கனவும் கொசுவும்

கண்ணெதிரே தோன்றினாள் காதற் கிளியொருத்தி
மண்மேலே சாய்ந்தேன் மறுநொடியில் - கண்விழித்துப்
பார்த்த பொழுதே உணர்ந்தேன் ! அவளென்னை
ஈர்த்த கனவே என !

எந்தன் கனவினிலே பாடி விளையாடிட
வந்தவள் ரம்பையோ மேனகையோ - செந்தமிழ்
அன்னை கொடுத்திட்ட மொத்த அணிகளும்
என்முனே வந்ததோ சொல் !

புற்களின் மேலே உறங்கியதால் ! என்னுடைய
கற்பனையில் தேனியொன்று மொய்த்ததோ - அற்புதமாய்க்
காதலின் தேனைச் சுரந்ததோ ! என்னிதழும்
ஆதலால் பூத்ததோ இங்கு ?

வானத்து மேகங்கள் வாசிக்கும் பாக்களைநான்
கானமென்று எண்ணிக் களித்திருந்தேன் - வானவில்லில்
தன்னுடை செய்தேதான் பொன்னுடல் மூடியவள்
என்கனவில் தோன்றிநின் றாள் !

பசுமை வெளியிடையே நானும் உறங்கத்
திசுக்களி லேயொரு மாற்றம் - கொசுவொன்று
கையில் கடித்திட அங்குநான் கண்விழித்தேன்
மெய்தான் கொசுக்கள் அழிவு !

-விவேக்பாரதி
14.01.2015

Comments

Popular Posts