குழந்தைத் தொழிலாளர்

எங்களைப் போலவே மண்ணில் - துயர்
   ஏறிக்கி டப்பவ ருண்டோ - உடல்
மங்கிடு மேநிலா வென்றால் - யாம்
   மண்ணில்நி லாவென வாழ்வோம் - நிதம்
தங்குதற் கோரிட மில்லை - பசித்
   தண்டனைக் கும்முடி வில்லை - எமை
இங்குபி றந்திட செய்து - மிக
   இன்னல்கொ டுத்ததேன் தேவீ !

பள்ளிப்ப டிப்பினி லாசை - அதில்
   பாங்குடன் தேறிட ஆசை - மதி
துள்ளித்தி ரிந்திட ஆசை - வரும்
   துக்கம்ம றந்திட ஆசை ! - எனில்
பிள்ளையை நம்பியெம் பெற்றோர் - உயிர்ப்
   பிஞ்சினைக் காத்திருக் கின்றார் - அவர்
சள்ளைகள் நீக்கிட வேண்டும் - பணி
   செய்திட வேண்டுமே நாங்கள் !

மேனிவ லித்திட இங்கே - யாம்
   மேலான வேலைகள் செய்வோம் - மரத்
தேனிக்கு முண்டடா ஓய்வு - எம்
   தேகத்துக் கெங்கிலு மில்லை - அட
வானுல வும்முகில் போலே - மழை
   வாரிச்சொ றியுமெம் கண்கள் ! - புகழ்
நானில மக்களே பாரீர் - இங்கு
   நாங்களும் பிள்ளைக ளன்றோ ?

எந்துயர் தீர்வது மென்றோ - புவி
   எங்களுக் காவது மென்றோ ? - எழில்
நந்தவ னத்தினில் நாங்கள் - மணம்
   நல்கிடும் பூக்களுக் கூடே - தினம்
தங்கியே வாழ்தலு மென்றோ - செழித்
   தாரென வாழ்வது மென்றோ - நலம்
பொங்கிடும் வையக மக்காள் - கொடும்
   போக்கிதை யேற்பதும் நன்றோ ?

-விவேக்பாரதி
28.04.2016

Comments

Popular Posts