சக்தி வேல்

எந்நாளும் உன்பேர் சொன்னாலே போதும்
    என்வாழ்வு மிங்கே எழிலாகும்
 பொன்னாரம் பூண்ட மின்னாடும் மேனி
    என்வாழ்வைச் சேரும் அருளாகும்
செந்தாழம் பூவைக் கண்டாடும் கொங்கை
    கொண்டாயே தாயே உமையாளே
 உன்னாசி அன்றி வேறெந்த ஜோதி
    என்பாவைக் காக்கும் ஒளியோசொல் !
சிந்தோடு சந்தம் வந்தாடும் வண்ணம்
    என்னோடு நல்கு தமிழாறை
 முன்னோர்கள் போற்ற முன்னேகி நானும்
    பொன்னான பாக்கள் பலபாடக்
கந்தோனின் கையில் அன்றோர்நாள் தாயே
    தந்தாயே வேலை அதுபோலே
 உன்சேயா மென்றன் கையோடு நீயும்
   தந்தாலே போதும் கவிவேலை !

-விவேக்பாரதி
02.05.2015

Comments

Popular Posts