தீபஒளி = தீவாளி

ஆகட்டும் ஆகட்டும் வெடிகளை வெடியுங்கள்
நோகட்டும் பூமித்தாய் நமக்கென்ன கவலை
வேகட்டும் அவள்மேனி மாசாலும் தூசாலும்
சாகட்டும் தூய்மைதான் என்றும்போல் இன்றுமே !

காசுக்கு வெடிவாங்கி கரியாக்கும் இச்செயலோ
மாசுக்கு நாம்விரிக்கும் சிவப்புநிறக் கம்பளம்போல்
நாசுக்காய் மதங்களையும் காரணமாய் காட்டிதான்
தூசுக்கு இடமாக நம்வீட்டைச் செய்வோமோ ?

எந்தவேதம் சொல்லியதோ? பூமித்தாய் வருந்தபிணி
தந்திடும் இந்தசெயல் சட்டத்தில் உள்ளதுவோ ?
சொந்தபுத்தி இல்லையென்றால் சொல்புத்தி உள்ளதன்றோ
எந்தன்சொல் கேட்டிடுவீர் விட்டொழிப்பீர் வெடிகளையே !

வெடியில்லா தீபாவளி கொண்டாடி மகிழ்ந்தாலே
குடிமுழுகிப் போயிடுமோ குற்றந்தான் ஏற்படுமோ
இடியோசை கேட்டாலே அலறுகின்ற பிள்ளைபோல்
மிடிமைக்கு ஆளாக நம்தாயைப் பணிப்போமோ ?

இத்தனைநாள் தேவையினால் வாகனப் புகையாலே
எத்தனையோ கொடுமைகளை அவளுக்குக் கொடுத்தாலும்
சத்தமொன்றும் போடாது இருந்தநம் பூமித்தாய்
சத்தியத்தின் மறுவுருவம் சந்தேகம் உள்ளதுவோ ?

என்சொல்லைக் கேளீரே வெடிகள் வேண்டாம்
இன்னல்தரும் அதைத்துறந்து தீபாவளி நாளையும்
முன்னாளில் செய்ததுபோல் தீபஒளித் திருநாளாய்
நன்றாகக் கொண்டாடி மகிழ்ந்திட வாழ்த்துக்களே !

-விவேக்பாரதி
19.10.2014

Comments

Popular Posts