புதுப்பள்ளி எழுச்சி

காலை புலர்ந்தது கருவானம் வெளுத்துச்
சாலை தெரியத் தொடங்கியு மாச்சே!
சேவல் துயிலும் எழுந்து ஆதவனை
கூவல் செய்து அழைத்து மாச்சே !
ஊருக் குள்ளே உழவனு மெழுந்து
பாருக் குணவுசெய்யக் கிளம்பியு மாச்சே !
புல்லிடை தூங்கிய பனித் துளியும்
மெல்லக் கண்கள் திறத்து மாச்சே !
கோயிலில் சுப்பிர பாதம் ஒலிக்க
வாயிலில் பால்காரன் பால்பாட் டாச்சே !
நாளிதழ் வந்தது ! தெருக்களில் இங்கே
வாளிகள் சண்டையும் ஆரம்ப மாச்சே !
மொட்டு மலர்ந் தாச்சே ! பாலும்
சுட்டு கொதித்து காபியும் ஆச்சே
வாக்களித்த மக்கள் தம்மால் இருளும்
நீக்கிடச் செய்யும் நல்லுதய மாச்சே !
மங்கள நாதம் எங்குமே கேட்க
திங்களு முறங்கித் திசைபெயர்ந் தாச்சே !
ரோட்டில் வாகனம் ஓட்டம் பிடித்து
நாட்டை மாசுபடுத் தத்தொடங்கி யாச்சே !
மின்சார ஒளிகள் குறைந்து ! உலகின்
விண்சார வெளிச்சம் பரவியு மாச்சே !
இல்லங் களின்வாசல் கோலப் பூக்களால்
பல்லைக் காட்டிச் சிரிக்கவும் ஆச்சே !
பள்ளி முடிந்ததும் தலைவி மெத்தைவிட்டு
துள்ளி எழுந்திட்டு தலைமுழுகி யாச்சே !
சந்தைக் கடைகளில் விற்பனை தொடங்கி
மந்தைக் கூட்டமும் மேயப்போ யாச்சே !
இன்னும் துஞ்சிய நிலையா ஏன்கூறு
அன்னை தமிழ் நாடே ! நீயும்
மோனத் திருக்கும் நிலைவிட்டு மெல்ல
வானத் திடலைப் பார்த்து சிலிர்த்து
துள்ளிதிருப் பள்ளிஎழுந்து அருளாய் ! தாயே
தெள்ளு தமிழால் உனைபாடும்
இப்பிச்சைக் காரனின் பாடல்கேட் டெழாயே !

விவேக்பாரதி
25.04.2014

Comments

Popular Posts