திருக்கழல் துதி

பொன்னாள் பராசக்தி பூங்கழல் வாழ்க
என்னுள் நின்றவள் எழில்கழல் வாழ்க
மின்னும் பவளமாய் மிளிர்கழல் வாழ்க
என்றும் நன்மையே தரும்கழல் வாழ்க (4)

உயிராய் உறையும் உமைகழல் வாழ்க
தயிராய்க் குளிரும் தாய்கழல் வாழ்க
மயிலாள் சக்தி மலர்கழல் வாழ்க
கயிலை அரசியின் கனிகழல் வாழ்க (8)

விண்ணை அளந்த விசைகழல் வாழ்க
மண்ணில் மலர்ந்த மலைகழல் வாழ்க
கண்ணாயி ரங்கொண்டாள் கலைகழல் வாழ்க
உண்மை உடலானாள் உயர்கழல் வாழ்க (12)

மங்களத் தரசியின் மறைகழல் வாழ்க
எங்களூர் முத்துமாரி இசைகழல் வாழ்க
திங்கள் முகத்தாளின் திரள்கழல் வாழ்க
தங்கத் தாயவளின் தளிர்கழல் வாழ்க (16)

கார்குழல் அன்னை கவிகழல் வாழ்க
பார்மிசை காப்பாள் பணிகழல் வாழ்க
தேர்மீது பவனிவரும் தேன்கழல் வாழ்க
ஆர்கலி தாங்கும் அலர்கழல் வாழ்க (20)

செந்தமிழ் நாயகிச் செங்கழல் வாழ்க
சுந்தர வல்லியின் சுகக்கழல் வாழ்க
கந்தனி னன்னை கனைகழல் வாழ்க
சிந்தையில் நிற்பாள் சிலைகழல் வாழ்க (24)

முத்து மாரியின் முனைகழல் வாழ்க
சத்துண வாவாள் சகிகழல் வாழ்க
ரத்தின மணிந்தாள் ரதிகழல் வாழ்க
சத்திய வடிவானாள் சரிகழல் வாழ்க (28)

தேசம் தனைக்காக்கும் தேர்கழல் வாழ்க
பாச வினைஅறுப்பாள் பாற்கழல் வாழ்க
நேசமருள் விப்பாள் நேர்மைக்கழல் வாழ்க
வாசப் பூங்குழலாள் வகைகழல் வாழ்க (32)

சூரத் தாயவளின் சுனைகழல் வாழ்க
வீரனை ஈன்றாளாம் வினைகழல் வாழ்க
ஆரம் அணிந்துவரும் ஆள்கழல் வாழ்க
நேரம் காலம்செய் நேர்கழல் வாழ்க (36)

உலகத்தை ஆண்டுநிற்கும் உயிர்கழல் வாழ்க
இலகுக் கவித்தலைவி இனைகழல் வாழ்க
நிலவில் ஆட்டமுறும் நிகர்கழல் வாழ்க
மலர்நறுங் குழலாள் மதிகழல் வாழ்க (40)

வானத்தி லேவசிக்கும் வரைகழல் வாழ்க
மோனத் திருகின்ற மொய்கழல் வாழ்க
காணக் குயிலவளின் கார்கழல் வாழ்க
தேனகத் தில்வைத்த தேன்கழல் வாழ்க (44)

மெல்லிடை ஏந்திய மென்கழல் வாழ்க
நல்லுடை பூண்ட நற்கழல் வாழ்க
சொல்லினி தாய்ப்பேசும் சொற்கழல் வாழ்க
நெல்லிடை வாழ்வாள் நெளிகழல் வாழ்க (48) 

-விவேக்பாரதி
21.06.2014

Comments

Popular Posts