வாழி சக்தி வாழி சக்தி


வாழி சக்தி வாழி சக்தி 
   வாழி சக்தியே - என்று 
வாக்கு சொல்லும் வேளை சேரும் 
   வாழ்வில் முக்தியே! 

பாவம் செய்த பக்த ருக்குப்
   பாசங் காட்டுவாள் - இங்கு 
ஜீவன் செய்யும் குற்றந் தம்மைச்
   சீவி மாய்ப்பவள்! 
யாவ ருக்கும் அருள்கொ டுத்து
   யாண்டும் காப்பவள் - உயர்த் 
தேவி ஆதி சக்தி யென்னுந்
   தாயைப் போற்றுதும் !

வாழி சக்தி வாழி சக்தி 
   வாழி சக்தியே - என்று 
வாக்கு சொல்லும் வேளை சேரும் 
   வாழ்வில் முக்தியே! 

காற்று மாகிப் புனலு மாகிக்
   கவியு மாகுவாள் - நல்ல 
சேற்றில் பூக்கும் கமல மாகிச்
   சேலு மாகுவாள்! 
ஊற்றில் ஊறும் நீரு மாகி
   உயிர்கள் பேணுவாள் - விதியை 
மாற்றி உலகை ஆட்டும் சக்தி
   மாண்பைப் போற்றுதும்!!

வாழி சக்தி வாழி சக்தி 
   வாழி சக்தியே - என்று 
வாக்கு சொல்லும் வேளை சேரும் 
   வாழ்வில் முக்தியே!! 

-விவேக்பாரதி
28.06.2015

Comments

Popular Posts