மலைவீழ் அருவி

மலைவீழ் அருவியில் மாலைநே ரம்நான்
தலைநீட்டித் தாகம் தணித்தேன் - நிலைமறக்கச்
செய்யும் விதமாய்ச் செழுமிசை கேட்டதே
அய்யோ மிகவும் அழகு !

அழகில் உணர்ந்தேன் இசைவந்த பாதை
அழகாய் இருகுயில்கள் அங்கே - பழகியது
கண்டேன் ! கவிதைகள் கற்பனையில் தான்பெருக்கிப்
பண்ணில் விவரித்தேன் பாங்கு !

பாங்காய்க் குயில்கள் பழகின ! அங்குறைந்த
மாங்காய் மரத்தின் மடியினில் - தாங்கியதோர்
காக்கையின் கூட்டில் கவிதைகள் கொஞ்சினவே
யாக்கைச் சிலிர்ப்புகண்டேன் யான் !

'யானே அரசன் யவரென்னைத் தாக்கிடுவார்
மானே மரத்தில் மயங்கிடுவோம் - வானே
அரங்கமெனச் சுற்றுவ'மென்(று) ஆண்குயில் சொல்லிச்
சுரந்ததே கூவும் சுரம் !

சுரந்த சுரத்தின் சுருதியைக் கெட்டப்
பரந்த மனதுடைப் பெண்ணும் - தரமாகத்
தன்னாசை சொல்வதுபோல் தானுவந்து கூவியதே
என்னே அதனின் எழில் !

எழில்மாலை நேரம் எனைவிட்(டு) அகலப்
பொழிலும் கருமைநிறம் பூண - அழிவில்லாக்
காதலின் காட்சிமட்டும் கண்ணில் தெரிந்ததே
நூதனக் காந்தி நுகர் !

நுகர்ந்த ஒளியது நூதனமாய் அங்கே
மிகவும் அழகாக மின்ன - அகத்தினில்
அந்தஒளி என்னென்(று) அறிந்திட ஆர்வமும்
வந்ததே கேள்வி வசம் !

வசமாய் இருகுயில் வானத்தைப் பார்த்து
நிசமான அன்பில் நிலைக்க - எசமானர்
கல்லாப் பேழையை காண்பதுபோல் கண்டேனே
எல்லாம் வியப்பே எனக்கு !

எனக்கு வியப்பெல்லாம் என்னவென்றால் பூக்கள்
மணக்கும் மரத்தில்லக் கூட்டில் - கணக்கின்ற
மண்ணுருண் டையில் மடங்கி இருந்தது
வண்ணம் மினுமினுக்கும் வண்டு !

-விவேக்பாரதி
15.03.2015

Comments

Popular Posts