வந்தது பிறை

தந்தன தனதன
தந்தன தனதன
தந்தன தனதன - தந்தானா

வந்தது பிறைஎனும்
சந்திரன் நமக்கருள்
தந்திட இறையவன் - வந்தானே !

தொந்தர விலையெனும்
நந்தலை எழிலுற
முந்திடத் துதித்தவன் - பால்சேர்வோம் !

வந்திடும் பிழையறுத்
துந்திடும் அருளினை
சந்தமுந் தழுவிடத் - தந்தானே

அந்தமில் மறையினை
தந்தநம் மிறையினைச்
சுந்தரத் தமிழினில் - போற்றோமோ ?

அல்லலும் மறைந்திடச்
சொல்லிலும் செயலிலும்
நல்லவை நிகழ்த்துக - வென்றோதி

இல்லெனும் பொருளினில்
நில்லென மொழிந்தவன்
தொல்லரும் பதமலர் - சூழ்ந்தேதான்

புல்லிலும் பணியிலும்
நல்லுறு வுடையவன்
சொல்லரும் நபிகளின் - தாள்சேர்வோம்

கொல்லுவம் துயரினைச்
சொல்லுவம் இறைமொழி
வெல்லுவம் தரணியி - லிஃதாலே !


-விவேக்பாரதி
17.07.2015

Comments

Popular Posts