பொங்கல் தினம்

ஆடியினைப் பார்த்தேயாம் விதைவி தைத்தோம்
   அன்போடும் பண்போடும் பிள்ளை போலே
கூடிவந்த நெல்மணிகள் யாவுங் காத்தோம்
   குடும்பம்போல் யாமானோம் வளர்ந்த நெல்லோ
வாடியயெம் பசிதீர்க்க வாய்த்த சேயாம்
   வந்ததொரு வாரீசாம் ! வளர்த்த பெண்ணைச்
சூடித்தான் கொடுத்திடவே தைமா தத்தில்
   சூக்குமமாய்ப் பொங்கலிட்டோம் வாங்க மக்கா !

செங்கரும்பு முறைமாமன் இருவர் சூழ்ந்து
   செழுமைமிகு மஞ்சளினால் பரிசம் போட்டு
மங்கையென நாணமுடன் வளைந்தி ருந்த
   மகளுக்குச் சடங்கிட்டு மகிழ்ச்சி யோடு
பொங்கிவரும் புதுப்பாவை நெல்ம ணிக்கு
   போக்கிடமும் வேறுளதென் றுணரச் செய்தே
அங்கவளை யாம்மெச்சிக் கொஞ்சி யேதான்
   அறிவுரைகள் சொல்லிநின்றோம் அவளும் கேட்டாள் !

சின்னதொரு நாற்றெனவே உன்னை நட்டோம்
   சீறுகின்ற வேங்கையென அந்த நேரம்
கன்னலேநீ யாருக்கும் வளைந்தி டாது
   கருத்தைப்போல் ஆடிவந்தாய் அசைந்து வந்தாய் !
பின்பொருநாள் திடீரெனநீ வளர்ந்து விட்டாய்
   பிறைபோலே குணிந்துவிட்டாய் அதனால் பெண்ணே
உன்னையிங்கு வளர்த்தவனாய் உனக்குக் கொஞ்சம்
   உரைகளைநான் மொழிகின்றேன் நன்றாய்க் கேட்பாய் !

இதுகாறும் நீயிருந்த வயலோ இங்கே
   இனிமையுடன் நீபிறந்த வீடே காண்க !
பதுமையென நீயிங்கே விளைந்த தாலே
   பக்குவமாய் யாம்பார்த்தே யினியு னக்கு
புதிதாயோர் வீட்டினையும் காட்டி வைப்போம்
   புகுகின்ற அவ்வீட்டில் பிறந்த வீட்டின்
மதிப்பினையும் மரியாதை தனையும் நாட்டி
   மானமுடன் வாழ்ந்துவிட வேண்டு மம்மா !

புகுகின்ற அவ்வீட்டில் உன்னை நாங்கள்
   புதுக்கிடவே நாள்பார்த்துக் கிழமை பார்த்து
தகுதிமிகு தையைத்தான் தேர்ந்தெ டுத்தோம்
   தாரணியே அந்நாளில் கொண்டாட் டத்தில்
மிகுந்திருக்கும் மூழ்கியிங்கே திளைத்தி ருக்கும்
   மிளிர்வுடனே உனையுலகம் அன்று போற்றும்
வகைவகையாய் உனைப்பெற்றே அடுக்கி வைத்து
---வளமைகளைக் கண்டிடுவார் மகிழ்வைக் கொள்வார் !

காளைகளை அடக்கிடுவர் காளை யர்கள்
   கைவளைகள் குலுக்கிடுவார் கன்னி யர்கள்
வேளையெலாம் கந்தலையே கண்ட மேனி
   வேட்டியுடன் புத்தாடை அணிந்து நிற்கும்
சூளையிலே புதிதாகப் பசுமை யாக
   சுட்டெடுத்த பானையிலே உன்னை யிட்டு
வாளையர்கள் குலவையிடப் பொங்கும் உன்னை
   வாழ்த்திடுவார் பெண்மகளே ! இன்ப மன்றோ ?

பொங்கலெனும் புதுநாளாம் அந்த நாளில்
   பொங்குகின்ற உன்னையுமே பரிதி முன்னே
மங்களமாய்ப் படையலிட்டு கைகள் கூப்பி
   மகளிரெலாம் ஆர்த்திடவே தமிழர் தம்மின்
தங்கதிரு நாளென்று கொள்ளு வாரே
   தமிழ்மக்கள் பொங்கலெனும் நாளைத் தங்கள்
இங்கிதமும் வீரமுடை ஈர மஃதும்
   இயம்பிடவே கொண்டாடி மகிழு வாரே !

-விவேக்பாரதி
15.01.2016

Comments

Popular Posts