மதுவிலக்கு

மதுவி லக்கு வேண்டும் வேண்டும்
   மண்ணில் யாரு மின்புற
மதுவி லக்கு வேண்டு மிங்கு
   மகிழ்ச்சி வந்து சேரவே
மதுவி லக்கு தேவை பாரில்
   மதிவ ளர்ந்தே ஓங்கிட
மதுவி லக்கு தானே யிங்கு
   மனித ருய்யும் மார்க்கமே !

குடிவ ளர்க்கும் ஆண்க ளிங்கு
   குடிப்ப ழக்கத் தீமையால்
குடிகெ டுக்கும் பண்பை யிங்கு
   குறித்து வைத்துப் போக்கவே
துடிது டிப்புந் தூரம் போக
   துன்ப மதுவி லக்குவோம்
மடிய வேண்டும் மதுப்ப ழக்கம்
   மக்கள் நீடு வாழவே !

வந்து சேர்மின் பார தத்தின்
   வாகை சூடும் வீரர்காள்
முந்தி வந்து தமிழ கத்தில்
   முள்ளென் றாகும் மதுவினை
நிந்தித் தென்றும் நினைவை விட்டு
   நீக்க வந்து சேருவீர்
எந்தத் திக்கும் எழில்வி ளங்க
   ஏற்க அரசு மிஃதையே !

-விவேக்பாரதி
02.08.2015

Comments

Popular Posts