மீண்டும் வானம்பாடி

முதலாளித் துவமொழிந்து சமத்து வத்தின்
   முதுமொழிதான் வையமெலாம் நிறையு தற்கும்
நிதமேழை மக்களது உலையும் பொங்கி
   நித்திலம்போல் நல்வாழ்க்கை நிலைப்ப தற்கும்
மதயானை போல்வளர்ந்த ஊழல் பேய்தான்
   மண்ணிதையும் விட்டொழிந்து போவ தற்கும்
பதமாக இறக்கைகள் விரித்து மீண்டும்
   பாவலர்கை சேரவேண்டும் வானம் பாடி !

மனிதநேயம் பனைமரமாய் வளர்ந்து ஓங்கி
   மரியாதை மானிடருள் காண்ப தற்கும்
தனிமனித எண்ணத்தை போக்கி எங்கும்
   தமிழொளியை அண்டமெலாம் பாய்ச்சு தற்கும்
கனியொத்த தேன்கவிகள் நாளும் செய்து
   காலமெலாம் நிரந்தரமாய் இருப்ப தற்கும்
இனிதாகத் தானமைந்த வானம் பாடி
   இனிமீண்டும் பிறக்கவேண்டும் கானம் பாடி !

- விவேக்பாரதி
03.07.2014

Comments

Popular Posts