முதல் கவிதை

பெண்ணுக்குத் தலைச்சம் பிள்ளை
   பேதைக்குப் பேசும் பேச்சு
மண்ணுக்கு முதல்வி ளைச்சல்
   மனத்துக்குக் காதல் பாய்ச்சல்
புண்ணுக்கும் உடன்ம ருந்து
   பூனைக்குப் பால்வி ருந்து
எண்ணுக்குச் சைபர் ஒன்றென்
   றெல்லாமே முதலாம் கவிதை !

பள்ளியிலே புகழும் ஆசான்
   பளிங்குரைகள் முதலாம் கவிதை
துள்ளுகின்ற பருவம் ஈனும்
   துணிச்சலது முதலாம் கவிதை
கொள்ளைஎழில் கூடும் வயதில்
   கொஞ்சுகின்ற காதல் வந்துக்
கள்ளமுதம் ஊற்றப் பெண்ணின்
   கடைப்பார்வை முதலாம் கவிதை !

கல்யாண மான வர்க்குக்
   கட்டிலின்பம் முதலாம் கவிதை
வில்லாளன் ஆரம் பத்தில்
   வீசுகணை முதலாம் கவிதை
நில்லாத வாறு நித்தம்
   நிலையாக ஓடும் வாழ்க்கை
சொல்கின்ற அனுப வங்கள்
   சொலிக்கின்ற முதலாம் கவிதை

சிலகவிதை விகட மாகும்
    சிலகவிதை மதுர மாகும்
சிலகவிதை இரங்கல் பாவாய்
   சிடுசிடுத்து மனதில் வேகும்
பலகவிதை இருந்த போதும்
   படைக்கின்ற இறைவன் ஈனும்
நலமொன்றே எந்த நாளும்
   நமதுமுதற் கவிதை யாமே !

-விவேக்பாரதி
18.09.2015

Comments

Popular Posts