கோடை மழை

கொட்டித் தீர்க்குது கோரமழை - பலே
   கொட்ட மடிக்குது கோபஇடி - அட
வெட்டித் தெறிக்குது மின்னலொளி - முகில்
   சுற்றி வளைக்குது அக்கினியை !

எட்டிப் பார்க்கவும் இயலாது - பகல்
   ஏந்திழை அந்தோ மறைகின்றாள் - எழில்
குட்டிக் கரணம் போட்டபடி - உளே
   குளிர்ந்த காற்றும் நிறைகின்றாள் !

வெய்யோன் உண்டு வேனிலிலை - வரும்
   வேகக் காற்றில் வேப்பமிலை - இரு
கையும் விசிறிகள் தேடவிலை - மின்
   காற்றும் அறையுள் ஓடவில்லை !

அக்கினி வெயிலும் என்னாச்சு ? - அது
   அடைமழை யாலே நின்னாச்சு - இருள்
பக்க மனைத்திலும் சூழ்ந்தாச்சு - கிளைப்
   பறவைகள் துயிலில் ஆழ்ந்தாச்சு !

சூட்டில் வியர்த்தது பின்னோடிக் - குளுங்
   காற்றில் வியர்குது மேனியடா ! - மழைக்
காட்டில் உறைந்திடும் ஊர்போலே - சுடும்
   கந்தக பூமியு மானதடா !

அடஅட அடைமழை பெய்கிறதே - மனம்
   ஆனந் தத்தில் உய்கிறதே - உடன்
கடகட கடவென மண்வாசம் - நிறைந்
   தாடுது என்றன் பண்வாசம் !

திக்குகள் எட்டிலும் மேகங்களாய் - பல
   தவளைச் சத்தமும் ராகங்களாய் - புவி
மக்களும் மண்ணில் மகிழ்ந்திடவே - துளி
   முகிலதை விட்டு முகிழ்கிறதே !

கவிதை : https://soundcloud.com/vivekbharathi/audio3

-விவேக்பாரதி
16.05.2015

Popular Posts