ஒருநாள் காலையிலே

பச்சைச் சுடிதாரில் பால்நிலவு பள்ளிக்கு
இச்சைக் கனல்மூட்டிப் போகுதே - உச்சிமுதல்
பாதம் வரையாக மின்சாரம் பாயுதே
சேதமடைந் திட்ட(து) மனம்

மனதோடு காதல் கனைவிடுத்துப் பாவை
கனவெனவே இல்லாமல்போ கின்றான் - எனதுமனம்
ஆசைப் பிணியாலே வாடித் துடிக்குதுபார்
மாசைச் சுழலு முளம் !

உள்ளத்தில் காதலை வைத்துள்ளாள் பின்புகூட
கள்ளத் தனமாய் நடிக்கிறாள் - வெள்ளப்
பெருக்கிடை மாட்டிய புல்லென என்னை
வருந்துத வள்மௌனம் தான் !

தானே புயலேன்னில் ஆட்கொண்டு மின்னலாய்த்
தானே உருமாறி வெட்டுதே - மானேஉன்
காதல் இயம்படி என்றுநான் கெஞ்சியும்
ஏதும் பதில்லை பார் !

பார்வைக் கவளொரு பட்டுப்பூ வர்ணிக்க
வார்த்தைகள் தேடிக் கொணர்கிறேன் - ஏர்தழுவும்
மண்ணில் முளைத்திடும் நெல்லென நாணமும்
கண்ணிலே ஈர்ப்புங்கொண் டாள் !

ஈர்க்கும் மொழியுடை பாவை முன்சென்று
யார்க்குமே நானேழுதா பாவொன்று - கூர்விழியே
உன்றனுக்கு நான்சொன்னேன் என்றொரு நாள்சொன்னேன்
இன்னும்ப தில்வரவில் லை !வரவில்லை ஓர்நாள் அவளென்றால் நானோ
நரகவேத னைஉறுவேன் கேளீர் - கரமுந்தான்
ஒன்றும் எழுதாது தோலுணர்ச்சி இல்லாது
நின்றிடும் என்செய்வேன் பின் !

பின்பொருநாள் சற்றும் இதுபொறுக்க லாகாதேன்(று)
அன்புநிறைக் காதல் மனதோடு - முன்புசென்று
என்னதான் உன்முடிவோ ? சொல்லடி நீயென்றேன்
இன்னும்யோ சிக்கவில்லை யாம் !

யாமத்தில் எந்நாளும் என்கனவில் தோற்றமவள்
பூமணம்நு கர்ந்தாலும் என்னவளின் - கோமளக்கு
ழல்வாசம் ! சாலையில் தோன்றும் விளக்கொளிகள்
எல்லாம் இவளது கண் !

கண்ணோடு காசுமீ ரின்குளிரை வைத்தவள்தான்
மண்ணோடு வந்தாடிச் சேர்கின்ற - விண்துளிபோல்
தூயமனம் கொண்டவள்தான் பேச்சிலே செந்தமிழ்த்
தாயவள் ஆட்டமுறு வாள்!

வாளொத்த கூர்விழிகள் ! என்கவிக்கு ஏதுவாக
தாளொப்பப் பூத்திருக்கும் பூவிதழ்கள் - நாளொன்றில்
என்காதல் கேட்டிடவே காத்திருக்கும் நற்செவிகள்
பொன்னாளி டம்முளது கேள் !

கேட்டால் அவள்ஒற்றுக் கொள்ளாள் ! எனினும்
பூட்டால் தாழிடா உள்ளத்தில் - ஏட்டினிலே
என்பேரும் உள்ளதை நானறி வேனைய்யா
ஒன்றுசொலா(து) நின்றபோ தும் !

போதும் மௌனமடி காதலென்னும் காட்டாறை
மோதும் விதமாய் ஆணையிட்டால் - ஏதுமுனக்கு
நேர்ந்திடுமோ அஞ்சுகின்றேன் என்றே உரைத்தேன்நான்
வேர்விழியாள் விட்டுச்சென் றாள் !

சென்றாள் மறுபடியும் பேருந்து ஏறிடவே
என்றைக்கும் நான்நிற்கும் நல்லிடத்தில் - நின்றாளே
பேருந்தில் நானேற என்னைபார்த் துக்கையை
ஆருயிராள் நன்கசைத் தாள் !

தாளிலே ஒற்றைக் கவிதையை நானெழுதி
வேளெனக் கின்பத்தின் ராணியாம் - ஆளென்(று)
எனக்காக ஆகிநின்ற பூச்சரப் பெண்ணை
மனதாரப் பாடிநின் றேன் !

நின்றேன் ஒருநாள் அவளைநான் காண!கண்டும்
சென்றாள் ! எனையும் தருணமது - கொன்றதே !
பேரிடியும் நிஞ்சினைத் தாக்கியதே ! நாற்புறமும்
காரிருள் சூழ்ந்ததென் னை !

என்னையும் என்னுடைக் காதலைப் பற்றியும்
ஒன்றுமே நினையா திருப்பாளா ? - என்னதிது
என்னை அலையவைக் கும்செயலா சொல்லிடுவாய்
என்னினிய தாய்நில மே !

மேழியைப் பற்றி உழுதல்செய் யும்உழவன்
ஆழிபோல் ஆழ்ந்தமைதி கொள்வதுபோல் - வாழியவள்
எத்தனை நாளென்னை யும்அலைய வைத்தாலும்
பித்தன்நான் காத்திருப் பேன் !

பேனாவை மோகிக்கும் நற்கவிஞர் உங்களது
தேனான நேரத்தை நான்கொஞ்சம் - வீணாக்கி
விட்டதற்கு என்னைநீர் மன்னியுங்கள் ! என்தலையில்
குட்டாதீர் முற்றிற்று பா !

-விவேக்பாரதி
18.09.2014

Comments

Popular Posts