உழவைத் துதி

ஏர்தொட்டு மண்ணில் கவிதை வனைகின்ற
சீர்மிகு நற்செயல் செய்யடா - பார்செழிக்க
வேளாண்மை செய்வாய் நமதுதொழில் இஃதைநீ
நாளா கமறத்தல் இழிவு

நீராட்டி அன்னை உனைவளர்த்த தைப்போலே
பாராட்டி நீயும் பயிர்வளர்ப்பாய் - காராடி
மண்ணில் விழுகின்ற நீர்த்துளியும் வானமுதம்
எண்ணத்தில் நீவை இதை !

இயற்கை உரத்தால் பயிர்செய்வாய் ! நன்மை
பயக்கும் இதையும்நீ செய்தால் - செயற்கை
உரத்தால் நிலத்தாய் பிணியுறுவாள் ! வேண்டாம் !
கரத்தில் கலப்பை எடு !

மடைகள் திறப்பது வேண்டும் ! மிகுந்தால்
அடைப்பதும் முக்கியம் பாராய் - எடையதற்கு
ஏற்ற விலையும் அரசு வழங்குமே !
போற்றி உழவைத் துதி !

நாளை விவசாயம் எந்திரத்தா லாயினும்
காளை பசுவெலாம் நம்தெய்வம் - தாளைப்
பிடித்தும் தொழுதல் அழகு ! அதையும்
அடித்தல் மிகவும் பிழை !

கதிரறுக்க ஏற்ற காலம் வினவின்
பதிலாக நானுரைப்பேன் தைதான் - அதியழகாய்
நெல்மணிகள் பூத்திருக்கும் மண்பார்த்துக் காத்திருக்கும்
செல்!அறுக்க நீயும் விரை !

-விவேக்பாரதி
07.06.2015

Comments

Popular Posts