இறைமனு

விண்ணாளும் என்னிறைவா இங்கேநான் சொல்வதுகேள்
எண்ணத்தோ(டு) எனைகவிதை எந்நாளும் வடிக்கவிடு
மண்ணிலுள்ளார் எல்லோரும் எனைவியக்கக் கவிபாடி
புண்ணியம்தான் எய்திடவே பொழிந்திடுவாய் பேரருளே !

காசுக்காய் கவிபாடி காலம்நான் கழிக்காமல்
தூசுநாட்டை துடைத்திடவே கவிவடிக்கச் செய்திடுவாய்
மாசுமில்லா உள்ளமதை உள்ளபடி கவிதையிலே
நாசுக்காய் நானெழுத நல்கிடுவாய் பக்குவமே !

இதுபுதிது அதுபுதிது என்றெல்லாம் ஆயிரம்பேர்
பொதுமொழியாய்ப் பொன்மொழிகள் பலநூறு மொழிந்திடவே
புதுபுதிதாய் கவிகளைநான் பூரணமாய் எழுதிவிட
மதுவேனவே உன்னாசி ஊட்டிடுவாய் இறையவனே !

நானிறந்து உன்னடியை உடனேயே சேர்ந்தாலும்
தானிறவா தென்னாளும் என்பேரை சொலும்கவிதை
நானிரந்து உனைகேட்க அருளதனை சாற்றிடுவாய்
ஏனிறந்தான் இவன்னென்று எல்லோரும் ஏங்கிடவே !

இப்பொழுது நான்கேட்ட வரங்களைநீ தந்திட்டால்
தப்புகளே வந்திடாத நல்வாழ்கை வந்திட்டால்
எப்போது நானங்கே வந்துசேரும் நாள்வருமோ
அப்பொழுதே அடியேன்நான் போற்றிடுவேன் உன்றனையே !

-விவேக்பாரதி
04.10.2014

Comments

Popular Posts