அன்னை நான்மணி மாலை

வெண்பா

செல்லோடு செல்லாக உன்னோடு சேர்ந்தஎனை
மெல்ல வளர்த்துக் கருவாக்கி - நல்லுலகில்
எல்லோரும் போற்றிடவே ஈன்றாய் உனக்கே
சொல்கொண்டு நானுரைப்பேன் வாழ்த்து

அகவல்

வாழ்த்த வயதில்லை என்றாலும் என்சிரம்
தாழ்த்தி வணங்கிட் டேன்என் தாயே
என்னை காத்தே என்னுயர்வு பார்த்தே
உன்னை மறந்தாய் நல்லாளே தாயே
கண்ணிமை போலென்னைக் கவனித் தாயே
உண்மை உலகினையும் உணர்வித் தாயே
உன்புகழ் எங்கும் ஓங்க
பொன்போல் வடிக்கிறேன் ஒருபூங் கவிதையே

அறுசீர் விருத்தம்

கவிதையே உனக்கு நானும்
   கவியொன்று வடிக்கச் செய்தேன்
கவிதையில் பிழைகண் டாலோ
   கருத்திலே பிழைஎன் றாலோ
தவித்துப்போ வாய்நீ என்றே
   நானுமிதை வாசிக் கின்றேன்
செவிகொடுத்துக் கேளாய் தாயே
   நீதானிங்கு உண்மை தெய்வம்

எண்சீர் விருத்தம்

தெய்வத்தால் வரமுடியாக் காரணத் தால்தான்
   தாயவளை அவனுமிங்கே படைத்து வைத்தான்
மெய்வருத்தி உன்அன்பால் என்னைக் காத்தாய்
   மேன்மைநான் அடையவேநீ செயலும் பட்டாய்
துய்யநிலை கொண்டவள்நீ உன்னைப் பாட
   தூயதமிழ் பாக்களைநான் நாடி நின்றேன்
பொய்யதனைப் போக்கிஎன்றும் ஒளிதந் தாயே
   புகழ்வதற்கோர் வார்த்தையில்லை என்ன செய்ய !

-விவேக்பாரதி
11.05.2014

Comments

Popular Posts