அவளுக்குப் பள்ளி எழுச்சி

கணிதவியல் ஆசிரியர் சென்று விட்டார்
   காய்ச்சலென்று பொய்சொல்லித் தூங்கும் கண்ணே
வணிகவியல் ஆசானும் வருவ தன்முன்
   வளமைதமிழ் பாக்களினால் எழுப்பு கின்றேன்
மணியடிக்கும் நேரமட்டும் உறங்க லாமோ
   மயிலிறகால் உன்கழுத்தை வருடு கின்றேன்
அணிபூட்டாப் பேரழகே தூக்கம் விட்டு
   அம்மாடி திருப்பள்ளி எழுந்தரு ளாயே !

உனைக்காண கரும்பலகை காத்தி ருக்கு
   ஊதாவில் நனைத்தகோலும் பூத்தி ருக்கு
பனையளவு உயரமுள்ள விசிறி எல்லாம்
   பனிமலர்உன் விழிகான தவங்கி டக்கு
எனைமீறி எழுத்துக்கள் எட்டிப் பார்த்தே
   எழில்மிகுஉன் வடிவத்தைக் காணு தற்கு
கனைத்தபடி குதிரைஎனக் கிளம்பு கிறதே
   கார்குழலே திருப்பள்ளி எழுந்தரு ளாயே !

-விவேக்பாரதி
19.12.2014

Comments

Popular Posts