தமிழுக்கே அமுதென்று பேர்

தமிழுக்கே அமுதென்று பேர் - அந்தத்
   தமிழ்வெற்று  மொழியல்ல தமிழர்க்கு வேர்
தமிழுக்கே அழகென்று பேர் - இந்தத்
   தரணியில் எம்மொழி ? தமிழுக்கு நேர்
தமிழுக்கே இசையென்று பேர் - எங்கள்
   தமிழுக்குப் புதிதாயோர் விசையுண்டு பார் !
தமிழுக்கே மதுவென்று பேர் - இன்று
   தமிழர்தம் நாவினில் தமிழ்மீது சேர் !

தமிழெங்கள் உயர்வுக்கு வான் - அந்தத்
   தமிழுக்கு தலைமீது ஆங்கிலப் பேன்
தமிழெங்கள் உயிருக்கும் ஊன் - பின்புத்
   தமிழ்மீது வேறுமொழி திணிப்பதும் ஏன் ?
தமிழெங்கள் அசதிக்குத் தேன் - எங்கள்
   தமிழ்ச்சொற்கள் எல்லாமே எழில்கொஞ்சும் மீன்
தமிழெங்கள் எண்ணத்தின் மான் - சங்கத்
   தமிழின்று தமிழரிடை கார்சூழ்ந்த கான் !

தமிழெங்கள் புலவர்க்கு வேல் - அந்தத்
   தமிழெங்கள் கவிஞர்க்கு வயிரத்தின் வாள்
தமிழெங்கள் உணர்வுக்கு பால் - அன்று
   தமிழெங்கள் தமிழர்க்கு ஆழத்தின் கால்
தமிழெங்கள் வலிமைக்குத் தோள் - அந்தத்
   தமிழின்று தமிழர்க்கு பயம்செய்யும் தேள்
தமிழென்று நலமெய்து வாள் - சக்தி
   தாய்நின்றன் காதிலென் விண்ணப்பம் கேள் !

-விவேக்பாரதி
17.03.2015

Comments

Popular Posts