பெருமூச்சு

காலை முதல் மாலை வரை
காலினிலே சக்கரங் கட்டி
வேலை செய்து முடித்து விட்டு
வெந்நீரில் குளியல் போட்டு
சேலைவிட்டு நைட்டிக்கு மாறும்
குடும்பத் தலைவியவள் மூச்சினிலே
மாலையாய் நான் இருப்பேன்
பெருமூச்சாம் என் பேரு !

ஓட ஓட துரத்தி வரும்
ஓட்டம் மிகுந்த உலகத்திலே
தேட வந்த பொருட்க ளெல்லாம்
தேவைக்கு அதிகமாய் கிடைத்திடவே
நாடனென்ன ஊரன் என்ன
அனைவரின் பூ முகத்திலும்
கூட நின்று சிரித்துடுவேன்
மூக்குதான் என் ஊரு !

கேவிக் கேவி அழுதுவிட்டால்
கேட்டபொருள் கிடைக்கு மென்று
கூவிக் கூவி குழந்தையுமே
கும்மி யடித்து அழுகையிலே
பாவி யப்பான் கேட்டதெல்லாம்
பார்த்து வாங்கிக் கொடுக்கையிலே
தாவி அழுத குழந்தையுடன்
தாளம் போட்டு ஆடிடுவேன்
நீவிர் நினைத்த மாதிரி தான்
அதிர்ச்சி யில்தான் என் உணர்ச்சி !

காதல் செய்தி தன்னையுமே
காத்த அப்பன் காதில் சொல்ல
மோதல் ஒன்று வந்திடுமோ ?
மொத்த உயிர் மாய்ந்திடுமோ ?
பாதகம்தான் ஏற்படுமோ ? என்றஞ்சி
பாவை யொருத்தி நின்றிடவே
சாதகமாய் தந்தை பேசி
சம்மதம்தான் என்று சொல்ல
காதல் மகள் முகத்தினிலே
காதலோடு என் புணர்ச்சி !

இன்னும் இன்னும் ஏராளம்
உலகில் நானோ வேதாளம்
எண்ணும் திசை தன்னிலெல்லாம்
சென்று குலவி ஆடிடுவேன்
என்னைப் போன்று இவ்விடத்தில்
திருப்தி யடைந்தோர் உண்டாமோ ?
உண்டெனில் என்னிடம் காட்டுங்கள்
உண்மையை உணர்ந்து கொள்ளுங்கள் !

விவேக்பாரதி
24.05.2014

Comments

Popular Posts