துன்முகி வருடப்பிறப்பு

புத்தம் புதியதாய்ப் பூத்ததே ஆண்டும்!
இத்திரு நாளில் இகமுறை மக்காள்
இன்பத் துறைக !  இயங்கிடும் வாழ்வில்
துன்ப மறுந்த துய்நிலை காண்க !
எல்லா வரமும் எழிலும் சூழ்க !
பொல்லா மனத்தின் பொய்மை யடக்கி
காலம் போற்றிக் கடுகிடும் வேளை
ஞாலத் தற்புதம் யாவையும் போற்றி
இயற்கை பேணி இன்னலைத் தந்திடும்
செயற்கை களைந்து ஜகமி தின்புற
மற்றை வுயிர்களை மனத்திலி ருத்தி
ஒற்றைத் தீங்கும் ஒருவர்க்கும் நேரா
நிலையில் வாழ்ந்து நியாயம் எய்தி
கலைகள் செய்து கவிதை துய்க்க !
துன்முகி யாமித் துளிரில்
இன்முகத் தோடே யிருந்திடு வோமே !

-விவேக்பாரதி
14.04.2016

Comments