வயசு வந்து போச்சு

வயசு வந்து போச்சு
வாயுந்தான் உளறல் ஆச்சு
உச்சி நரைச்சுப் போச்சு
உடம்பிலே பலம்போ யாச்சு !

தனிமையோடு அறிமுகம் ஆச்சு
ஆன்மிகம் துணையும் ஆச்சு
தூக்கமும் தொலைஞ்சே போச்சு
துக்கங்கள் கைவச மாச்சு !

குச்சிதான் உறுதுணை யாச்சு
குடும்பமும் எனை வெறுத்தாச்சு
நடுக்கங்கள் நிரந்தர மாச்சு
ஞாபகங்கள் மறந்து மாச்சு !

சிரிப்புதான் காணாம் போச்சு
சுருக்கங்கள் முகவரி யாச்சு
சோம்பல்தான் அடையாளம் ஆச்சு
சொந்தங்கள் அவஸ்தைகள் ஆச்சு !

வயசும் வந்து போச்சு
வாழ்வு இங்க பாரமாச்சு
இன்னுமேன் அமைதிக் கோலம்
சீக்கிரம் வாடா காலா !

-விவேக்பாரதி
03.08.2014

Comments

Popular Posts