ரமலான் வாழ்த்து

நெஞ்சகத்தே எரியும் பக்தி
   நெருப்பினையே பெரிதென் றெண்ணி
பஞ்சமேனும் நிலைக்கண் டிட்ட
   பாமரனாய்ப் பசிபொ றுத்தே
நஞ்சகற்றும் எச்சில் கொண்ட
   நபியடியை நின்று போற்றி
விஞ்சுபுகழ் கொளுமிஸ் லாமின்
   வீரர்க்கென் ரமலான் வாழ்த்து

அல்லாவே கடவுள் அன்னார்
   அருள்வாக்கே வேத மென்று
சொல்லாடி மெக்கா சென்று
   சொற்களிலே அல்லா நாமம்
நில்லாதே மொழியும் நல்லார்
   நிசமின்றி வேறு சொல்லார்
அல்லல்பேய்ச் சாத்தான் நீக்கும்
   அருளார்க்கென் ரமலான் வாழ்த்து !

ஒருமாதம் நோன்பி ருந்தே
   ஓரிறைவன் அல்லா தம்முள்
வரும்பிழைகள் யாவும் நீக்கி
   வாழ்த்துரைக்க வேண்டி நின்றே
ஒருவேத மென்று குர்ஆன்
   ஓதிடுவார் இசுலா மத்தின்
திருவாளர் யாவ ருக்கும்
   தித்திக்கும் ரமலான் வாழ்த்து !

-விவேக்பாரதி
17.07.2015

Comments

Popular Posts