தூங்கட்டும் துளி

தூங்கட்டும் தூங்கட்டும் புல்லின் மேலே
   துளிபனியும் அறைமாதக் குழந்தைப் போலே
ஏங்கித்தான் அழவேண்டும் அதுவும் இங்கே
   எழுந்திட்டால் அதனாலே தூங்கி டட்டும் !
வாங்கித்தான் ஆகவேண்டும் காசுக் கன்பை
   வாழ்ந்திடவே மற்றாரைப் பொய்பு கழ்ந்துத்
தாங்கித்தான் ஆகவேண்டும் ! மானம் வெட்கம்
   தளர்த்தித்தான் வாழவேண்டும் உலகில் இன்று !

கண்விழித்தால் பனித்துளிக்கு மாசி னாலே
   கலங்கல்தான் ஏற்படுமே ! அதுவும் சற்று
மண்ணில்தான் விழுந்துவிட்டால் மண்ணை அள்ளும்
   மதிகெட்டோர் அதற்குஊறு செய்யக் கூடும் !
விண்ணாளும் சூரியனே உடனே வந்து
   விழுங்கிவிடு பனித்துளியை ! இதனைச் செய்தால்
கண்விழிக்கும் முன்னாலே சொர்கம் சென்று
   கடவுளவன் காலடியில் தூங்கி விடுமே !

-விவேக்பாரதி
15.09.2014

Comments

Popular Posts