நான் செய்த பீட்ஸா

நானே செய்த பீட்சாதான்

பீட்ஸா என்னும் இதனைத்தான்
   பிரியத் துடனே நான்செய்து
காட்டிக் காட்டித் தின்னுகிறேன்
   கவிதை சுவையால் பண்ணுகிறேன்
காட்சி கொண்ட நான்கினிலே
   கடைசி என்றன் கடைவாயில்
மாட்டிக் கொண்ட காரணத்தால்
   மூன்றை முன்னே வைக்கின்றேன் !

அம்மா வுக்கும் இதிலொன்று
   அப்பா வுக்கும் இன்னொன்று
தம்பிக் கிதிலே சிறுபங்கு
   செய்த எனக்கே பெரும்பங்கு
சும்மா இருக்கும் வேளையிலே
   சுடவைத் திதனை உண்பதுவே
உம்முன் பாடும் என்றனுக்கு
   உரிய பொழுது போக்கறிவீர் !

காணும் ரொட்டி கடைகளிலே
   கிடைக்கும் பத்து ரூபாய்க்கே
நாணின் நிறமாய் சிவந்துநிற்கும்
   நல்ல மசாலா நான்செய்தேன்
பூணும் அதனின் வெள்ளைநிறம்
   பூசும் பாலா டைக்கட்டி
வேணும் என்று யாவருமே
   வேண்டும் சுவையை நல்கிடுமே !

தோசைக் கல்லில் தான்செய்தேன்
   தோய விட்டேன் மிளகுப்பொடி
மேசை தன்னைக் கண்டாலோ
   மேதி னிபோலே குப்பைமயம்
ஆசை வந்து பாய்ந்திடவே
   ஆக்கி வைத்த பண்டமிதை
ஓசை நயமும் ததும்புகின்ற
   ஒண்பா சொல்லிப் பாடுகிறேன் !


-விவேக்பாரதி
05.07.2015

Comments

Popular Posts