இப்படிக் காதலிப்போம்

உனக்கு நானடிமை இல்லை – என்
   உயரம் நீயென்ப துண்மை – அடி
எனக்கு நீயடிமை இல்லை – உனக்
   கேற்றம் நானென்ப துண்மை! – இனி
மனத்தில் அரசாளும் காதல் – வெறும்
   மோக அரசாட்சி இல்லை! – எனில்
தினமும் சல்லாபம் உண்டு – அது
   தீர சந்தோஷம் உண்டு!

ஊடல் இனிக்கின்ற ஒன்று – அதில்
   உவகை பயிராவ துண்டு – தினக்
கூடல் புளிப்பதுவும் உண்டு – இதைக்
   குணமாய் நாமுணர வேண்டும்! – உயிர்
பாடல் நம்பொழுது போக்கு – அதில்
   பரவும் களிகாதல் சொத்து! – இனி
ஆடல் கொள்ளும்நம் நெஞ்சம் – இது
   ஆர்க்கும் கிடைக்காத மஞ்சம்!  

காதல் செய்வதுவும் வேண்டும் – பிற
   கடமை செய்வதுவும் வேண்டும்! – வெறும்
காதல் மாத்திரமே செய்து – நமைக்
   கட்டுள் ஆழ்த்தாது வாழ்வோம்! – நம்
காதல் முகில்வார்க்கும் தண்ணீர் – அது
   காலம் பார்க்காமல் ஊற்றும் – நம்
காதல் தாய்சொல்லும் போற்றி – அது 
   கருதும் பொருளின்றி ஏற்றும்!

வா!நாம் இப்படிக் காதலிப்போம்!நம்
வாழ்வை இப்படி வடிவமைப்போம்!

-விவேக்பாரதி
11.01.2015

Comments

Popular Posts