நற்றிருச்சிராப்பள்ளி

மலைகோட்டை கணபதியும் மகிழ்ந்துரைந்து நன்றாய்
   மாபெரும்நற் கோயிலுடன் வீற்றிருக்கக், கீழே
அலைஅலையாய்க் காவேரி அழகெனவே ஓடி
   அரும்புகளை விரும்பிநிதம் மலர்த்திவிடச், சோழன்
தலைநகராய்க் கொண்டநகர் தஞ்சையதற் கருகில்
   தலைமுறைகள் பலகண்டு தரணியிது போற்றக்
கலைவளர்த்துக் கட்டிடமும் மிகவளர்த்து நிற்கும்
   நற்றிருச்சி ராப்பள்ளி ஊரெங்கள் ஊரே !

தாயுமான சாமியவன் அருளதைனைச் சாற்ற
   தண்ணீருக் கணைகண்ட கல்லணையைப் போற்ற
நேயமுடன் ஆனைக்கா ஈசன்புகழ் ஓங்க
   நேரிழையார் குடத்தினிலே காவிரிநீர் தாங்க
மாயனவன் மஞ்சத்தில் நற்றுயிலும் கொள்ள
   மாபெரிய சீவிராமன் உருவெடுத்து வந்தே
தூயபெரும் அறிவியலின் சாரத்தைக் கற்ற
   நற்றிருச்சி ராப்பள்ளி ஊரெங்கள் ஊரே

தமிழகத்து இராஜாஜி உப்புக்காய் அன்று
   தானுவந்து ஊர்கோலம் தொடங்கியவூர் ! கம்பன்
அமிழ்தமென அவன்காதை ராமாயணம் தன்னை
   அரங்கேற்றம் செய்தளித்த அழகியவூர் ! பாட்டால்
தமிழ்நாட்டை அளந்திட்ட ரெங்கராஜ நம்பி
   வாலியெனப் பேர்கொண்டு வெளிவந்த ஊராம்
தமிழ்நாட்டின் மத்தியிலே திலகமெனத் திகழும்
   நற்றிருச்சி ராப்பள்ளி ஊரெங்கள் ஊரே !

வடிவத்தில் கோபுரத்தை அழகாகக் கொண்டு
   வளர்ந்தோங்கி நிற்கின்ற விமானத்தின் நிலையம்
கொடியிடையர் பலர்கூடும் காவிரியின் பாலம்
   கொஞ்சுகின்ற காதலர்க்கு இப்ரஹீம் பூங்கா
விடியலிலே பொன்னிறத்தை மேவுகின்ற ரங்கம்
   விறுவிறுவென் றெப்போதும் விளங்குரயில் நிலையம்
செடிமரங்கள் மன்னும்மன் னார்புரத்தைக் கொண்ட
   நற்றிருச்சி ராப்பள்ளி ஊரெங்கள் ஊரே !

-விவேக்பாரதி
14.03.2015

Comments

Popular Posts