தமிழ்த்தாய் திருத்தசாங்கம்பெயர் : 

செல்வச் சிறுகிள்ளாய் ! செந்தமிழ் நாடுகண்ட
செல்வத்தின் பேரினைச் செப்பிடுவாய் - தொல்கவிதை
மன்னித் திளைத்து மகிழும் அரசியின்பேர்
என்றன் இயற்றமிழ் என்று !

நாடு : 
 
எங்கள் தமிழன்னை ஏற்றிருக்கும் நாடெதுவோ ?
தங்கக் கிளியேநீ தா!பதிலை - இங்கவளும்
செந்தமிழர் எண்ணநாடு சேர்ந்திருக்கும் பொன்னெழிலைச்
சந்தமுற கூவியே சாற்று !

ஊர் : 
 
உயரப் பறக்கும் உயர்சாதிக் கிள்ளாய்
உயிராந் தமிழுக்கெ தூரோ - தயக்கமின்றி
நாங்கள் உரையாடும் நாவூர்தான் என்றியம்பாய்
மாங்காய் மரத்தில் மகிழ்ந்து !

ஆறு : 
 
குதித்தே அலையெழுப்பிக் குன்றாமல் ஓடும்
நதியா தெனிலோ நவில்வாய்க் - கொதிக்கின்ற
எந்தமிழர்க் கண்பாயும் ஏற்றக் குருதியது
செந்தமிழின் ஆறெனச் செப்பு !

மலை : 

ஓங்கி உலகளந்து ஒய்யார மாய்நிற்கும்
வீங்குமலை யாதோ விரித்துரைப்பாய் - பைங்கிளியே !
எம்மார் தவழும் எழில்களப மேடுகளே
செம்மொழி யின்மலை செப்பு !

ஊர்தி : 

விண்ணளந்து ஓரணுவை விண்டுயிர்க்கு மென்டமிழ்க்கு
மண்ணிதிலே ஊர்தியெது மாங்கிளியே ! - பண்ணமைக்கும்
பாவலர் ஊன்றிப் படைத்தெழுதுங் கோலென்றே
ஆவலுடன் சொல்லாய் அலர்ந்து !

படை : 

அற்புதச் செந்தமிழ் ஆக்கி யமைத்திட்ட
நற்படை யாது நவிலுவாய் - சொற்பொழி
வாற்றிடும் ஓர்படை வாரிக் கவிசெய்து
ஏற்றிடும் ஓர்படை என்று !

முரசு : 


இன்பத் தமிழின் இயல்முரசு யாதோஎன்
சின்னக் கிளீ!பதிலைச் சிந்திடுவாய் - இன்றுல(கு)
ஓடும் இணையமெனும் ஓங்கும் முரசென்றுப்
பாடிப் பதிலைப் பகர் !

மாலை : 

பச்சைக் கிளியே ! படர்டமிழ் மேல்தரித்த
இச்சைமிகு மாலை இயம்புவாய் - முச்சங்கப்
புண்ணியர்கள் யாத்த புதுநூற்கள் தாரென்று
பண்ணிலே சாற்று பதில் !

கொடி : 

செக்கச் சிவந்த சிறுஅலகே ! செந்தமிழின்
பக்கக் கொடியைப் பகருவாய் - மக்களாம்
எம்மோ டவள்கொண்ட ஏற்றதொப் புள்கொடியே
அம்மாளின் செங்கொடி ஆம் !

(படம் : அடியேன் வரைந்த தமிழ்த் தாய்....!)

-விவேக்பாரதி
01.09.2015

Comments

Popular Posts