ஹைக்கூ

சிந்தடியில் வந்தே சிரிக்கின்ற பேரழகி
சந்தங்கள் சிந்துவதில் சிந்துநதி - சொந்தஊர்
சப்பானாம் கேளீர்; பெயர்கேட்டால் ஹைக்கூவாம்
இப்போ(து) இவள்தான் கவி !

தொட்டவனை எல்லாம் துலங்கிட வைத்திடும்
கட்டுகள் இல்லாக் கவிக்குதிரை; - மொட்டுமலர்
பூக்கும் வனப்பினையும் காதலையும் தன்னுள்ளே
ஆக்கும் அழகே அழகு !

காதல் அடைந்தவனின் போதைக் கிறுக்கலாய்
சாதனை செய்கின்ற சொல்லழகி - தூதனுப்பத்
தற்போ(து) உகந்த பொருளென்றும் சொல்லுகிறார்
அற்புதப்பெண்; ஹைக்கூ இவள் !

மூன்றடியில் ஏழுசொற்கள் கொண்டு திகழ்பவள்
ஆன்றோன் குறளினை ஒத்தவள்தான் - ஈன்றவுடன்
இன்புற்(று) உவக்கும்தாய் போலே மகிழ்வாரே
இன்றிவளைத் தீட்டும் பொழுது !


-விவேக்பாரதி
27.03.2015

Comments

Popular Posts