மகளிர் தின வாழ்த்து

பெண்மை உயர்கவென பாக்கள் புனைகிறேன்
எண்ணத்தைச் சக்தியே ஏற்று !

மகளிரே உங்கள் மீது
   மட்டற்ற மதிப்புள் ளொன்யான்
ஜகத்திலே நீரில் லாது
   சக்கரங்கள் ஓடா தென்பேன்
அகத்தினில் ஆக்கம் வைத்தீர்
   அன்பினை நெஞ்சுள் வைத்தீர்
மகிழ்ச்சியும் துன்பம் தனையும்
   மனதுவந்து ஏற்பீர் நன்றாய் !

இல்லறம் இனிக்கும் வண்ணம்
   ஈடிலா செயல்கள் செய்வீர்
நல்லுயிர் ஒன்றைப் பெற்று
   நலிவிலா துயரச் செய்வீர்
சொல்லரும் மொழிகள் பேசி
   சோகத்தை விரட்ட வல்லீர்
கல்லையும் கற்பின் உயர்வால்
   கரைத்திடும் திண்மை உள்ளீர் !

உங்கள் மேன்மையே ஊருடை மென்மையென்
றெங்கள் பாவலர் ஏற்றிய பாவெனும்
சங்கக் கவிதையின் சந்தமு ரைத்திட
பொங்கு மின்பமும் பொங்குமே நல்லறம் !

மேக மாகிநீர் மேன்மையைக் காட்டியே
சோகம் நீக்குவீர் சொந்தமு மாக்குவீர்
யாகம் செய்திடா யாருமே பெற்றிடும்
போக வரங்களே பொய்மைகள் போக்குவீர் !

ஆர்கலி தாண்டியே பெண்களும் செல்லுதல் ஆகாதென்(று)
ஓர்மொழி தன்னைப் பிழையென் றாக்கி உயர்தேதான்
பார்முழு துங்கடந் தாண்டு பலநற் பணிபுரிந்தே
ஊர்புகழ் வண்ணம் உழைத்தீர் ! மகளிரும் உன்னதமே !


-விவேக்பாரதி
08.03.2015

Comments

Popular Posts