புன்னகைப் பூமகள்

புன்னகைப் பூமகள் பூங்குழ லிற்புது
   புன்னிய காவியம் வாசிக்கி றேன் !
என்னவள் தந்திடு மின்பமெ லாமந்த
   ஏடுகள் நல்குமா ? யோசிக்கி றேன் !
மின்னலை யொத்தவள் கன்னங்க ளிற்சுதி
   மீட்டுமி சைகண்டு பூசிக்கி றேன் !
கன்னலி தழ்கொண்டு காயங்க ளாற்றிட
   கன்னியின் பொன்னிதழ் யாசிக்கி றேன் !

முத்துச்சி ரிப்பெழில் பெற்றும கிழ்ந்திட
   முன்னிலும் பின்னிலும் தத்துகி றேன்
பித்தனைப் போலவள் பிஞ்சுப்ப தத்தினை
   பின்னிப்பி டித்துநான் கத்துகி றேன் !
எத்தனை நல்லெழில் ஏந்துகின் றாளவள்
   எத்தனை யின்பங்கள் காட்டுகின் றாள்
வித்தக னென்னையும் வீழ்த்துகின் றாளவள்
   விந்தைகள் நெஞ்சினில் கூட்டுகின்றாள் !

வண்ணக்க ளஞ்சிய வார்ப்பனை யேயந்த
   வஞ்சிக ழுத்தினிற் சூடுகின் றாள் !
எண்ணத்தி லேநின்று பாடுகின் றாளவள்
   என்னுடன் சேர்ந்துற வாடுகின் றாள் !
விண்ணிற்றி ரிந்திடும் மீனினைப் போலொளி
   வீசிடு மன்னவள் கண்கள டீ !
வெண்ணில வுங்கர்வங் கொண்டிடு மேயவள்
   வெட்கத்திற் கேங்குவர் பெண்கள டீ !

-விவேக்பாரதி
04.04.2016

Comments

Popular Posts