பல்லியென்று எழுதச் செய்வார்
அமிழ்தொத்த பழத்திற்கு பலமென் றிங்கே
   அழகாக எழுதிவைப்பார் அறிவி ழந்தார்
குமரனைக் குமறனென்பார் தண்ணீ ரென்றால்
   குற்றமுடன் தன்னீரென் றெழுதி வைப்பார்
அமரநிலை காணுவரோ இவரும் அங்கே
   அழகாக வாழுவரோ அழிந்து போவார் !

எழுதுகையில் பிழைவந்தால் இயற்கை என்பார்
   எடுக்கின்ற உணவினிலே கல்லி ருந்தால்
முழுதாக நீக்காமல் இயற்கை என்று
   மொழிவாரோ சொல்தம்பீ மொழியே என்றும்
தொழுதிடத்தான் வேண்டுபொருள் இஃது ணர்ந்தும்
   தொடந்தவரும் பிழைசெய்தால் வாடா தம்பி
எழுந்திடடா கையிலினிலே தமிழின் வீர
   எழில்கொண்ட கவிதையெனும் வாளெ டுப்போம் !

கலையுடைய தமிழ்மொழியைத் தவறா கத்தான்
   காகிதத்தில் ஏடுகளில் எழுது வோரின்
தலைகொய்ய வயிரத்தின் வாளும் வேண்டாம்
   தமிழர்கை கவிவாளே போதும் வாடா !
கொலைசெய்வோம் தமிழுள்ளே பிழைக ளைத்தான்
   கொணர்வோரை ! அப்பொழுதே தமிழும் வாழும் !
தலையான நெல்லிடையே தவறு கொண்ட
   தாவரமாம் புல்வளரக் கொல்லல் தீதோ ?

-விவேக்பாரதி
19.07.2015

Comments

Popular Posts